பா. வீரமணி
பெண்ணியம் பற்றிய சிந்தனைகளில் தந்தை பெரியார் ஒரு புரட்சியாளர்; அதுவும் பெரும் புரட்சியாளர். அவர் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இத்துறையில் இந்தியாவுக்கே ஓர் ஒளி விளக்கானவர். பெண்ணியம் பற்றிய உலகச் சிந்தனையாளர்களில் அவர் தனிச் சிறப்பு வாய்ந்தவர். பிரெஞ்சுப் புரட்சியும், இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற் புரட்சியும் பெண்ணடிமைத்தனம் ஒழிய பெரிய வாயில்களாக அமைந்தன. அந்த அடிமைத்தனம் ஒழிய உலகில் பிற நாடுகளில் பெண்ணிய அமைப்புகளும், பெண்ணிய சிந்தனையாளர்களும் தோன்றினர். பெண்ணியம் குறித்து முதன் முதலில் நூல் எழுதியவர் மேரி வோல்ஸ்ரோன் கிராப்ட் (Mary Wollstone Craft) என்பவராவார். இவர் 1972இல் ‘‘பெண்களின் உரிமைகளை நியாயப்படுத்தல்’’ “(A Vindication of the Rights of Woman)” என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூல் உலகின் கண்களைத் திறந்த நூல் என்று ஆய்வாளர்கள் கூறுவர். இவர் ஆங்கிலக் கவிஞர் ெஷல்லியின் மாமியார் ஆவார்.
தந்தை பெரியார்
அவருக்குப் பின்னர், பெட்டிபிரைடன், பெத்தே எல்ஸ் டைன் போன்றோர் பெண்ணியம் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். இவர்களைப் போன்று இந்தியாவில் அல்டேகர், கோசாம்பி குர்யே, ராதா குமுத்முகர்ஜி, அம்பேத்கர், சிங்காரவேலர், தந்தை பெரியார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் தந்தை பெரியார் நீண்ட காலம் வாழ்ந்தவர். நீண்ட காலம் களமாடியவர். அவர் நீண்ட காலம் வாழ்ந்ததைப் போலவே, பெண்ணியத்தின் எல்லாநிலைகளிலும் ஊடுருவி உள் நுழைந்து நீடு சிந்தித்துள்ளார் எனலாம்.
அமர்த்தியாசென்
இந்தியப் பெண்ணியத்தைப் பற்றி எழுதியவர்களுள் பலரை நாம் முன்னரே கண்டோம். ஆனால், மற்றொரு பெரும் சிந்தனையாளரை நம்மில் பெரும்பாலோர் அறியார். அவர் யார்? அவர்தான் நோபல் விருது பெற்ற அமர்த்தியா சென் ஆவார். அவரைப் பெரிதும் நாம் உலகப் பொருளாதார வல்லுநர் என்று மட்டுமே அறிந்திருக்கிறோம். ஆனால், அவரைப் பற்றி நூல் எழுதிய சக்சேனா என்பவர், உலகப் பொருளாதார வல்லுநர்களில் பொருளாதாரத்தோடு பெண்ணியத்தையும் இணைத்து முதலில் எழுதிய பொருளாதார அறிஞர் அமர்த்தியாசென் அவர்களே ஆவார் என்கிறார். மற்றும், கிழக்கு ஆசிய நாடுகளில் பெண்கள் குறித்துப் பல ஆண்டுகள் கள ஆய்வுச் செய்து, எழுதிய வரும் அவரே என்கிறார். பெண்ணியம் குறித்த அவரது ஆய்வு, ஒரு விஞ்ஞான ஆய்வு. அது புதுச் சிந்தனையும் புரட்சிகர முடிவும் கொண்டதாகும். ஏறக்குறைய தொண்ணூறுகளில் அமர்த்தியாசென் கூறிய முடிவை, தந்தை பெரியார் முப்பதுகளில் கூறியிருப்பதுதான் முக்கியமானது. அது முக்கியமானது மட்டும் அன்று; விந்தையானதும் ஆகும். இதற்குக் காரணம், அவரது மக்கள் தொடர்பும், விருப்பு வெறுப்பின்றி ஆழ்ந்து சிந்திக்கும் திறனுமேயாகும்.
ஒத்த சிந்தனை
தந்தை பெரியாரின் சிந்தனை, அமர்த்தியாவின் சிந்தனையோடு எப்படி ஒத்துச் செல்கிறது என்பதைச் சுருங்கக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பெண்கள், மனிதச் சமூகத்தில் சரி பாதியினர் ஆவர். அவர்களின் தொகை, ெதாழிலாளர்களைக் காட்டிலும் கூடுதலானது. தொழிலாளர் முதலாளித்துவத்தால் மட்டுமே சுரண்டப்படுபவர். ஆனால், பெண்கள் முதலாளித்துவத்தாலும், ஆணாதிக்கத்தாலும் சுரண்டப்படுபவர். அதாவது இரட்டைச் சுரண்டலுக்கு உட்பட்டவர். மேலும் அவர்களின் சுயமதிப்பின்மையும், பொருளாதாரக் குறையும் அவர்களுக்குத் தடைகளாக அமைந்து விடுகின்றன. அமர்த்தியாசென் அவர்கள் கிழக்காசிய நாடுகளில் பயணம் செய்து பெண்களின் நிலையை கள ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக இந்நாடுகளிலுள்ள பெண் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் எடையையும் ஆய்வு செய்துள்ளார்.
இந்த ஆய்வில் ஒரு புது உண்மை வெளிப்பட்டுள்ளது. அதாவது ஒப்பீட்டு நோக்கில் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் உடல்வாகும், ஆரோக்கியமும் பெற்றுள்ளார்கள் என்றும், இதற்குக் காரணம் இயற்கை அளித்த கொடையாகும் என்றும் கூறுகிறார். குழந்தைப் பருவத்திற்கு அப்பால் அவர்களின் ஆரோக்கியம் குன்றுவதற்குக் காரணம், சத்துணவும், கல்வியும், சமூக சுதந்திரமும், போதிய மருத்துவமும் கிடைக்காதவையேயாகும் என்கிறார். மேலும் பெண்கள் எண்ணிக்கை ஏழை நாடுகளில்தான் மிகுதியாக உள்ளது என்றும், குறிப்பாக ஆப்பிரிக்கா, இந்தியா, வங்காளதேசம் ஆகியவற்றில் கூடுதலாக உள்ளதென்றும் கூறியுள்ளார். கிழக்காசிய நாடுகளில் வறுமையாலும் தவறான சட்ட திட்டங்களாலும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை அவர் ‘காணாமல் போன பெண்கள்‘ என்னும் அத்தியாயத்தில் விரிவாக ஆய்ந்துள்ளார்.
பெண்களின் எண்ணிக்கை
அமர்த்தியா சென் மற் றொன்றை வலியுறுத்திக் கூறுவது தான் மிக முக் கியமானது. அதாவது, இந்தி யாவில் கேரளவில் பெண்கள் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாக இருப்பதற்குக் காரணம், அங்குப் பெண்கள் அதிகமாகப் பிறக்கிறார்கள் என்று சில குறிப்புகள் வழியாகவும், ஊடகங்கள் மூலமாகவும் நாம் அறிந்து வருகிறோம். ஆனால், அதனை அமர்த்தியா மறுக்கிறார்.
கேரளாவில் பெண் கல்வியும், சுய உழைப்பால் கிடைக்கும் பொருளாதாரமும், பெண்களின் எண் ணிக்கையை மிகுதிப்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக, பல்லாண்டுகளுக்கு முன்பாகவே அங்குப் பெண்களுக்குச் சொத்துரிமை இருப்பதாலேயே பெண்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கூடுதலாக உள்ளதென அவர் பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். அதனால்தான் தந்தை பெரியார், பெண் கல்வி, பெண் முன்னேற்றம், பெண் சமத்துவம், பெண்ணுரிமை ஆகியவற்றை வலியுறுத்தியவற்றோடு சொத்துரிமையையும் கூடுதலாக வலியுறுத்தியுள்ளார். அதுவும் முப்பதுகளில் (1930–1940) அவர் வலியுறுத்தி இருப்பதுதான் மிக முக்கியமானது. சொத்துரிமைக்கு முன்னர் பெண்கள் பெற்றிருக்க வேண்டிய தெளிவையும், துணிவையும் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. போதிய கல்வியும், தெளிவும், துணிவும் அற்ற பெண்களுக்குத் சொத்துரிமை அளிப்பது பெரும் பயனை விளைவிக்காது. அதனால்தான் அவர் கீழுள்ளவாறு தெளிவுறுத்துகிறார்.
பெண் கல்வி
‘தற்காலத்திலுள்ள கல்வி முறையை மாற்றி வாழ்க்கைக்குப் பயன்படக் கூடிய முறையிலும், சிறிதும் மத நம்பிக்கைகளும், கோழைத்தனமும், அடிமைப்புத்தியும் உண்டாகாத வகையிலும் உள்ள கல்வித் திட்டத்தை ஏற்படுத்திப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமத்துவமான கல்வியளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும் என்று கூறுகிறோம்.
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் – தொகுதி II பக்.9)
‘‘இயற்கையிலேயே பெண்கள் பலவீனர்களாகவும் ஆண்களுடைய சம்ரட்சணையிலும் இருக்கும்படியாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற உணர்ச்சி அடியோடு மாறியாக வேண்டும். அந்த உணர்ச்சி ஆண்களுக்கு மாத்திரமல்லாமல், இன்றைய பெண்களுக்குப் பெரிதும் முதலில் மாற வேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் அவர்களை அடிமைப்படுத்திய கொடுமையான பலமானது பெண்கள் தாங்கள் மெல்லியலாளர்கள் என்றும், ஏதாவது ஓர் ஆணின் காப்பில் இருக்க வேண்டியவர்களென்றும் தங்களையே கருதிக் கொள்ளும்படி செய்து விட்டது. ஆதலால் அது முதலில் மாற வேண்டியது அவசியமாகிறது’
(மேலது நூல் – தொகுதி I, பக் 103)
மேற்குறித்த பண்புகள் பெண்களுக்கு இன்றியமையாதவை. இப்பண்புகளுடைய பெண்களே சொத்துரிமையை நன்கு பயன்படுத்துவதற்கும், அந்த உரிமையை யாராலும் களவாட முடியாததற்கும் உரியவர் ஆவர். அதனால்தான் தந்தை பெரியார் அவற்றை அழுத்தமாக வலியுறுத்துகிறார் எனலாம். பெண்களின் சொத்துரிமைக் குறித்து அவர் ‘இனியாவது புத்தி வருமா?’ என்ற கட்டுரையில் ஆழமாக உணர்த்தியுள்ளார். அக்கட்டுரையைப் பற்றி மற்றொரு முறை விரிவாகக் காண்போம். இங்கு, சுருக்கம் கருதி ‘பெண்கள் சொத்துரிமை’ எனும் தலைப்பிலுள்ள கட்டுரையை மட்டும் பார்ப்போம். இதே தலைப்பில் மறறொரு கட்டுரையும் உள்ளது. ஆனால் ஒரு கட்டுரையை மட்டும் நோக்குவோம்.
உண்மையான சுதந்திரம்
‘பெண்கள் சுதந்திரம் என்னும் விடயங்களில் எதைஎடுத்துக் கொண்டாலும், ஆண்கள் பெண்களுக்குத் தயவு செய்து பிச்சை கொடுப்பது போலவே கருதுகின்றார்கள். உண்மையான சுதந்திரம் பெண்களுக்கு ஏற்பட வேண்டுமானால் ஒரு பெண்ணும் ஆணும் வாழ்க்கைத் துணைகளாய் வாழும் வாழ்க்கையில் இருவருக்கும் ஒழுக்கத்திலும் கட்டுப்பாடுகளிலும் ஒரே மாதிரியான ஒழுக்கமும், கட்டுப்பாடும் இருக்கும்படி வாழ்க்கையையும், அது சம்பந்தமான அரசியல் சட்டங்களையும் திருத்திக் கொண்டாலொழிய உண்மையான சுதந்திரம் ஏற்படவே முடியாது.
ஆகவே அவர்களது சுதந்திரத்திற்குச் சொத்துரிமை இல்லாததோடு தங்களின் அடிமையுணர்ச்சியும், பயமும் காரணமாயிருப்பதால் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் அவ்வடிமை உணர்ச்சியும், பயமும் அடியோடு மறையும்படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியது பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவோர்களின் முக்கிய கடமை என்பதை ஞாபகப்படுத்துகிறோம்’’ (மேலது – தொகுதி II – பக் –103).
பெண்களுக்குக் கொடுக்கப்படும் உதவிகளை ஆணினம் பிச்சையாகக் கொடுக்கும் மனநிலையை மாற்றியமைக்க வேண்டி அனைத்தையும் சட்டமாக்க வேண்டும் என்கிறார். மேலும் அதுவே பெண் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோரின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்கிறார். இந்தச் சட்டங்களில் தந்தை பெரியார் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததால்தான் மைசூர் அரசாங்கத்தில் 22.10.1931 அன்று பெண்களின் சொத்துரிமைப்பற்றி விவாதம் நடந்து சட்டம் நிறைவேறிய காலத்தில் அதனை வரவேற்று குடிஅரசில் எழுதியுள்ளார். அது மிக முக்கியமானது.
பெண்களுக்குச் சொத்துரிமை
‘பெண்களுக்குத் தாங்கள் பெண்களாகப் பிறந்த காரணத்தாலோ அல்லது அவர்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதற்கு மத சம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தாலோ அவர்களது வாரிசு சொத்துரிமை மறுக்கப்படக் கூடாது. ஒரு பாகம் பிரியாத குடும்பத்தில் உள்ள ஒருவர்தான் சுயமாகச் சம்பாதித்து வைத்திருக்கும்சொத்திலும் பெண்களுக்கு உரிமை உண்டு. ஒவ்வொரு விதவைக்கும் தானாகவே தந்து எடுத்துக் கொள்ள உரிமையுண்டு.
பாகம் பிரியாத குடும்பத்தில் கணவன் இறந்து விட்டால் பெண்ஜாதிக்குக் குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் குடும்பச் சொத்தில் கணவனுக்குள்ள பாகம் சர்வ சுதந்திரமாய் பெண்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்’ (மேலது தொகுதி –I பக். 190–191).
பெண்ணாகப் பிறந்ததாலோ, சொத்துரிமை கொடுக்க மதத்தில் ஆதாரம் இல்லை என்பதாலோ பெண்ணுக்குச் சொத்துக் கொடுக்கத் தயங்காது கொடுத்தே ஆக வேண்டும் என்கிறார். மற்றும் பாகம் பிரிக்கப்படாத போதும், ஒருவரே சம்பாதித்த சொத்தானால் – அங்கும் பெண்ணுக்குச் சொத்தில் பங்கிருக்க வேண்டும் எனவும் விதவையாக இருந்தாலும் தானாகவே சொத்தை எடுத்துக் கொள்ளும் உரிமை வேண்டும் என்றும், கணவன் இறந்து விட்டால் மனைவிக்குக் குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும்கூட அவளுக்குச் சொத்தை வழங்க வேண்டும் என்கிறார். இவற்றை எல்லாம் நோக்கினால் தந்தை பெரியார் எத்தனை ஆழமாகவும், எதிர்கால நோக்கோடும் சிந்தித்துள்ளார் என்பதை நன்கு உணரலாம். ஆம், அதனால்தான் அவர் பெரியார் அதனாலன்றோ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.
‘மண்டைச் சுரப்பை உலகம் தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்’’ என்றார்.
மானுடம் தழுவிய சிந்தனை
அமர்த்தியா சென் கூறிய கருத்துக்கு முன்னரே தந்தை பெரியார் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பது அசாதாரணமானது. இந்நேரத்தில் 1948இல் டாக்டர் அம்பேத்கர் இந்திய நாடாளுமன்றத்தில் பெண் சொத்துரிமை குறித்துச் சட்டம் கொண்டு வர முயன்றது! மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் 1989இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெண்ணுக்குச் சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றியதும் வரலாற்றுச் சாதனையாகும். பெண்ணியம் குறித்து, சத்தியமூர்த்தி, மதன்மோகன் மாளவியா, வல்லபாய் படேல் போன்றோரின் பிற்போக்குக் கருத்துகளை அவ்வப்போது உடனுக்குடன் தந்தை பெரியார் மறுத்திருப்பது அவரின் சமுதாய அக்கறையை, புதுமை நோக்கைப் புலப்படுத்துவதாகும். தந்தை பெரியாரின் சிந்தனைகள் உலக மானுடம் தழுவியவை. அதனால் ஆசிரியர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள், ‘பெரியார் உலகம்’ என்று பிரகடனம் செய்து ‘பெரியார் உலகமயம்’’ ‘‘உலகம் பெரியார் மயம்’’ என்று வலியுறுத்தி வருகிறார். இக்கூற்று ஓர் உன்னதமான சிந்தனை உலகின் தனிப் பெரும் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் “The World becomes Philosophical; Philosophy desires to become worldly” ‘‘உலகம் தத்துவமயமாகும் போது, தத்துவம் உலகமயமாகிறது’’ என்றார். இது தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கும் பொருந்தும்.
பெண்களுக்குக் கொடுக்கப்படும் உதவிகளை ஆணினம் பிச்சையாகக் கொடுக்கும் மனநிலையை மாற்றியமைக்க வேண்டி அனைத்தையும் சட்டமாக்க வேண்டும் என்கிறார். மேலும் அதுவே பெண் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோரின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்கிறார். இந்தச் சட்டங்களில் தந்தை பெரியார் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததால்தான் மைசூர் அரசாங்கத்தில் 22.10.1931 அன்று பெண்களின் சொத்துரிமைபற்றி விவாதம் நடந்து சட்டம் நிறைவேறிய காலத்தில் அதனை வரவேற்றுக் குடிஅரசில் எழுதியுள்ளார்.