அமித்ஷாவுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டனம்
திருப்பூர், டிச.22- நாடாளு மன்றத்தில் அம்பேத்கர் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சி.பி. ராதாகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக இருந்தாலும் பாஜகவின் மூத்த நிர்வாகியாக இருந்து பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு பிறகு ஒன்றிய அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் கல்லூரி சாலையில் 20.12.2024 அன்று பாஜக மாவட்டச் செயலாளர் கார்த்திக் என்பவரது ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் மகாராட்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர் களை சந்தித்த போது பேசுகையில், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸுக்கு பிறகு அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் என்றால் அது அம்பேத்கர்தான்.
அரசியல் சாசனத்தை இயற்றிய அம்பேத்கரின் புகழை குறைக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அம்பேத்கரின் புகழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.