(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
வருணாசிரமம் பிறப்பின் அடிப்படையிலா – குணத்தின் அடிப்படையிலா?
‘துக்ளக்’காக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதமாக இருந்தாலும் சரி, ஆளுநர் ரவியாக இருந்தாலும் சரி, ஒன்றை அவர்கள் திட்டமிட்டு முரட்டுத் திரை போட்டு மறைக்கிறார்கள்.
ஹிந்து மதம் கூறும் சனாதனம், வர்ணாஸ்ரமம் என்பது எல்லாம் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பது எல்லாம் பிறப்பின் அடிப்படை யிலானது அல்ல; குணத்தின் அடிப்படையிலானதே என்று அடம்பிடிக்கிறார்கள்.
‘துக்ளக்’கில் ”சோ” ராமசாமி இப்படி எழுதினார்:
“இந்த நிலையிலே ஒரு விஷயத்தை தெளிவாக்கி விடுவது நல்லது. இந்த நான்கு வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை அல்ல – குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர் கள் இப்படி வகைப்படுத்தப்பட்டனர். இதுபற்றி ‘எங்கே பிராமணன்’ தொடரில் விளக்கமாக எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையிலும் ஓரளவுக்கு இவ்விஷயத்தைப் பார்க்க நேரிடலாம். குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள், காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து, பிறப்பின் அடிப்படையில் ஏற்படுகிற பிரிவு களாக உருவெடுத்து விட்டன” என்று சாதிக்கிறார்.
‘சோ’வின் கட்டுரையில் பிற்பகுதி முழுவதுமே இதனை மய்யமாக வைத்தே புனையப்பட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுத்து விட்டாலே அந்த எல்லாவற் றிற்குமே போதுமானதாகி விடும்.
வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையிலானது அல்ல என்பது ‘சோ’வின் வாதம்.
இது அடிப்படையிலேயே தவறானது என்பது இந்து மதத்தின் அடிப்படை ஆதாரங்களைக் கொண்டே தகர்த்து விடலாம்.
”சோ” குறிப்பிடும் வேதங்களுள் ‘யஜூர் வேதம் ஒன்று; அதன் அத்தியாயம் 31 சுலோகம் 11 என்ன கூறுகிறது?
“ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹு ராஜன்ய: க்ருத:|
ஊரூததஸ்ய யத்வைஸ்ய பத்ப்யாம் சூத்ரோஅஜாயத”||
(கடவுளின் முகத்தினின்றும் பிராமணன் பிறந்தான், தோள்களினின்றும் க்ஷத்திரியன் பிறந்தான், தொடை களினின்று வைசியன் பிறந்தான், பாதங்களினின்று சூத்திரன் பிறந்தான்).
அதர்வண வேதம் என்ன கூறுகிறது?
“ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன் யோபவத்|
மத்யம் ததஸ்ய யத் வைஸ்ய: பத்ப்யாம் சூத்ரோ அஜாயத”||
(அத்தியாயம் 19 சுலோகம் 6)
யஜூர் வேதத்தில் கூறப்பட்ட அதே பொருள்தான் இதற்கும்.
“மனுர்வையத் கிஞ்சிதவத் தத் பேஷஜம்” – இதன் பொருள் மனு எதைச் சொன்னாரோ அது மருந்து என்பதாகும்.
பதினெட்டு ஸ்மிருதிகள்; மனுஸ் மிருதிக்கு விரோத மாய் மற்ற பதினேழு ஸ்மிருதிகளும் ஒரே வாக்காய்ச் சொல்லியிருந்தாலும், அது ஒப்புக் கொள்ளத்தக்கதன்று என்று மனுதர்ம சாத்திரம் பீடிகை கூறுகிறது. – அவ்வளவுப் பெரிய அந்தஸ்து மனுதர்ம சாத்திரத்துக்கு!
அந்த மனுவானப்பட்டவரும் என்ன கூறுகிறார்?
அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறு மைக்கு உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார் (அத்தியாயம் ஒன்று சுலோகம் 87).
வேதங்களும், மனுதர்ம சாத்திரமும் இதன் மூலம் எதை உறுதிப்படுத்துகின்றன?
பிரம்மா என்ற கடவுள் படைப்பிலேயே பிறப்பின் அடிப்படையிலேயே தன் உடலின் பல்வேறு பாகங் களிலிருந்தும் பிராமணன், க்ஷத்திரியன். வைசியன். சூத்திரர்களைப் படைப்பித்து இருக்கிறான் என்பது திட்டவட்டமாகத் தெளிவாக்கப்பட்டுள்ளதா இல் லையா?
படைக்கப்படும் போதே இந்தப் பிரிவுகளை பிறப்பின் அடிப்படையில் பிரம்மா படைத்து விட்டார் என்று இந்து மத வேதங்களும், ஸ்மிருதியும் கூறிவிட்ட நிலையில், பிறப்பின் அடிப்படையில் இவை உண்டாக் கப்படவில்லை என்று ‘சோ’ போன்றவர்கள் கூறுவதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
வேதங்களையும் ஸ்மிருதிகளையும் மறுக்கும் மகா புரட்சியாளராக ‘சோ’ மாறி விட்டாரா?
அல்ல அல்ல! வேதங்கள், ஸ்மிருதிகள் கூறிய வற்றை ஏற்றுக் கொண்டு அவற்றின் அடிப்படையில் விவாதிக்க முயற்சித்தால் அவாளின் இந்துத்துவா கபாலம் கழன்றுவிடும் என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும் கடவுளே ஆனாலும், காந்தியாரே ஆனாலும் அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் காரியத்துக்கு எந்த அளவுக்குப் பயன்படும் என்பதைப் பொறுத்ததேதான்.
”’சோ” வியாக்கியானம் செய்வது போலவே வேறு சிலரும் இந்தக் காரியத்தில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கு ஆப்பு அடிக்கும் வகையில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ் வதியார் விளக்கமாகவே கூறி இருக்கிறார்.
இந்து மத சமாச்சாரங்களுக்கு வியாக்கியானம் கூற ‘சோ’ போன்றவர்களைவிட சங்கராச்சாரியார்தான் தகுதியானவர் என்பதை ‘சோ’வே மறுக்க முடியாதே!
காஞ்சி சங்கராச்சாரியாரின் ‘தெய்வத்தின் குரல்’ – முதல் பாகம் (பக்கம் 1001-1003) என்ன கூறுகிறது?”
“ஜாதி வித்யாஸமே இல்லை என்று பகவான் சொல்லவில்லை; ஆனால், பிறப்பின்படி இன்றி, குணத்தின்படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர் வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத் தான் சொல்கிறார். ‘சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச’ என்றே சொல்கிறார் என்கிறார்கள்.
சரி, ஆனால், எத்தனை வயசுக்குமேல் இப்படிக் குணத்தை அறிந்து அதை அநுசரித்து அதற்கான வித்தையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாஸம் பண்ணுவது? முக்கியமாக பிராமணனின் தொழிலை எடுத்துக் கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால்தானே அப்புறம் பன்னிரெண்டு வருஷங்களில் தன் தொழிலுக்கான வற்றைப் படித்துவிட்டுப் பிறகு அவற்றில் தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்க வேண்டியதைப் போதிக்கவும் முடியும்? குணம் ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இளவயசு முழுதும் பல பேர் தொழிலைத் தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் ‘சோ’ம்பேறியாக ஒரு தொழிலுக்கும் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக் கொண்டு தொழிலுக்குப் போகும்போதும் சமூகத்துக்கு அவனால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான காலம் நஷ்டமாயிருக்கும். க்ஷணகாலம்கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று திருப்பித் திருப் பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப் பேசியிருப் பாரா?
அப்படியானால் அவர் ‘தியரி’யில் (கொள்கை யளவில்) குணப்படி தொழில் என்றாலும், ‘ப்ராக்டிஸில்’ (நடைமுறையில்) பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆதரித்தாரா? என்றால், பாலிடீஷியன்கள் (அரசியல் வாதிகள்) போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல.
சரி அவருடைய வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கிறோம்? “நான் யுத்தம் பண்ண மாட்டேன்; பந்து மித்தரர்களின் ரத்தத்தைச் சிந்தி சாம்ராஜ்யாபிஷேகம் பண்ணிக்கொள்வதைவிட, ஆண்டிப் பரதேசியாக பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவது எத்தனையோ மேல்” என்று சொல்லிக்கொண்டு தேர்த் தட்டில் உட்கார்ந்து ஸ்த்யாக் ரஹம் பண்ணிவிட்ட அர்ஜூனனிடம் அவர் என்ன சொன்னார்?. “நீ க்ஷத்திரிய ஜாதியில் பிறந்தவன். யுத்தம் பண்ணுவதுதான் உன் ஸ்வதர்மம். எடு வில்லை – போடு சண்டையை” என்றுதான் அவனைவிடாப் பிடிவாதம் பிடித்து – அவனை யுத்தம் பண்ண வைத்தார்.
அப்படியானால் தர்ம புத்தரரின் விஷயம் என்ன? சண்டையே கூடாது. சமாதானமாகவே போய்விட வேண்டும் என்று தானே அவர் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வந்திருக்கிறார்?… அவரையும் பரமாத்மா க்ஷத்ரிய தர்மத்தைத்தான் அநுஷ்டிக்கப் பண்ணினார் என்றால், அவர் “ஸ்வதர்மம்” என்கிறபோது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்றுதான் அர்த்த மாகும். பிராமணராகப் பிறந்தும் சத்திரிய தர்மப்படி யுத்தத்தில் இறங்கிய த்ரோணாச்சாரியார் மாதிரியான வர்கள் பெரியவர்கள் என்பதால் பகவானாக அவர் களை நிந்திக்க மாட்டாராயினும், பீமஸேனன் போன்ற வர்கள் இவர்களை ஜாதி தர்மம் விட்டதற்காகக் குத்திக் காட்டிப் பேசியபோதெல்லாம் பகவான் ஆட்சேபித்த தில்லை. அதனால் பிறப்பால் ஏற்படுகிற ஜாதி தர்மமே அவர் சொன்ன ஸ்வதர்மம் என்று உறுதியாகிறது. அப்படியானால், ஏன் “குணகர்ம விபாகச” என்றார் என்றால், இந்த ஜாதி தர்மமே தான் உள்ளூர அவரவரின் குணமாகவும் இருக்குமாதலால் குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும், பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றேதான்; ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தியரி, ப்ராக்டீஸ் என்று வெவ்வேறு விஷயங்களைச் சொல்கிற தோஷம் பரமாத்மாவுக்கு ஏற்படவில்லை” என்று சங்கராச் சாரியார் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் இந்த சனாதன வாதிகள்? குணத்தின் அடிப்படையில் வர்ணம் – அதற்குரிய தொழில்கள் என்பது சாத்திய மில்லை என்று பாஷ்யம் கூறி விட்டாரே – இதற்குமேல் ‘சோ’ வகையறாக்கள் முண்ட முடியுமா?
ஜாதி வேறு, வர்ணம் வேறு என்று பிரிக்க முயலுவதற்கும் இதில் பதில் இருக்கிறதே – இதற்கு என்ன பதில்?
காஞ்சி சங்கராச்சாரியார் மட்டுமல்ல; பூரி சங்கராச்சாரியாரும் இதுபற்றி என்ன கூறி இருக்கிறார்? 16.6.1974 ‘ஆனந்த விகடனில்’ மணியன் பேட்டி கண்டு வெளி வந்துள்ளது.
அது இதோ;
மணியன் கேள்வி: தமிழ்நாட்டில் அரிஜனங்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்களே. அதைப்பற்றி..?
பூரி சங்கராச்சாரியார்: அர்ச்சனை நடத்த அவர் களுக்குத் தகுதியில்லை. ஆகவே அவர்களை அர்ச்ச கர்களாக நியமிப்பது சரியில்லை.
மணியன்: அர்ச்சனை முறைகளைக் கற்றுக் கொள் ளலாம் அல்லவா? அதற்குப் பிறகு அர்ச்சகர்களாகப் பணிபுரியும் தகுதி இவர்களுக்கு ஏற்படலாமா?
பூரி சங்கராச்சாரியார்: அவர்களுக்குத் தகுதியில்லை. அவ்வளவுதான். மேலே இதைப்பற்றிய விவாதத்திற்கே இடம் இல்லை.
மணியன் : ‘சாதுர்வர்ணா ஸ்மயர்சிருஷ்டம்’ என்ற கீதையின் சுலோகத்தைப் பற்றி சுவாமிகள் என்ன கருதுகிறீர்கள்?
பூரி சங்கராச்சாரியார்: பிராமணர் சத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற நால்வகையினரையும் தாமே படைத்ததாகக் கடவுள் கூறுகிறார்.
மணியன்: ஆனாலும் குணம். தொழில் அடிப் படையில் குணகர்மா என அவர்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தானே கீதாசிரியன் கூறுகின்றார்?
பூரி சங்கராச்சாரியார்: இக்காலத்துக் குண கர்மங்களின் அடிப்படையில் அல்ல, முற்பிறவியில் அவர்கள் செய்த குண கர்மங்களின் அடிப்படையில் தான் பிராமணர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் என்றும் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொருவனும் ஒவ்வொரு குலத்தில் பிறக்கிறான். அந்தக் குலப்படி அவன் கடமை ஆற்ற வேண்டும்; அதிலிருந்து தப்ப முடியாது என்று கூறியிருக்கிறாரே!
பூரி சங்கராச்சாரியாரின் இந்தப் பேட்டி அபத்தம், முட்டாள்தனம் என்று ஆன்மிகவாதிகள் கூறத் தயாரா?
சங்கராச்சாரியார் கூறுவது ஒருபுறம் இருக்கட்டும் ‘ஜீயர் சுவாமிகள்’ என்ன கூறுகிறார்? அகோபில மடம் அழகிய சிங்கரின் பேட்டி ‘கல்கி’யில் (14.7.1982 வெளி வந்ததே!
இதோ அது:
கேள்வி: ‘ஹரே கிருஷ்ணா’ என்று ஓர் இயக்கம் அமெரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவி வருகிறதே. இந்தியாவில்கூட இவ்வியக்கத்தினர் சுற்றுகிறார்களே!
ஜீயர் பதில்: நாமம் இட்டுக்கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு, காவி உடுத்தி இங்கேயும் ஒருத்தன் வந்தான் வாயெல்லாம் மந்திரங்கள்.. பெருமாள் பெய ரையே சொல்லிண்டு இருக்கான். பூணூல் போட்டிருக் கான். உட்காரச் சொல்லி சாப்பாடு போட்டேன். உபசரித்து அனுப்பினேன். அவ்வளவுதான் பூணூல் போட்டதுனால் மட்டுமே ஒருவன் பிராமணனாகி விட மாட்டான் – அவனவன் பிறப்பால் எதுவோ அதுதான் சாஸ்வதம், நல்ல காரியங்கள் செய்து பகவான் பெயரைத் தியானிக்கிறதுனாலே அவனது ஜாதிக்குள் உயர்ந்தவனாகிறான்.
மொட்டைத் தலையில் ஆணி அடித்ததுபோல ஜீயரும் சொல்லி இருக்கிறாரே – ஆன்மிகவாதிகளின் பதில் என்ன?
இப்பொழுது இந்த ஆன்மிக சனாதனவாதிகளுக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. வேதங்களும் ஸ்மிருதி களும், சங்கராச்சாரியார்களும், ஜீயர்களும் சொன்ன தெல்லாம் அசல் முட்டாள்தனம் – அயோக்கியத்தனம் நாங்கள் சொல்லுவதுதான் உண்மை – நூற்றுக்கு நூறு உண்மை என்று சாதிக்க வேண்டும்; இல்லாவிட்டால் ஆழம் தெரியாமல் இந்தப் பிரச்சினையில் காலை விட்டு விட்டோம் – ஆளை விடுங்கள் என்று ஜகா வாங்கப் போகிறார்களா?
”சோ” தான் இறந்து விட்டார் – இன்றைக்கு அதே ‘சோ’வின் பூணூல் வாரிசான திருவாளர் குருமூர்த்தி அய்யர்கள் பதில் சொல்லட்டுமே – பார்க்கலாம்.
சனாதனம் பேசும் ஆளுநர்கள், விஜயபாரதங்கள், ஆன்மிக இதழ்கள், ‘சோ’ போன்றவர்களைக் காப்பாற்றப் போகிறார்களா? அல்லது அவர்களின் மகாமகானான சங்கராச்சாரியாரைக் கைவிடப் போகிறார்களா?
பதில் தேவை.