பள்ளிக்கூடம் வைக்காததற்கு வழி சொல்லாதீர்; ‘‘மைல்கல்லை பார்க்காதீர் – மனிதர்களைப் பாருங்கள்” என்றார் காமராசர்!
காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்
விருதுநகர், ஜூலை 21 காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான அவர், அதிகாரிகளைப் பார்த்து, ‘‘என்னங்க, பள்ளிக்கூடம் வைப்பதற்கு என்ன வழி என்று கேட்பதற்காகத்தான் உங்களை அழைத்தேன்; பள்ளிக் கூடம் வைக்காததற்கு வழி சொல்லாதீர்கள்; மைல்கல்லை பார்க்காதீர்கள்; மனிதர்களைப் பாருங்கள்’’ என்று சொன்னார். இதுதான் காமராசர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
விருதுநகரில் முப்பெரும் விழா!
கடந்த 1.7.2023 அன்று மாலை விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், விருதுநகர் மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடலில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
மைல்கல்லை பார்க்காதீர்கள்;
மனிதர்களைப் பாருங்கள்!
காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களுடைய தலைவரான அவர், அதிகாரிகளைப் பார்த்து, ‘‘என்னங்க, பள்ளிக்கூடம் வைப்பதற்கு என்ன வழி என்று கேட்பதற்காகத்தான் உங்களை அழைத்தேன்; பள்ளிக் கூடம் வைக்காததற்கு வழி சொல்லாதீர்கள்; மைல்கல்லை பார்க்காதீர்கள்; மனிதர்களைப் பாருங்கள்” என்று சொன்னார்.
இதுதான் காமராசர்.
முதன்முதலில் திராவிட இயக்கம்தான், சர்.பிட்டி.தியாகராயர்தான் – அன்றைக்கு சென்னை மாநகரத் தந்தையாக இருந்தபொழுது, பகல் உணவு அளித்தவர். அது சென்னை மாநகரத்தோடு போய்விட்டது. அன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட அளவிற்குத்தான் அதிகாரம் வைத்திருந்தார்கள், வெள்ளைக்காரர்களின் சட்டப்படி. ஆகவே, சென்னை மாநகரத்திற்கு மட்டும் தான் பகல் உணவு அளிக்கப்பட்டது.
காமராசர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு பகல் உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்; சீருடை கொடுத்தார். எல்லா பிள்ளை களும் பள்ளிக்கூடத்தை நோக்கி வரத் தொடங்கினர்.
‘ஆனந்தவிகடன்’ இதழில்
வெளிவந்த கட்டுரை
‘ஆனந்தவிகடன்’ இதழில் என்பது திராவிடர் கழகத்தின் பத்திரிகையல்ல; திராவிட இயக்கத்தை ஆதரிக்கக் கூடிய பத்திரிகையும் அல்ல. ஒரு ஆரியரால், பார்ப்பனரால் நடத்தப்படக் கூடிய பத்திரிகை. அந்தப் பத்திரிகையில், ஒரு கட்டுரை எழுதினார்கள்.
‘‘பெரியாருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல் வோம். பெரியார்தான், இத்தனைப் பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் வருவதற்குக் காரணமாக இருந்தார்” என்று அந்தக் கட்டுரையில் எழுதியவுடன், அடுத்த வாரத்தில், ஆசிரியர் கடிதங்கள் வந்தன. அதில், ‘‘பெரியார் பள்ளிக்கூடங்கள் வருவதற்குக் காரணமாக இருந்தார் என்று எழுதியிருக்கிறீர்களே, காமராசர்தானே பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார்; பிறகு எப்படி பெரியார் காரணமாக இருந்தார் என்று எழுதியிருக் கிறீர்களே?” என்று!
‘‘காரணம் பெரியார்;
காரியம் காமராசர்!”
அந்தக் கடிதத்தை ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் அப்படியே வெளியிட்டு, அதற்குக் கீழே விளக்கம் எழுதினார்கள் – ‘‘காரணம் பெரியார்; காரியம் காமராசர்” என்று!
அப்படிப்பட்ட அந்தக் காமராசர், இந்த மண் ணின் மைந்தனாக இருக்கக்கூடிய காமராசர், மிகப்பெரிய அளவிற்குக் கல்விக் கண் திறந்த காமராசர் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.
இன்றைக்கு நீட் தேர்வை ஒழிக்கவேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். அன்றைக்குப் பதவிக்கு வந்தவுடன், இராஜகோபாலாச்சாரியார் என்ன செய்தார் தெரியுமா? இளைய தலைமுறைக்குத் தெரியும்; அதிலும் பல பேருக்குத் தெரியாது.
நாங்கள் காமராசர் சாதனைகள்பற்றி புத்தகம் போட்டி ருக்கின்றோம்; அவருடைய சாதனைகளைப்பற்றி மேடை தவறாமல் பேசியிருக்கின்றோம்.
சாத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தைத்
தொடங்கி வைத்தது திராவிடர் கழகம்தான்!
காமராசர் அவர்கள் முதலில் குடியாத்தம் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வேட்பாளராக நின்றார்; அடுத்த தாக சாத்தூர் தொகுதியில் வேட்பாளராக காமராசர் நின்றபொழுது, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தது திராவிடர் கழகம்தான்; நான்தான்! சாத்தூரில் நிறைய திராவிடர் கழகத் தோழர்கள் இருந்தார்கள். நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி சிறப்பான அளவில் பிரச்சாரம் செய்தோம்.
காமராசருடைய கல்வித் தொண்டு என்பது சாதாரணமானதல்ல; அப்படிப்பட்ட காமராசர் அவர்கள், எல்லாத் துறைகளிலும் மாநிலத்தின் உரிமைகளைக் காப்பாற்றக் கூடியவராக இருந்தார். இத்தனைக்கும் அவர் ஒரு தேசியத் தலைவர்.
அப்படிப்பட்ட தேசியத் தலைவருடைய பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளை, கட்டாயமாகக் கொண் டாடப்படவேண்டும் என்று உத்தரவுப் போட்ட பெருமை முதலமைச்சராக இருந்த கலைஞருக்கே உண்டு. இத்தனைக்கும் காமராசர் வேறு கட்சியைச் சார்ந்தவர்.
காமராசரைத்தான் ஆதரித்தது
திராவிடர் கழகம்
திருப்பரங்குன்றம் – திருச்செங்கோடு என்கிற பிரச் சினை அரசியலில் காமராசருக்கு வந்தபொழுதுகூட, காமராசரைத்தான் ஆதரித்தது திராவிடர் கழகம்.
தமிழ்நாட்டின் உரிமைகளை என்றைக்கும் விட்டுக் கொடுத்தது இல்லை காமராசர் அவர்கள்.
ஒருமுறை கலைஞர் அவர்கள் சட்டப்பேரவையில் பேசும்பொழுது, ‘‘தமிழ்மொழிக்கு நாம் உயிர் கொடுத்திருக்கிறோம்; ஆகவே, ஒரே மொழி, தமிழ் மொழிதான் இருக்கவேண்டும்” என்று சொல்கிறார்.
‘‘ஹிந்தி வந்து குந்திக்கும், ஜாக்கிரதையாக இருங்கள்” என்று எச்சரித்தார் காமராசர்!
உடனே காமராசர் அவர்கள் கலைஞரை அழைத்து, ‘‘கொஞ்சம் நிதானமாகப் பாருங்கள்; நீங்கள் ஒரே மொழி தமிழ்தான் வேண்டும் என்றால், ஆங்கிலம் வேண்டாம் என்று சொன் னால், என்னாகும் தெரியுமா? ஆபத்து வந்துவிடும்; என்ன ஆபத்து என்றால், ஹிந்தி வந்து குந்திக்கும், ஜாக்கிரதையாக இருங்கள்” என்று சொல்கிறார்.
பிறகு அண்ணா ஆட்சிக்கு வந்ததும் இரு மொழிக் கொள்கையைக் கொண்டு வந்தார்.
ஆகவே, அன்றைய அரசியல் என்பது மக்கள் நலன் சார்ந்த அரசியல்; இனத்தின் நலன் சார்ந்த அரசியலாக இருந்தது.
காமராசரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்தான். ஒரு காலத்தில் அந்த சமுதாயத்தை எவ்வளவுக் கொடுமைப்படுத்தினார்கள்? அதற்காகத் தானே வைக்கம் நூற்றாண்டு விழா.
ஜாதி ஒழிப்பிற்காகப் போராட்டம் நடத்தினார் தந்தை பெரியார்!
வைக்கம் போராட்டத்தில் அங்கே உள்ளவர்களை சிறைச்சாலையில் அடைத்துவிட்டார்கள். அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காக தந்தை பெரியாரை அழைத்தார்கள். அதற்கு முன் சேரன் மாதேவி குருகுலத்தில் ஜாதி ஒழிப்பிற்காகப் போராட்டம் நடத்தினார்.
தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் சென்று அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறார். பெரியாருக் குத் தலைவர் காந்தியார்.
காந்தியார், பெரியாரிடம் கேட்கிறார், ‘‘நீங்கள் ஏன் அங்கே போகிறீர்கள்?” என்று.
‘‘கடிதம் எழுதி அழைத்திருக்கிறார்கள், அதனால் போகிறேன்” என்று தந்தை பெரியார் சொன்னார்.
நாய், பன்றி, கழுதை போகிறது;
ஆறறிவு உள்ள மனிதன் போகக்கூடாதா?
காந்தியாருக்குப் பெரியார் கடிதம் எழுதினார், ‘‘நான் வைக்கம் நகருக்கு வந்து பார்த்தபொழுது, நடுவில் கோவில் இருக்கிறது; கோவிலைச் சுற்றி நான்கு தெருக்கள் உள்ளன. அந்தத் தெருக்களில் ஆறறிவு உள்ள மனிதன், அவன் கீழ்ஜாதிக்காரன் என்கிற முத்திரை குத்தப்பட்டு, உழைக்கின்ற அந்த மனிதன், என் சகோதரனை நடக்கக்கூடாது என்று சொல்கிறார் களே – அந்தத் தெருவில் அவன் நடந்தால், சாமி தீட்டாகிவிடும் என்று சொல்கிறார்களே, இது என்ன கொடுமை!
அந்தத் தெருக்களில் நாய் போகிறது; பன்றி போகிறது; கழுதை போகிறது; ஆனால், ஆறறிவு உள்ள மனிதன் போகக்கூடாதா?
கடவுள்தானே எல்லாவற்றையும் உண்டாக்கினான் என்று சொல்கிறீர்கள்; அவர் உண்டாக்கியதிலேயே வேற்றுமைப்படுத்துவாரா? இதற்குப் பதில் சொல் லுங்கள்?” என்று தந்தை பெரியார் கேட்டார்.
ஆகவே, அந்தக் கொடுமைக்கு ஆளான மக்கள் நம்முடைய மக்கள். இன்றைக்கு அவையெல்லாம் மாறி யிருக்கிறது என்றால், அதற்கு என்ன காரணம்? திராவிட இயக்கத்தினால்தான்.
கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, நீலமாக இருந்தாலும் சரி, சிவப்பாக இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் சரி – நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து ஜாதியை ஒழிப்போம் – தீண்டாமையை அழிப்போம் – பேதத்தை விரட்டுவோம்; சமூகத்தில் மனிதர்களின் ஒற்றுமையைக் காப்போம் என்பதினால்தான் இன்றைக்கு இவ்வளவு பெரிய மாறுதல் ஏற்பட்டு இருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் வைக்கத்திற்குச் சென்ற பொழுது, திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் திவானாக இருந்த ராகவய்யர் -மற்றவர்கள் எல்லாம் நின்றிருந்தனர்.
தன்னை கைது செய்வதற்காகத்தான் வந்திருக் கிறார்கள் போல் இருக்கிறது என்று, தந்தை பெரியாரும் தயாராக வருகிறார்.
தந்தை பெரியார் அருகே வந்தவுடன், அவருக்குப் பழங்கள் கொடுத்து, சால்வை போர்த்தி சிறப்பாக வர வேற்றனர்.
இவர் உடனே, ‘‘நான் இராமசாமி, இங்கே போராட் டத்தை நடத்துவதற்காக வந்திருக்கிறேன்” என்று தந்தை பெரியார் சொல்கிறார்.
எங்கள் ராஜா உங்களுக்கு வரவேற்பு
கொடுக்கச் சொல்லியிருக்கிறார்!
உடனே ராகவய்யர், ‘‘உங்களுக்கு வரவேற்பு கொடுப் பதற்காகத்தான் எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள் அரசாங்கத்தில் இருந்து. காரணம், எங்கள் ராஜா
டில்லிக்குப் போகும்பொழுது, ஈரோட்டில் உங்கள் வீட்டில் தான் தங்கிவிட்டுப் போவார்; அப்படிப்பட்ட நண்பர் இங்கே வருகிறீர்கள், உங்களுக்கு மரியாதை கொடுக்கச் சொல்லியிருக்கிறார்” என்று சொன்னார்.
அப்பொழுது பெரியார் சொன்னார், ‘‘நான் உங்கள் ராஜாவுடைய நண்பராக சுற்றுலாவிற்காக வரவில்லை. உங்கள் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக வந்திருக்கின்றேன். ஆகவே, உங்களுடைய மரியா தையை ஏற்றுக் கொள்ள முடியாது; நான் போராடப் போகிறேன்” என்று சொன்னார்.
அதற்குப் பிறகு, போராட்டத்தில் பங்கேற்ற தந்தை பெரியார் அவர்களுக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு 6 மாதம் தண்டனை பெற்றார்.
‘‘பெரியார்’’ திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள்!
தந்தை பெரியாருக்கு, சிறைச்சாலையில் கைகளில் விலங்கு, கால்களில் விலங்கு போடப்பட்டு இருந்தது. இந்தக் காட்சியை ‘‘பெரியார்” திரைப்படத்தில் நடிகர் இனமுரசு சத்யராஜ் அவர்கள் பெரியாராக நடித்திருப்பதை நீங்களெல்லாம் பார்த்திருப்பீர்கள்.
சிறைச்சாலையில் தந்தை பெரியார் இருந்தபொழுது, ஒரு நாள் இரவு சங்கு ஊதப்பட்டது.
ராஜா திருநாடு இழந்து விட்டார்!
‘‘ஏன் திடீரென்று சங்கு ஊதுகிறார்கள்?” என்று சிறைச்சாலையில் பாரா செல்லும் காவலரிடம் தந்தை பெரியார் கேட்டார்.
‘‘உனக்குத் தெரியலையோ, ராஜா திருநாடு இழந்து விட்டார்” என்று சொல்கிறார்.
அதற்கு என்ன அர்த்தம் என்றால், ‘‘ராஜா செத்துப் போய்விட்டார்” என்பதுதான்.
‘‘சத்ரு சங்கார யாகம்!’’
தந்தை பெரியார் அவர்கள் மீண்டும் மீண்டும் போராட்டம் நடத்துகிறார்; பெரியாரை ஒழிப்ப தற்காக வைதீகப் பார்ப்பனர்கள் எல்லாம் சேர்ந்து ‘‘சத்ரு சங்கார யாகம்” நடத்தினால், பெரியாரை ஒழித்துவிடலாம் என்று திருவிதாங்கூர் ராஜாவிற்கு ஆலோசனை சொல்கிறார்கள்.
சத்ரு என்றால், விரோதி –
சங்காரம் என்றால், அழிப்பது –
அதுதான் சத்ரு சங்கார யாகம்; அந்த யாகத்தைச் செய்தால், அதிலிருந்து ஒரு பூதம் கிளம்பும்; அந்தப் பூதம் நேரே சென்று, பெரியாரது குரல் வளையை நெரித்துவிடும்; பெரியார் செத்துப் போய்விடுவார். பெரியாரை சாகடித்துவிட்டால், இந்தப் போராட்டம் தொடராது என்பதற்காகவே அந்த யாகம் நடத்தப்பட்டது.
அந்த யாகத்தால் செத்துப் போனது பெரியார் இல்லை; திருவிதாங்கூர் ராஜாதான்.
மக்கள் என்ன நினைத்தார்கள் என்றால், பூதம் ராஜா விடமே திரும்பி விட்டது என்று. அதுவே மூடநம்பிக்கை என்று பெரியார் சொன்னார்.
சிறைச்சாலையில் இருந்த கைதிகளை விடுதலை செய்தார்கள். பெரியாரும் சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தார்.
இராஜகோபாலாச்சாரியார் சென்னையில் இருக் கிறார்; சி.பி.ராமசாமி அய்யர் சட்ட அமைச்சராக இருக்கிறார்.
பழைய வழக்கில் தந்தை பெரியாரை
மீண்டும் கைது செய்தார்கள்!
மீண்டும் பெரியாரைக் கைது செய்யவேண்டும் என்று சொல்லி, பழைய வழக்கில், அதாவது வெள்ளைக் கார அரசாங்கத்திற்கு விரோதமாக நீங்கள் பேசியிருக்கிறீர்கள். அதற்காக உங்களை கைது செய்கிறோம் என்று சொல்லி, தந்தை பெரியாரை ஈரோட்டில் கைது செய்கிறார்கள்.
பெரியாருடைய துணைவியார் அன்னை நாகம்மையார்; பெரியாருடைய தங்கை கண்ணம்மாள் ஆகியோர் பெண்களை ஒன்று சேர்த்து, வைக்கத்திற்குச் சென்று அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.
முதன்முதலாக பெண்கள் தலைமையில், சத்தியா கிரகப் போராட்டம் நடந்தது என்பது இருக்கிறதே, அதுதான் முதல் மனித உரிமைப் போர். அந்த மனித உரிமைப்போரில், முன்னின்று நடத்தியவர்கள் பெண்கள்.
(தொடரும்)