கண் பார்வையை மேம்படுத்தும், படிப்பதற்காக மட்டும் அணியும் கண்ணாடி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி ரத்து செய்துள்ளது.
இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், படிக்கும்போது கண்ணாடி அணிவதைக் குறைக்கும், மிக அருகில் உள்ள பொருள் களை பார்க்கும்போது ஏற்படும் கண் மங்கலைத் தடுக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்திருக்கிறது.
மேலும், மருந்து தயாரிப்பு நிறுவன மானது, இந்த கண் சொட்டு மருந்தை, மக்கள் யார் வேண்டுமானாலும், மருத்து வரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வாங்கிப் பயன்படுத்தலாம் என்பது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியதாகவும் ஆனால், இந்த மருந்துக்கு ஒன்றிய அரசு, மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மட்டுமே விற்பனை செய்யக் கூடிய மருந்தாக அனுமதி வழங்கியிருந்ததையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இது குறித்து ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப் படுத்தியிருந்த ‘பிரெஸ்வு’ (PresVu) என்ற கண் சொட்டு மருந்துகளைப் பற்றி அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைக் கூறி விளம்பரம் செய்வது, மருந்தின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்புவதால், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மருந்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்
ஆனால், என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அளித்த விளக்கத்தில், பிரெஸ்வு கண் சொட்டு மருந்து தொடர்பாக நிரூபிக்கப்படாத அல்லது தவறான எந்த தகவலையும் நாங்கள் தெரிவிக்கவில்லை, அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்று நியாயம் பெறுவோம் என்று தெரிவித்துள்ளது.
எங்களது மருந்துக்கு, 234 நோயாளிகளிடம் பரிசோதனை செய்து, அதில் வெற்றி பெற்ற பிறகே, அதனை அடிப்படையாக வைத்து இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்கியிருந்தது, இந்த மருந்தைப் பயன்படுத்தியவர்களின் கண் பார்வை மேம்பட்டது, படிக்கும்போது கண்ணாடி அணிவது குறைந்தது என்று நிரூபிக்கப்பட்டது என நிறுவனம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்புக் காரணமாக இது இந்தியாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது