தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 51 ஆண்டுகள் (1973 டிசம்பர் 24) ஓடி விட்டன. ஆனாலும் அவர் என்றென்றும் எப்பொழுதும் கொள்கையால், முற்போக்குச் சிந்தனைகளால் மனித நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டும், ஒளி உமிழ்ந்து கொண்டும் தானே இருக்கிறார்.
இந்த நிலையில் அய்யாவை மறந்தால்தானே நினைப்பதற்கு?
ஒவ்வொரு பிரச்சினையிலும், இதில் தந்தை பெரியாரின் நிலைப்பாடு என்ன? கருத்து என்ன? என்ற சிந்தனை ஏற்படத் தானே செய்கிறது.
தமிழ்நாடு அளவுக்குப் பேசப்பட்ட தந்தை பெரியார் இப்பொழுது உலகளவில் பேசப்படும் – சிந்திக்கப்படும் நிலை அளவுக்கு முற்போக்குச் சிந்தனைகளாக உலா வந்து கொண்டுள்ளார்.
தந்தை பெரியாரைப் பற்றி அதிகம் அறிந்திராத வட மாநிலங்களில் தந்தை பெரியார் இப்பொழுது கருத்துப் புயலாக வீசிக் கொண்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளு மன்றத்திற்குச் சென்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுக்கும் பொழுது தந்தை பெரியார் வாழ்க என்று முழக்க மிட்டது எதைக் காட்டுகிறது? வடபுலத்து உறுப்பினர்கள் அதிரும் நிலை ஏற்பட்டுள்ளதே!
எந்தக் காங்கிரசைவிட்டு, வகுப்புரிமைக்காகப் போராடி தந்தை பெரியார் வெளியேறினாரோ அந்தக் காங்கிரஸ் அந்த சமூக நீதிச் சுடரைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டதே!
காங்கிரஸ் இளந் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சமூகநீதி குறித்தும், தந்தை பெரியாரைக் குறித்தும் குரல் கொடுத்துக் கொண்டுள்ளாரே!
செய்தியாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் ‘உங்களில் எத்தனைப் பேர் ஓ.பி.சி. என்ற வினாவைத் தொடுத்து செய்தியாளர்களை வியக்க வைக்கிறாரே!
இடஒதுக்கீட்டின் அதிகபட்சம் 50 விழுக்காடு என்பதை மாற்றியமைப்போம் என்று சூளுரைக்கிறாரே!
டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த (22.9.2023) காங்கிரஸ் எம்.பி., ராகுல் “மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் ஓபிசிக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறோம். ஆனால் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையும் முடிந்த பின்னரே மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று கூறுவதன் பின்னணியில் சதி இருக்கிறது’’
‘‘ஒன்றிய அரசின் 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவை சேர்ந்தவர்கள். நாட்டின் ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையின் மதிப்பில் 5 சதவீதம் நிதியை மட்டுமே கட்டுப்படுத்த கூடிய அதிகாரம் பெற்றுள்ளனர் ஒ.பி.சி. அதிகாரிகள். நாட்டின் நிதியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற அதிகாரமே ஆதிக்க ஜாதிகளிடம் தான் உள்ளது’’ என்று எவ்வளவுப் பச்சையாகப் பார்ப்பனர் ஆதிக்கத்தைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி.
தந்தை பெரியார் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் சொன்னது எல்லாம், இப்பொழுது அகில இந்திய கட்சியான காங்கிரசில் எதிரொலிக்கிறதே!
அந்த அளவுக்கு தந்தை பெரியாரின் தாக்கம் இந்தியாவில் சுழன்றடிக்க ஆரம்பித்து விட்டது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரியங்கா காந்தி தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமை யானாள்?’ என்ற நூலைப் படித்திருக்கின்றீர்களா என்று கேட்டாரே!
பெரியார் பன்னாட்டு மய்யம் நடத்தி வரும் உலகம் தழுவிய மாநாடுகளில் பேசும் பன்னாட்டு பலதுறை அறிஞர்களும் ‘மதமற்ற உலகைக் காண்போம்! பெரியார் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்’ என்பதெல்லாம் பெரியார் உலகமயமாகிறார் – உலகம் பெரியார் மயமாகிறது! என்ற தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் கூற்று வெறும் வார்த்தைகளல்ல – காகித ஓடமும் அல்ல; மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற சிந்தனை ஓட்டத்தின் பதிப்பாகும்.
ஆனாலும் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தைத் தன் கைவசம் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான பிஜேபி ஆட்சி சமூகநீதியின் வேரில் திராவகத்தை ஊற்றும் கொல்லைப்புறக் கொள்ளையடிப்பை நடத்திக் கொண்டு இருக்கிறது.
‘நீட்’ தேர்வு என்பதும், உயர் ஜாதி ஏழைகளுக்கு
10 விழுக்காடு (EWS) இடஒதுக்கீடு என்பதெல்லாம் சமூக நீதியின் நோக்கத்தை சிதற அடிக்கும் பார்ப்பனீய தந்திர வழி முறையாகும்.
‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கிறது. ஒன்றிய பிஜேபி அரசு. இது அப்பட்டமான குலக்கல்வித் தி்ட்டமே!
18 ஜாதிகளைப் பட்டியலிட்டு அந்தத் தொழிலைச் செய் பவரின் மகனோ, மகளோதான் ‘இந்தத் திட்டத்தில் பயில முடி யும் – ஒன்றிய அரசின் உதவித் தொகையைப் பெற முடியும்.
அப்பன் தொழிலை இருபால் மாணவர்கள் செய்கிறார்களா என்பதற்கான சான்றினையும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற வேண்டும் என்றால் இதன் தன்மை என்ன? கைப்புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?
1952இல் தமிழ்நாட்டில் – உடம்பெல்லாம் மூளை என்று பார்ப்பனர்களால் மெச்சப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியாரால் திணிக்கப்பட்ட குலக்கல்வி திட்டத்தின் மறுபதிப்பு தானே இது!
அந்தக் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு பொங்கி எழுந்த காரணத்தால்தானே, அவர் முதல் அமைச்சர் பதவியை விட்டு ஓட நேர்ந்தது; அத் தோடு அவரது அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனம் ஆனது.
இன்றைக்கு இருக்கும் பி.ஜே.பி. ஆட்சிக்கும் அந்த நிலை ஏற்பட வேண்டுமானால் தந்தை பெரியாரின் சிந்தனைப் பார்வையும் செயல்முறையும் நாடெங்கும் தேவை! தேவையே!!
ஒன்றிய அரசின் தேசிய கல்வித் திட்டம் என்பது – ஹிந்தியை, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் பார்ப்பனக் கலாச்சாரப் படையெடுப்பே!
இவற்றையெல்லாம் நோக்கும்போது, உரிமை மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத பெரும் மக்களுக்குத் தந்தை பெரியார் தேவைப்படுகிறார்.
அவசியம் தேவைப்படுகிறார் என்பதை உணர முடிகிறது.
தந்தை பெரியாரின் கொள்கைகளை, சிந்தனைக் கோட் பாடுகளை எங்கெங்கும் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதி கொள்வோம்!
ஆம் பெரியார் வாழ்கிறார் – பேதமற்ற உலகைப் படைக்க அவசியம் தேவைப்படுகிறார். அந்தச் சுடரை ஏந்திப் பயணிப்போம்!
ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைப்போம்!
தந்தை பெரியார் உலகைப் படைப்போம்!
வாழ்க பெரியார்!