சென்னை,டிச.23- ஸநாதன எதிர்ப்புப் பேச்சுக்காக சாமியார் ஒருவரை அழைத்து பரிகாரம் செய்ததாக அதிமுகவின் வாடகை வாய்கள் வதந்தி பரப்புகின்றனர்; என் தலையை சீவுவோம் என்று சொன்ன போதும், நான் கலைஞரின் பேரன்; இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்று பேசியது நான்தான் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (22.12.2024) நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
மதங்கள் அனைத்தும் அன்பைத்தான் போதிக்கின்றன. மதத்தை வைத்து அரசியல் செய்வோர்தான் வெறுப்பை பரப்புகிறார்கள். சங்கிகள் மட்டுமல்லாது அவர்களின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ கூட வெறுப்பைப் பரப்புகின்றனர். அலகாபாத் நீதிபதி ஒருவர் இஸ்லாமியருக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓராணியில் ஒன்று திரண்டன. ஆனால், அதிமுக இதில் இணையவில்லை.
சாமியாரை அழைத்து பரிகாரம்
நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கரை இழிவாக பேசினார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதனால் அமித்ஷாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. திமுக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால், அதிமுக மவுனமாக இருக்கிறது. மாநில சுயாட்சியை கொண்டு வந்த அறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி வைத்துள்ள அதிமுக மாநில உரிமைகளை பறிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரிக்கிறது.
புயல் நிவாரண நிதியை வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து குரல் கொடுக்காத அதிமுக, சிறுபான்மை மக்கள் தாக்கப்படும் போதும் குரல் கொடுக்காத அதிமுக, திமுக அரசு மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் சொல்ல முடியவில்லை என்பதால்தான் வதந்திகளை பரப்பி வருகின்றது.
ஸநாதனம் குறித்து நான் பேசியதால் ஏதோ ஒரு சாமியாரை அழைத்து பரிகாரம் செய்ததாக ஒரு வதந்தியை கிளப்பி வருகின்றனர். நான் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், என் தலையை வெட்டுவேன் என்று ஒரு சாமியார் சொன்னார். நான் கலைஞரின் பேரன், நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? என கூறினேன். வாயை வாடகைக்கு விடும் வகையில் திமுக மீதும் என் மீதும் அதிமுகவினர் வதந்திகளை பரப்புகின்றனர். இவ்வாறு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.