சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் எழுச்சியுரை!
சென்னை. டிச.22, அம்பேத்கரை அவமதித் துப் பேசிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச் சருக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சியுரை ஆற்றினார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அதில் இந்தியா கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக 17.12.2024 அன்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்து தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை பெரியார் திடலில் நேற்று (21.12.2024) நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் மாலை 6:30 மணிக்கு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரை வழங்கினார். கழக துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து உரையாற்றினார். கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி முன்னிலை வகித்து உரையாற்றினார்.
கழகத் தலைவர் விளக்கவுரை
கழகத்தலைவர் சிறப்புரை ஆற்றும் போது, ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் அமைப்பான பி.ஜே.பி. ஆகியவற்றின் மரபணுவிலேயே அம்பேத்கரை இழிவாகக் கருதும் நிலை இருக்கிறது என்பதை வரலாற்றின் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நிறுவினார். முக்கியமாக பா.ஜ.க. வைச் சேர்ந்த அருண்சோரி, கால்நூற்றாண்டுக்கு முன்பு அவர் எழுதிய புத்தகத்தில், அம்பேத்கரை மிகச்சாதாரணமாக குறிப்பிட்டு இழிவுபடுத்தியதை அருண்சோரி எழுதிய புத்தகத்திலிருந்தே எடுத்துக்காட்டி, ”அன்றைக்கு அருண்சோரி, இன்றைக்கு அமித்ஷா” என்று விளக்கினார். மேலும் அவர் 1885 இல் காங்கிரஸ் தொடங்கப்பட்ட போது இருந்த காங்கிரசுக்கும், இன்றைக்கு இளம் தலைவர் ராகுல் காந்தி இருக்கும் காங்கிரசுக்கும் பெரியளவில் தத்துவரீதியாக வேறுபாடு இருப்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன், பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் இருந்த தொடர்பு, நட்பு போன்றவற்றைச் சொல்லி, அமித்ஷா போன்றவர்களை அம்பலப்படுத்தி உரையை நிறைவு செய்தார்.
அம்பேத்கர் நூல்கள் தொகுப்பு
இச்சிறப்புப் பொதுக் கூட்டத்தில் ‘அம் பேத்கர் பற்றிய நூல்கள் தொகுப்பு’ – சலுகை விலையில் ரூ.600க்கு வழங்கப்பட்ட தொகுப்பு நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து கழகப் பொறுப்பாளர்களும், பிரமுகர்களும் பெற்றுக் கொண்டனர்.
பங்கேற்றோர்
கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத்தலைவர் வழக்குரைஞர் ஆ.வீர மர்த்தினி, கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பொறியாளர் கரிகாலன், பகுத்தறிவாளர் கழகத் தோழர் மாணிக்கம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், தோழர் யாழ்திலீபன், பாவலர் செல்வமீனாட்சி சுந்தரம், அம்பத்தூர் பெரியார் பெரும்தொண்டர் முத்துக்கிருட்டிணன், ஆ.வெ.நடராஜன், அம்பத்தூர் பகுதித் தலைவர் இராமலிங்கம், திருநின்றவூர் ரகுபதி, ராணி, பெரியார் மாணாக்கன், செல்வி, தொண்டறம், ஆவடி இ. தமிழ்மணி, மெர்சி, வெற்றிச் செல்வி பூங்குன்றன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.