சென்னை, டிச.22 ‘‘‘‘அம்பேத்கர், அம்பேத்கர்‘‘ என்று சதா அவர் பெயரை உச்சரிப்பதற்குப் பதிலாக பகவானை உச்சரித்தால் சொர்க்கமாவது கிடைக்கும்” என்று அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரைக் கண்டித்து கண்டன உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நேற்று (21.12.2024) மாலை 5 மணிக்கு சென்னை இராஜ ரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய கண்டன உரை வருமாறு:
மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், எனக்கு முன்பு உரை யாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் அவர்கள் உள்பட கழகப் பொறுப்பாளர்களே,
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருக்கக் கூடிய அறப்போர் வீரர்களே, வீராங்கனைகளே, தோழர்களே, செய்தியாளர்களாகிய ஊடக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தி னைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது இந்திய நாடு முழுவதும் கொந்தளித்து எழுச்சிமிக்க, மக்களுடைய உணர்வை வெளிப்படுத்துகின்ற ஒரு போராட்டமாக, குமுறலாக, பரிகாரம் தேட முடியாத அளவிற்கு உரிய, மனப்புண்ணை ஆற்றிடவே இந்தப் போராட்டம்.
வன்மம் – கேலி – கிண்டல்!
ஒரு சுதந்திர நாட்டில், 75 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அரசமைப்புச் சட்டத்தை வரையறுத்துக் கொடுப்பதற்கு, இரவு, பகலாக தன்னுடைய உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் பாடுபட்ட எழுச்சி நாயகராக இருக்கக்கூடிய பாபா சாகேப் புரட்சி யாளர் அம்பேத்கர் அவர்களைப் பாராட்டி, உயர்த்தி, பெருமைப்படுத்தி, நன்றி சொல்லவேண்டிய ஒரு கட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க. அரசு – ஆர்.எஸ்.எஸ்.
ஆணைப்படி நடக்கக்கூடிய ஓர் அரசு – அதனுடைய உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷா, வெளியில் அல்ல, பொதுக்கூட்டத்தில் அல்ல – நாடாளுமன்றத்திற்குள்ளே உரையாற்றும்பொழுது, எவ்வளவு நையாண்டித்தனமாக, எவ்வளவுப் பொறுப்பற்ற முறையில், வன்மம் என்ற சொல்லை நம்மு டைய கழகத் துணைத் தலைவர் பயன்படுத்தினார்; அதுகூட மிகச் சாதாரண வார்த்தை – வன்மம் மட்டுமல்ல, அதில் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது; அதிலே கேலி உள்ளடங்கி இருக்கிறது; கிண்டல் உள்ளடங்கி இருக்கிறது. அவமதிப்பு படமெடுத்தாடுகிறது. யார்மீது, அம்பேத்கர்மீது!
அம்பேத்கர்மீது
ஏன் இவ்வளவு ஆத்திரம்?
ஏன் அம்பேத்கர் அவர்கள்மீது இவர்களுக்கு அவ்வ ளவு ஆத்திரம்?
ஒன்றே ஒன்றுதான் – மிக முக்கியமாகக் கோடிட்டுக் காட்டப்படவேண்டிய ஒரு செய்தி.
மிக விரிவாக, விளக்கமாக, பல தகவல்கள் இதுவரை வெளியே வராத, மற்றவர்கள் அறியாத தகவல்களைப்பற்றி, அடுத்த சில மணிநேரத்தில் பெரியார் திடலில் நடைபெறவிருக்கக் கூடிய சிறப்புப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவிருக்கின்றேன்.
அதற்கு முன்பாக, அமித்ஷாவின் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பதைப் பதிவு செய்வதற்குத்தான், திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இது!
இந்த உணர்ச்சிமிக்க ஆர்ப்பாட்டத்தில் எத்தனைப் பேர் இருக்கின்றோம் என்பது முக்கியமல்ல; இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதம் இல்லை. உணர்வு கள்தான். இந்திய நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகள். அந்த உணர்வைத்தான் அப்படியே காட்டுகிறோம்.
நான் அதிகமாகப் பேசுவதைவிட, சிறப்புப் பொதுக்கூட்டத்திற்கான தலைப்பையே நான் சொல்லப் போகிறேன். அதுவே மிகப்பெரிய பதிலடி யாகும். அதற்குப் பிறகு நான் ஒரு சில செய்திகளைச் சொல்கிறேன். எஞ்சிய மிக முக்கியமான பகுதிகளை சிறப்புக்கூட்டத்தில் சொல்கிறேன்.
(“அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்”, “அம்பேத்கர்” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரத்து முழங்க, ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்தோர் அந்தப் பெயரையே சொல்லி முழக்கமிட்டனர்).
அம்பேத்கர்பற்றி நாடெங்கும்
கொண்டு செல்வோம்!
‘‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்” என்று எல்லா நாள்களும் சொல்வோம்; எல்லா இடங்களிலும் சொல்வோம்; எல்லா இடங்களுக்கும் பரப்புவோம்.
அம்பேத்கர் என்ற ஒரு சொல், அவர்களை எந்த அளவிற்குக் குத்தியிருக்கிறது, குடைந்திருக்கிறது, அந்த சொல், எவ்வளவு பெரிய வேலையைச் செய்திருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா?
அம்பேத்கர் அவர்கள், மிகப்பெரிய ஏவுகணை. அவர்களைப் பொறுத்தவரையில், அரசமைப்புச் சட்டம் எழுதிய சட்ட நிபுணர் மட்டும் அல்ல!
மூடநம்பிக்கையாளர்களை, ஜாதி வெறியர்களைப் பொறுத்தவரையில், பார்ப்பன ஆதிக்க சமுதாய உணர்வுகளோடு ஆதிக்கம் செலுத்துபவர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்குள் சென்று இந்த அம்பேத்கர் பெயர் வேலையைச் செய்கிறது.
ஆனால், அவர்களுடைய வெறுப்புணர்வை இதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. உலகத்தில் உள்ள அத்தனை மக்களும் பார்த்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில்தான் இது நடந்தது; வெளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அல்ல.
அம்பேத்கர் செய்த தவறு என்ன?
அம்பேத்கர் அவர்கள் என்ன தவறு செய்தார்?
‘‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்” என்று சொல்லி அங்கலாய்க்கும் அளவுக்கு அவர்களுக்கு வயிற்றெறிச்சல்! அமித்ஷா என்ன சொன்னார்?
‘‘இத்தனை நாளாக அம்பேத்கர் பெயரைச் சொன்னதற்குப் பதிலாக, ‘கடவுள், கடவுள், கடவுள்’ என்று சொல்லியிருந்தால், சொர்க்கத்திற்குப் போயிருக்கலாம்” என்றார்.
ஒரு தவறு செய்ததோடு மட்டுமல்லாமல், அடுத்ததாக அதைவிட மோசமான தவறைச் செய்திருக்கிறார்.
இல்லாத கடவுளை வேண்டுகிறார்; வேண்டச் சொல்கிறார்; இருக்கின்ற அம்பேத்கரைக் கண்டிக்கின்றார்.
இதுதான் பாரதீய ஜனதா கட்சி!
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.
இதுதான் ஆரியம்.
இதுதான் பார்ப்பனீயம்.
இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அம்பேத்கர் பெயரைச் சொல்லாமல் வேறு யார் பெயரைச் சொல்லவேண்டும்!
இரண்டவதாக, அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டைக் கொண்டாடுகின்றபொழுது, ‘அம்பேத்கர், அம்பேத்கர்’ என்று சொல்லாமல், வேறு யாருடைய பெயரைச் சொல்லுவார்கள்?
‘‘மணமகனை ஏனய்யா, மணமேடையில் உட்கார வைத்திருக்கிறீர்கள்?” என்று ஒரு திருமணத்தில் கேட்டால், எவ்வளவு புத்திசாலித்தனம்!
ஒரு பெரிய இராணுவம் இருக்கின்ற நேரத்தில், அந்த இராணுவத்தினருக்கு முன் நிற்கின்ற தளபதியைப் பார்த்து, ‘‘இவருக்கு என்னங்க இங்கே வேலை? ஏன், அவருடைய உத்தரவுக்குக் கீழ்படிகிறார்கள்?” என்று கேட்டால், அது எவ்வளவு அறியாமையோ, எவ்வளவு அகம்பாவமோ,
எவ்வளவு ஆணவமோ அதுபோன்றதுதான் இது என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
அதனால்தான், நாடே கொந்தளித்திருக்கிறது.
பூனைக்குட்டி வெளியில் வந்தது!
தந்தை பெரியார் ஓர் அற்புதமான பழமொழியை அடிக்கடி எழுதுவார்.
‘‘பூனைக்குட்டி வெளியில் வந்தது!” என்பதுதான் அது.
ஒரு கோணிப்பையில் கட்டியிருந்த பூனைக்குட்டி, திடீரென்று வெளியில் வந்துவிட்டது.
‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்’ என்ற சொல்லின் மேல் அவர்களுக்கு எரிச்சல் வந்து, அமித்ஷா சொன்னது. இதன்மூலம் இன்றைக்கு அவர்கள் தங்களை அடையாளங்காட்டிக் கொண்டார்கள்.
ஒப்பனை நிரந்தரமல்ல!
ஒப்பனை (மேக்கப்) என்பது நிரந்தரமானதல்ல; நமக்கு இயற்கையாக என்ன இருக்கிறதோ, அதுதான் நிரந்தரம். அதைவிட்டுவிட்டு, ஒப்பனை செய்துகொண்டால், அது நிரந்தரமல்ல. அதேபோன்று, முகமூடியை (மாஸ்க்) அணிந்துகொண்டு, பா.ஜ.க.விற்கு திடீரென்று அம்பேத்கர்மீது காதல் வந்தது. கொஞ்ச நாள்களுக்கு முன்பு வேஷம் போட்டார்கள். அந்த வேஷத்தைக் கலைப்பதற்கு நாங்கள் அரும்பாடுபட்டு, பல பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கின்றோம்.
ஆனால், அமித்ஷா அவர்கள், ‘‘அந்த வேலை உங்களுக்கு வேண்டாம்; ஒப்பனை போட்டுக்கொண்டது நாங்கள், அந்த ஒப்பனையை நாங்களே கலைத்து விடுகிறோம் என்று தன்னுடைய ஒரிஜனல் முகத்தை வெளியில் காட்டியிருக்கிறார்.
ஒப்பனை போட்டுக்கொள்கின்ற நடிகரை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அது அவர்களுடைய தொழில். அதற்காக ஒப்பனை போட்டுக் கொள்வார்கள். வேலை முடிந்தவுடன், அந்த ஒப்பனையைக் கலைத்துக் கொள்வார்கள்.
அவர்களே போட்ட அந்த ஒப்பனையை அவர்களே கலைத்துக் காட்டிக் கொண்டார்கள் அல்லவா, அது இன்னொரு பக்கம்!
ஒரு பக்கம் கண்டனம்- இன்னொரு பக்கம் இது!
‘‘பூனைக்குட்டி வெளியில் வந்தது!”
ஆனால், அந்தப் பூனைக்குட்டி எலியைப் பிடிக்கப் போகிறதா? அல்லது கிளியோடு இருக்கப் போகிறதா? என்று சிந்திக்கக்கூடிய அளவிற்கு, நாட்டு மக்கள் இன்றைக்கு உணர்ந்திருக்கிறார்கள்.
நாட்டில் எங்கே பார்த்தாலும் இந்த நிலைதான்!
திசை திருப்பும் வேலை!
அதை மாற்றுவதற்காக என்ன செய்தார்கள் என்றால், எப்பொழுதுமே திசை திருப்புகின்ற வேலையைச் செய்வார்கள்.
‘‘அய்யோ, எங்களைத் தாக்கிவிட்டார்கள், தாக்கிவிட்டார்கள்” என்று சொன்னார்கள்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்மீது, வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அதையும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்மூலமாக நாங்கள் கண்டிக்கின்றோம்.
ஜனநாயகத்தினுடைய குரல் வளையை அவர்கள் நசுக்குகிறார்கள்.
செய்தியாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் ஒன்றை நான் சொல்கிறேன்.
நாடாளுமன்றத்தின் வாயிலில் யார் தாக்கினார்கள்? என்ன நடந்தது? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, மின்னணு வசதியின் காரணமாக, சிசிடிவி கேமிராக்கள் இருக்கின்றன. அதில், அங்கே என்ன நடந்ததோ, அதை அப்படியே காட்டிவிட்டது.
ராகுல் காந்தியின்மேல் அவர்களுக்கு எவ்வளவு கோபம் இருந்தது என்றால், எங்கோ அவர் பேசியதை வைத்து, அவர்மீது வழக்குப் போட்டு, நீதிமன்றத்திற்குச் சென்று, அவருடைய பதவியைப் பறித்தனர்; அவர் தங்கியிருந்த வீட்டை காலி செய்ய வைத்தனர். 24 மணிநேரத்தில், அதிக வேக புயல் போன்று வேக வேகமாக செய்தனர்.
அதே போன்று இப்பொழுதும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.
நீங்கள் என்ன செய்தாலும், உங்களுடைய ஒன்றிய ஆட்சி என்பது ஒட்டுப் போட்ட ஆட்சி. மக்கள் கொடுத்திருக்கின்ற தீர்ப்பை உங்களால் மீற முடியவில்லை. அதற்கு ஓர்உதாரணம், உங்கள் கட்சிக்குள்ளேயே, அந்தப் பிரச்சினை வந்தாயிற்று; ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குள்ளேயே அந்தப் பிரச்சினை வந்தாயிற்று.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்
என்ன சொல்கிறார்?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இருக்கக்கூடியவர், அடிக்கடி தன்னுடைய குரலை மாற்றிப் பேசுவார்.
இன்றைக்குச் சொல்கிறார், உத்தரப்பிரதேசத்தில் உள்ள முதலமைச்சரைப் பார்த்து மறைமுகமாகச் சொல்கிறார், ‘‘திடீரென்று சில பேர் ஹிந்துக்களுக்குத் தலைவராகி விடலாம் என்று நினைக்கிறார்கள்; நாங்கள்தான் இதுவரையில் எங்கே கையில் வைத்திருந்தோம்;
இன்னொருத்தர்மூலம் அதைப் பறிக்கலாம் என்று நினைக்கிறார்கள்” என்று சொல்கிறார்.
அந்த முகாமிற்குள்ளேயே குடுமிப்பிடி சண்டை நடைபெறுகிறது.
ஆகவேதான், நீங்கள் ஒரு தவறைச் செய்துவிட்டது மட்டுமல்ல – ஒரு பொய்யைச் சொல்வதில் இருந்து, அந்தப் பொய்யைக் காப்பாற்றுவதற்கு மேலும் ஒன்பது பொய்யைச் சொல்லியாகவேண்டும்.
அது போன்று இருக்கக்கூடிய சிக்கல் இப்பொழுது வந்துவிட்டது. எனவேதான், இதைப்பற்றியெல்லாம் சற்று நேரத்திற்குப் பின் நடைபெறக்கூடிய சிறப்புப் பொதுக்கூட்டத்தில் விரிவாக, விவரமாக, விளக்கமாச் சொல்லவிருக்கின்றேன்.
எனவேதான், இந்த உணர்வுகள் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ, குறிப்பிட்ட மக்களிடமோ இல்லை. இந்தியா முழுவதும் அந்த உணர்வுகள் எழுந்திருக்கின்றன.
ஆகவே, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை வன்மையாகக் கண்டிப்பது மட்டுமல்ல, அம்பேத்கர் அவர்களை இனிமேல் யாரும் இதுபோன்ற பேசக்கூடாது.
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!
நீண்ட காலமாக நாங்கள் திராவிடர் கழக மேடைகளில் ஒன்றைச் சொல்வோம். பெரியார் – அம்பேத்கர் இரண்டு பெயர்கள்தான் உலகம் முழுவதும் இருக்கின்று சொல். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
இப்பொழுது மிக முக்கியமான கருத்து என்னவென்றால், இந்த இரண்டு பேருடைய புகழை யாராலும் தடுக்க முடியாது.
ஒரு காலத்தில், எங்களைப் போன்ற பெரியார் தொண்டர்களுக்கு, அம்பேத்கரைப் போற்றி புகழவேண்டும், பெரியாரை, அம்பேத்கரை பரப்பவேண்டுமே என்கிற கவலை இருந்தது. இப்பொழுது அந்தக் கவலையைவிட, பெரியாரையும், அம்பேத்கரையும் போலிகளிடமிருந்து பாதுகாக்கவேண்டுமே என்கிற கவலை எங்களுக்கு மிகத் தெளிவாக வந்துவிட்டது.
ஆகவேதான், இவர்கள் தங்களைத் தாங்களே காட்டிக் கொண்டுவிட்டார்கள்.
வருத்தம் தெரிவிக்கவேண்டும்!
அண்ணல் அம்பேத்கரை அவமதித்தவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உண்மையிலே பெருந்தன்மை உள்ளவராக இருந்திருந்தால், அமித்ஷா அவர்கள் வருத்தம் தெரிவித்திருக்கவேண்டும். ‘‘நான் சொன்ன சொற்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா!
பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்கவில்லையா?
விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தபொழுது, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொந்தளித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டபொழுது, பிரதமர் மோடி அவர்கள், ஒப்புக்குச் சொன்னாரா, உள்ளத்திலிருந்து சொன்னாரா என்று தெரியாது. ஆனால், ‘‘அந்த மூன்று சட்டங்களை நான் திரும்பப் பெறுகிறேன். அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று சொன்னாரே, அதுபோன்று, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், வருத்தம் தெரிவித்திருந்தால், இந்தப் பிரச்சினை பெரிதாக ஆகியிருக்க வாய்ப்பில்லையே!
இந்தப் பிரச்சினை பெரிதாக ஆகவேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா?
விலைவாசி ஏற்றம், பண வீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டத்தைப்பற்றியெல்லாம் மக்கள் பேசக்கூடாது. அதற்குப் பதிலாக, அம்பேத்கர் பிரச்சினையை பேசவேண்டும். இதுதான் திசை திருப்புகின்ற வேலை. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குக் கைவந்த கலையாகும். பி.ஜே.பி., மோடி ஆட்சியினுடைய மிகப்பெரிய திசை திருப்புகின்ற வேலை ஆகும்.
மக்களை வாட்டக் கூடிய வேலையில்லாத் திண்டாட்டம்,
மக்களை வாட்டக் கூடிய வறுமை,
மக்களை பாதிக்கக் கூடிய விலைவாசி ஏற்றம், பண வீக்கம் இந்தக் கொடுமைகளைப்பற்றி நாடு முழுவதும் உள்ள மக்கள் பேசுவார்கள். இந்தப் பிரச்சினைகளைப்பற்றி மக்கள் பேசாமல் இருப்பதற்காக, இப்படி ஒரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டால், அந்தப் பிரச்சினையைப்பற்றி மட்டும்தான் பேசுவார்கள்; விலைவாசி ஏற்றத்தை மறந்துவிடுவார்கள்.
இது அவர்களுக்குக் கைவந்த கலை, தேர்ந்த முறை, திசை திருப்புகின்ற முயற்சி.
இவற்றையெல்லாம் மக்கள் புரிந்திருக்கின்றார்கள். அவர்களுக்குப் புரிய வைக்கின்ற பணியைச் செய்யக்கூடிய நாங்கள் சரியாக இருக்கிறோம்.
‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்”. இப்பொழுது கருப்புச் சட்டைக்காரன் மட்டுமல்ல, கதர் சட்டைக்காரர்களும் சரி, நீலச் சட்டைக்காரர்களும் சரி, சிவப்புச் சட்டைக்காரர்களும் சரி எல்லோரும் ஒன்று திரண்டிருக்கின்றோம்.
அதனால், இப்பொழுது வண்ணங்கள் முக்கியமல்ல; ஒரே எண்ணம்தான் இருக்கிறது.
எனவே, ஒன்றிய உள்துறை அமைச்சரின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம்.
‘‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்!”
மீண்டும் சொல்வோம், ‘‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்”, உலகம் முழுவதும் அம்பேத்கர். உலகம் முழுவதும் அம்பேத்கர். (திரண்டிருந்தோர் அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொன்னார்கள்).
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கண்டன உரையாற்றினார்.