வங்காள சுயராஜ்யக் கட்சியிலிருந்த முஸ்லீம்க ளெல்லாம் ஒருவர் பின் ஒருவராய் விலகிக்கொண்டே வருகிறார்கள். கடைசியாக வங்காள முஸ்லீம்களின் தலைவரும் வங்காள நகரசபையின் டிப்டிமேயருமான டாக்டர். அப்துல்லா சுக்ராவர்த்தி சுயராஜ்யக்கட்சியின் மெம்பர் ஸ்தானத்தை ராஜி நாமாக்கொடுத்து விட்டார்.
பதவி விலகலுக்குக் காரணம்
அவர் மேற்படி ராஜிநாமாவுக்குக் காரணம் கூறுகையில் சுயராஜ்யக்கட்சியின் தத்துவம் தமக்குப்பிடிக்கவில்லை யென்றும், அதனால்தான் தாம் ராஜிநாமாக்கொடுத்து விட்டதாகவும் தாம் இன்னமும் தேசத்திற்கு உழைக்கத்தயாராயிருப்பதாகவும், தாம் ராஜிநாமாக் கொடுத்ததின் காரணமாக தனக்கு ராஜிய உலகிலிருந்த செல்வாக்குகள் குறைந்தபோதிலும் ஒரு புதிய கொடுமைக்கு உட்பட்டு உயிரைவைத்துக் கொண்டிருப்பதைவிட அரசியல் தற்கொலை செய்து கொள்வதுமேல் என எண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
வங்காளத்தில் இப்படியென்றால், பம்பாயிலும் சுயராஜ்யக் கட்சியாருக்கும், இந்து முஸ்லீம்களுக்கும் ஒற்றுமை இல்லாமல் இருவருக்குள்ளும், ஒத்துழைக்க முடியாதெனக்கூறி அவர்களுடன் ஒத்துழையாமை ஆரம்பித்திருப்பதாய் தெரியவருகிறது.
சுயராஜ்யக் கட்சியின் பிரசாரம்
நமது மாகாணத்திலும் மதுரையில் சில சுயராஜ்யக் கட்சியார் சில முஸ்லீம்கள் விஷயமாய் நடந்துகொண்டது மதுரையில் சுயராஜ்யக் கட்சியின் பிரசாரம் என்ற தலைப்பின்கீழ் தினசரிப்பத்திரிகைகளில் பார்த்தால் தெரியவரும். அதுமாத்திரம் அல்லாமல் முஸ்லீம்களுக்குப் பெரிய உத்தியோகங்கள் வருகிறகாலத்தில் இவர்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்களென்பதை முஸ்லீம் பெரிய உத்தியோகஸ்தர்களைக் கேட்டால் தெரியவரும்.
குழம்பு, காய்கறி முதலிய பதார்த்தங்களுக்கு வாசனை உண்டாக்கிக் கொள்ளவேண்டி தாளிதம் செய்யும்போது கறிவேப்பிலையை உபயோகித்துக்கொண்டு, சாப்பிடுகிற போது அதை எடுத்து தூரஎறிந்து விடுவதுபோல் சமயத்திற்குச் சேர்த்துக்கொண்டு சமயம் தப்பியவுடன் வெளியில் தள்ளிவிடுவதை நமது நாட்டு முஸ்லீம்கள் மாத்திரம் அல்லாமல் நமது நாட்டு இதரமக்களும் அறியவேண்டுமாய் ஆவல் கொள்ளுகிறோம்.
– குடிஅரசு – துணைத் தலையங்கம் – 23.08.1925