இந்தியா டி.வி. என்ற ஹிந்தி தொலைக் காட்சியில் அம்பேத்கர் மனுஸ்மிருதி நூலை தீயிட்டு எரித்த டிசம்பர் 25 குறித்து விவாதம் நடந்துகொண்டு இருந்தது,
அப்போது கல்லூரி மாணவியும் ராஷ்டிர ஜனதா தள் கட்சியின் பேச்சாளருமான பிரியங்கா பாரதி மனுஸ்மிருதி நூல் குறித்தும் அதில் இந்த மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அனைத்துப் பெண்களையும் சூத்திரர்கள் விலைமாதுகள், விலை மாதர்களுக்குப் பிறந்தவர்கள் என்று எழுதியுள்ள பக்கத்தை நேரலையில் கிழித்தார்.
இந்த நிலையில் மீனாக்ஷி ஜோஷி என்ற ஊடகவியலாளர், ஹிந்துக்களின் புனித நூலான மனுஸ்மிருதியை பொதுவெளியில் இழிவுபடுத்தி கிழித்ததற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்; இல்லை என்றால் ஹிந்துக்களின் கோபத்திற்கு ஆளாகி கொலைகூட செய்யப்படலாம் – என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
சமூகவலைதளங்களில் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துகொண்டு இருக்கிறது.
ஒரு பக்கத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டைக் கொண்டாட வேண்டிய நாடாளுமன்றத்தில், இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கரை அவமதித்துப் பேசுகிறார்.
இன்னொரு பக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் மனுஸ்மிருதியை எரித்த டிசம்பர் 25ஆம் நாள் குறித்த விவாதத்தில் – அண்ணல் அம்பேத்கர் மனு தர்மத்தை ஏன் எரித்தார் என்ற காரணத்தை ஆதாரத்தோடு உள்ளது உள்ளபடியே எடுத்துக்காட்டிய – பாராட்டத்தக்க வீராங்கனையான ஒரு பெண்மணிக்குக் கொலை மிரட்டல் என்றால், இதனை எப்படி எடுத்துக் கொள்வது!
கருத்துரிமை என்பது ஒரு சார்பானது தானா? ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் மனுஸ்மிருதியை ஏற்றிப் போற்றுவதற்கு உரிமையும், அதனை எதிர்த்துப் பேசுவதற்கு எதிர்ப்பும் – அதுவும் கொலை மிரட்டலும் என்றால் இது தான் ஜனநாயக நாடா? மதச் சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்தும் அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பவர்களுக்கு ஆலவட்டமா?
அதுவும் அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கரைப் பின்பற்றுவது குற்றச் செயலா?
1927 டிசம்பர் 25ஆம் நாள் அண்ணல் அம்பேத்கர் மனுதர்ம ஸ்மிருதியை எரித்தார் என்றால் அதற்கு 23 நாட்களுக்கு முன் (4.12.1927) சுயமரியாதை இயக்கம் குடியாத்தத்தில் எரித்ததே!
மனுஸ்மிருதியை ஒரு பெண்ணாக இருந்து கிழித்தது சாலச் சிறந்ததாகும்.
மனுஸ்மிருதி அத்தியாயம் 9 சுலோகம் 19 என்ன சொல்லுகிறது?
‘பெண்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களென்று அனேக ஸ்ருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன’ என்று அதற்கு திருஷ்டாந்தரமாக அடுத்த சுலோகம் என்ன கூறுகிறது?
‘‘கணவன் சொற்படி நடவாதவள் உலகத்தாரால் நிந்திக்கப்பட்டு, நரியாய்ப் பிறந்து பாவப் பிணியில் வருந்துவாள்’’ என்கிறதே மனுதர்மம்
இதனைக் கிழிப்பதோ எரிப்பதோ என்ன தவறு! – சிந்திப்பீர்!