ஒரே மனிதராக இந்த இயக்கத்தைத் தொடங்கிய பெரியார்தான், இன்று உலகத் தலைவர்!
வெளிநாடு வாழ் தமிழர்களிடம் ஆசிரியர் உரை!- வி.சி.வில்வம்
வெளிநாடு வாழ் திராவிடர் இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு 22.12.2024 அன்று காலை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜப்பான், சிங்கப்பூர், ஸ்காட்லாந்து, பர்மா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தோழர்கள் வந்திருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து மருத்துவர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், வலைக்காட்சி வல்லுநர்கள் உள்ளிட்ட பல்துறை ஆளுமைகளும் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்று திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசியதாவது:
இந்த இயக்கம் உலகளவில் உயரும்!
வெளிநாடு வாழ் திராவிடர் இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு என்பது அருமையான வாய்ப்பு. இங்கே நான் பேசுவதைவிட, நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும். அவரவர் கண்ணோட்டத்தில் சுதந்திரமாகவும், தாராளமாகவும் இங்கே பேசினீர்கள். உங்கள் கருத்துகளை எல்லாம் நான் மனதில் பதிந்து கொண்டேன். அதேநேரம் பெரியார் திடலுக்கு நீங்கள் அடிக்கடி வருவதற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் சிறப்பாகச் செய்வோம். உங்களின் குறுகிய கால விடுமுறையில், இங்கே நீங்கள் வருவதும், வெளிப்படையாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதும் மிகச் சிறப்பானது. நான் அடிக்கடி சொல்வதைப் போல குருதி உறவுகளைவிட, கொள்கை உறவுகள் மேலானது.
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பெரியார் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் கிடையாது. பெரியார் சொன்னார், “ஒரு சிறு கூட்டத்தாரோடு போராடுவதற்காக நான் இந்த இயக்கத்தைத் தொடங்கினேன். ஆனால் அது அப்படியே நீடிக்காது. பிற்காலத்தில் இந்த இயக்கம் உலக அளவில் வளரும்”, என்றார். இந்த நிகழ்ச்சியே அதற்குச் சான்றாக இருக்கிறது. அதே நேரத்தில் நானும் பல நாடுகளுக்குச் சென்று வருகிறேன். அனைத்து நாடுகளிலும் நம் கொள்கைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால்தான் நாம் அடிக்கடி சொல்கிறோம்,
“உலகம் பெரியார் மயம்; பெரியார் உலகமயம்!”
நூல் விற்பனையே அளவுகோல்!
இங்கே தோழர்கள் பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள். இன்னும் வேகமாகப் போக வேண்டும் என்கிற கருத்துகளும் சிலருக்கு உண்டு. நாம் அனைவருமே இலக்கு நோக்கித்தான் பயணம் செய்கிறோம். அதே நேரத்தில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒரு குவளையில் பாதி அளவுதான் தண்ணீர் இருக்கிறது. அப்போது, “என்ன பாதியளவுதான் தண்ணீர் இருக்கிறது”, என ஒருவர் நினைப்பார். காலியான குவளைகளையே பார்த்த ஒருவரோ, “அடடா… இவ்வளவு தண்ணீர் இருக்கிறதே”, என நினைப்பார். ஆக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம்.
நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்பதில்லை. 60 விழுக்காடு இருந்தாலே முதல் வகுப்பில் தேர்ச்சி என்கிறார்கள். 50 பேர் இருந்தால் போதும், தந்தை பெரியார் 3 மணி நேரம் பேசுவார். அந்த 50 இல் 5 பேர் கிடைத்தால் போதும் என்பார். இதுதான் பெரியாரின் அணுகுமுறை. இப்படித்தான் இந்த இயக்கத்தைப் பெரியார் வளர்த்தெடுத்தார். ஒரு கூட்டம் முடிந்ததும், “புத்தகங்கள் எவ்வளவு விற்பனை ஆனது?”, என்று தந்தை பெரியார் கேட்பார். அப்போதெல்லாம் மூன்றணா, நாலணா தான் புத்தகங்களின் விலை. அப்புத்தகங்கள் குறித்தும் பெரியார் கூட்டத்தில் பேசுவார். சில நேரம் தள்ளுபடி விலையிலும் கொடுப்பார். இந்த நிலையில் 200 ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்றாலே, கைதட்டி மகிழ்வார். ஒரு கூட்டத்தின் வெற்றியை நூல் விற்பனை மூலமே தந்தை பெரியார் முடிவு செய்வார்.
இரகசியமாகச் செய்ததை வெளிப்படையாக செய்கிறார்கள்!
கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் பல முனைகளில் இருந்தும் வாகனங்கள் வேகமாய் வந்து போகின்றன. அதேநேரம் அதைக் கட்டும்போது போக்குவரத்து நெருக்கடிகள், தாமதங்கள் எனப் பல பிரச்சினைகள் இருந்தன. அந்தச் சிரமத்தில் வாகனம் ஓட்டியவர்களுக்கு, இந்தப் புதுப் பாலத்தின் அருமை தெரியும். புதிதாக வாகனம் ஓட்டும் இளம் தலைமுறைக்கு என்ன தெரியும்? அனைத்து ஏற்பாடுகளும் தயாராய் இருப்பதால் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதேபோன்று தான் கல்வி கிடைத்த வரலாறு தெரியாமல், இட ஒதுக்கீடு தேவையா என்று கேட்கிறார்கள். படித்தால் நாக்கை அறுப்போம், ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றுவோம் என்று சொன்னவர்களுக்கே சாதகமாகப் பேசுகிறார்கள். இப்போது நாக்கை அறுப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது, காரணம் பெரியார் கொள்கை இருக்கிறது.
இன்றைக்கு தந்தை பெரியார் மறைந்து 51 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆட்சி (கலைஞர் ஆட்சி) போனால் என்ன ஆகும்?’, என அப்போது பெரியார் கவலைப்பட்டார். பார்ப்பனர்கள் ரகசியமாக செய்ததை எல்லாம், வெளிப்படையாகச் செய்வார்கள் எனச் சொன்னார். இன்றைக்கு ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால், எவ்வளவு வெளிப்படையாக செய்கிறார்கள் என்று நாம் பார்க்கிறோம். குலக்கல்வித் திட்டத்தை எவ்வளவு கடுமையாக எதிர்த்து முறியடித்தோம். இன்றைக்கு விஸ்வகர்ம யோஜனா எனும் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இதன் ஆபத்து தெரியவில்லை. தமிழ்நாடுதான் வழிகாட்டியது. கேரளாவில் ஒரு நண்பர், இந்தத் திட்டம் குறித்து “தி மாடர்ன் ரேசனலிஸ்ட்” மூலமே தெரிந்து கொண்டேன் என்றார்.
சிறையை விட்டு வெளியே போக முடியாது!
அதேபோல பிற்படுத்தப்பட்ட மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஒன்றிய அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் மண்டல் ஆணைய வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்கள். இதன் போராட்டம், பின்னணி தெரியவில்லை. ஒரு சிலர் இந்தப் பெயரையே “மண்டல கமிசன்” என்கிறார்கள். அதேபோன்று மகளிருக்கான வாய்ப்புகள் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக இருக்கின்றது. தொலைக்காட்சிகளும் மற்ற ஊடகங்களும் அவர்கள் கையில் இருப்பதால், இதையெல்லாம் அவர்கள் பேசமாட்டார்கள். தந்தை பெரியாரை அடக்கம் செய்த அந்த இறுதி நிமிடத்தில், முதலமைச்சர் கலைஞர் சொன்னார், ” அய்யாவுக்கு அரசு மரியாதை கொடுத்துவிட்டோம், ஆனால் அவரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமல் விட்டு விட்டோம்”, என்றார்.
பிறகு மணியம்மையார் அவர்களும் மறைத்துவிட்டார்கள். திமுக ஆட்சியும் மாறியது. மிசா வந்தது. எங்களைக் கைது செய்தார்கள். சொல்லொணா துன்பம் தந்தார்கள். சிறையை விட்டு நீங்கள் போகவே முடியாது என்றார்கள். உங்கள் இயக்கம் அவ்வளவுதான் முடிந்தது என அதிகாரிகளே பயம் காட்டினார்கள். நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை. அதன் பிறகும் இத்தனை ஆண்டு காலம் பொறுமை காத்து, பல்வேறு சட்டப் போராட்டங்கள் செய்து, இன்றைக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வந்து, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை
அகற்றிவிட்டார்கள்! இது எவ்வளவு பெரிய சாதனை!
மக்களுக்கு மருத்துவம் பார்த்த பெரியார்!
பெண்ணடிமை, ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கைகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் நம்மிடையே இருக்கின்றன. இவையெல்லாம் ஒருவகை நோய்கள். இந்த நோய்க்கு மருந்து கொடுக்க வேண்டும். இது கசப்பு மருந்தும் கூட! இதற்கு மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து, அதற்குத் தகுந்தாற்போல கால் மாத்திரை, அரை மாத்திரை எனப் பெரியார் கொடுப்பார். சற்று முன்னேற்றம் தெரிந்தால் முழு மாத்திரையும் கொடுப்பார். சிலரோ, “மருந்து கசப்பாக இருக்கிறதே, கொஞ்சம் இனிப்புக் கலந்து கொடுக்கலாமே”, என்பார்கள். மருந்தைக் கண்டுபிடித்ததே பெரியார்தான்! அதில் எப்படி இனிப்பு கலப்பது? இன்றைக்குச் சிறிது சேர்ப்பார்கள், பிறகு 50 விழுக்காடு வரும், பிறகு 90 வரும். இறுதியில் மருந்து இருக்காது, இனிப்பு மட்டுமே இருக்கும். எனவே நமது இலக்குப் பொதுவானது. ஆனால் அதைக் கொண்டு சேர்க்கும் விதத்தில் நுணுக்கமான அணுகுமுறை தேவை. தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்தார்.
சுயமரியாதைத் திருமண வரலாறு!
அதேபோல சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் அறிமுகம் செய்தார். அதற்குரிய எல்லா கோட்பாடுகளையும் வகுத்தார். ஆனால் எல்லோராலும் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியவில்லை. பரவாயில்லை, பார்ப்பனர்கள் மட்டும் வேண்டாம், மற்றதை செய்து கொள்ளுங்கள் என்றார். சில நேரங்களில் தாலி கட்டவும் அனுமதி கொடுத்தார். பேசும்போது, “இந்தத் தாலி என்பது நாய்க்கு லைசென்ஸ் மாட்டுவதைப் போல”, எனத் திருமணத்திலே பேசி எல்லோரையும் சிந்திக்க வைப்பார். ஆக சிறிது, சிறிதாக அவரின் அணுகுமுறையால் மாற்றம் கிடைத்தது. முதலில் பார்ப்பனர்கள் வேண்டாம் என்றார், பிறகு சடங்குகள் வேண்டாம் என்றார், அடுத்து ஆடம்பரத்தை விடுங்கள் என்றார், அதற்கடுத்து ஒரே ஜாதியில் ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்றார், உச்சபட்சமாகத் திருமணம் என்பதையே “கிரிமினல்” குற்றமாக ஆக்க வேண்டும் என்று கூறிவிட்டார். ஆக சுயமரியாதைத் திருமணத்தில் படிப்படியாகப் பெரியார் வந்த அணுகுமுறை இதுதான்! இலக்கு நோக்கிப் பயணம் செய்யும் போது, நடைமுறைச் சிக்கல்கள் நிறைய வரும். அதற்கேற்றாற் போல் வழி அமைக்க வேண்டும். இது சமாதானமாகப் போவதல்ல; மாறாக இது ஒரு வழிமுறை!
நுண்ணறிவுப் பயிற்சி!
அதேபோல AI (Artificial Intelligence) என்று சொல்லக்கூடிய நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை. பெரியார் காலத்திலும் பொய் சொல்லக் கூடியவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது பொய் சொல்லவே ஊதியம் கொடுத்து ஆட்களை வைத்துள்ளார்கள். அதேநேரம் அந்த நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் நாம் மேன்மையடைய வேண்டும். அதற்கான பயிற்சிகள், வகுப்புகளை அதிகரிக்க வேண்டும். இதுகுறித்தும் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஆகவே தோழர்களே! எதற்கும் நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. தோல்வி மனப்பான்மை என்பது கூடவே கூடாத ஒன்று! எப்போதும் நமக்குத்தான் வெற்றி கிடைக்கும். வேண்டுமானால் கொஞ்சம் தாமதம் ஆகலாம். இதுதான் நம் வரலாறு!
நீங்களே முன்மாதிரி!
இதுகுறித்தெல்லாம் தமிழ்நாட்டில் இருப்பவர்களே தெரிந்து கொள்ளாமலும், இன்னும் சொன்னால் இந்தத் திட்டங்களை எதிர்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வெளிநாடுகளில் வசிக்கும் உங்களைப் போன்றோர் இதனைப் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டில் உள்ளவர்களுடன் ஒத்துழைத்து வருவதையே பெரிய விடயமாகப் பார்க்கிறேன். நீங்கள்தான் முன்மாதிரி (ROLL MODEL) என்றும் சொல்வேன்.
நம் கடமையைச் செய்து கொண்டே இருப்போம். நம்மிடம் 10 பேர்தானே இருக்கிறார்கள், 50 பேர்தானே இருக்கிறார்கள் என்றெல்லாம் எண்ண வேண்டாம். பெரியார் ஒரே ஆளாகத்தான் இந்த இயக்கத்தைத் தொடங்கினார், இன்று உலகத் தலைவராக உயர்ந்து நிற்கிறார்! எனவே யார் யாரால், எந்தெந்த அளவிற்கு, இந்தக் கொள்கைக்கு, இந்த இயக்கத்திற்கு உதவ முடியுமோ அதைச் செய்யுங்கள். ஜப்பான் பயணம் குறித்தெல்லாம் இங்கே கூறினார்கள். அந்தப் பயணம் பெரிய அளவிற்கு வெற்றி பெற்றது. எனவே நமக்கு எப்போதுமே வெற்றிதான் கிடைக்கும்! மகிழ்ச்சியோடு திரும்புங்கள், ஆண்டுக்கு ஒருமுறை நாம் தொடர்ந்து சந்திப்போம், நன்றி!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசினார்கள்.
பங்கேற்றோர்!
இந்த நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவுத்துறை செயலாளர் கோ.கருணாநிதி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தகவல் தொழில் நுட்பக்குழு. மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், ஜெகதீஸ்வரன், சின்னத்துரை, பஞ்சாட்சரம், சந்திரசேகரன், சுந்தர், கலைச்செல்வன், கோவிந்தபாசம், துரை.ஆறுமுகம், நரசிம்மன் நரேஷ், கலைவாணி, இந்திரகுமார் தேரடி, அருள்பிரகாசம், நல்லையன், இனியன், இராஜராஜன், ப்ரீத்தி காளிதாஸ், கணேஷ்குமார், நிரஞ்சன், மதிவாணன், பிரியவர்த்தினி, வெண்பா, புருனோ, ராஜா ராஜேந்திரன், கதிர்.ஆர்.எஸ், மோகன்குமார், கார்த்திக் ராமசாமி, சங்கரலிங்கம், கருப்பசாமி, வசந்தகுமார், வினோத்குமார், கருணாநிதி, இராமச்சந்திரன், ராஜபிரியா, தீபிகா, மகிழ்நன், கந்தசாமி, பிரியங்கா, சீனி, ஸ்டீபன்ராஜ், சரவணன், முகமதுஅலி, முகமதுரூபியா, சிவசங்கரன், ஜெயநாதன், பூவண்ணன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.