எலும்புகள் வலிமை பெற உணவில் தேவை அக்கறை!

viduthalai
2 Min Read

அனைத்து வயதினர்களுக்கும் எலும்பு தேய்மானம் ஏற்படுகின்றன. இளம் வயதினருக்குக் கூட இக்காலங்களில் தேய்மானம் உண்டாகின்றது.
எலும்பு தேய்மானத்திற்கான காரணங்கள்

இரவு வெகு நேரம் கண் விழிப்பது, காலையில் தாமதமாக எழுவது, இரவு பணி செய்வது, குளிரூட்டப்பட்ட இடங்களில் வேலை செய்வது, ஏ.சி. வாகனங்களில் பயணிப்பது என சூரிய ஒளி நம் உடலிலேயே படாமல் இருப்பவர்கள் இப்பொழுது அதிகம் பேர் உள்ளனர்.

சூரிய ஒளியினால் கிடைக்கக் கூடிய வைட்டமின் டி குறைவால் எலும்பின் அடர்த்தி குறையும். கால்சியத்தை எலும்பு ஏற்றுக்கொள்ள வைட்டமின் டி தேவைப்படுகிறது. இளம் வயதில் எலும்புகள் நீளமாகவும், அகலமாகவும் வளரும். பதினெட்டு வயதுக்கு பின் நீண்டு வளராது. அகலத்தில் தான் வளரும். 30 வயதுக்கு பின் எலும்பின் வளர்ச்சி நின்று விடும்.

அதற்குள் நாம் எலும்பின் உறுதியையும், திண்மையையும் அதிகப்படுத்திகொள்ள வேண்டும். 30 வயதுக்கு பின் எலும்பின் அடர்த்தி சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.

உணவில் தேவை அக்கறை

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும்பொழுது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும்.

அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும். பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்ப்பானங்கள் கால்சியம் தாதுவை அழிக்கும் தன்மையுள்ளவை. காபி, டீ போன்ற பானங்கள் அதிகம் பருகுவதும் கால்சியம் குறைய காரணமாகின்றது.

கால்ஷியம் நிறைந்த உணவுகள்

பால் மற்றும் பால் பொருள்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்கள் காய்கறிகள், கீரைகள் மற்றம் கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம்.

காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத் தண்டு, அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்ஷியம் உள்ளது.

எள், கால்சியம் சத்து நிறைந்த ஒரு எண்ணெய் வித்து, எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். நாள்தோறும் 5 பாதாம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கேழ்வரகில் பாலை விட அதிக கால்சியம் உள்ளது.

உடற்பயிற்சியின் அவசியம்

எலும்புகள் உறுதியாக யோகா அல்லது உடற்பயிற்சி மிகவும் அவசியம். இத்தகைய பயிற்சிகள் செய்யும்பொழுது எலும்புகள் வலிமை பெறும். இன்று குழந்தைகள் ஓடி விளையாடுவதே குறைந்து விட்டது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் உடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்குவதே இல்லை.

சிறுகுழந்தைகளாக இருக்கும்பொழுதே பெற்றோர்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டில் பழக்கி விட வேண்டும். பெற்றோர்களும் நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் யோகாசனம், நடைப்பயிற்சி, நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், தோட்ட வேலைகள் என்று செய்ய, குடும்ப ஆரோக்கியம் மேம்படும். உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும்.

இளம்வயதிலேயே எலும்பை உறுதியாக வலுவாக ஆக்கிக்கொண்டால் ஆயுள் நீட்புக்கும் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *