மத்தியப்பிரதேசத்தின் தொழில் நகரமாக கருதப் படும் இந்தூரில் பெரும்பாலான தொழிலதிபர்கள் வீடுகளில் இந்த பதாகைகள் தொங்குகின்றன. (படம் பார்க்கவும்)
“பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் என்ற பெயரில் வந்து மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலால் நிம்மதியை இழந்துவிட்டோம். ஆகவே இந்த வீட்டை விற்றுவிட்டு போகிறோம், கேட்ட விலைக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்;. வீட்டை வாங்க விரும்புபவர்கள் இந்த எண்களில் தொடர்பு கொண்டு வீட்டை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று எழுதி யுள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து சமூகவிரோதிகள், போதை மருந்து கடத்துபவர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் உள்ளிட்ட பலரை தொடர்ந்து பா.ஜ.க.வில் சேர்த்துவருகின்றனர். அவர்கள் கட்சியில் இணைந்த பிறகு தொடர்ந்து குற்றங்களைச் செய்து வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்படும் செய்திகள் நாளிதழ்களில் அன்றாடம் வருகின்றன.
கள்ளக்குறிச்சியில் விவசாயி ஒருவர் வீடு கட்டிக் கொண்டு இருக்கும் போது அந்த மாவட்ட பாஜக நிர்வாகி “எனக்கு ரூ.10000 கொடுத்துவிட்டு வீட்டு வேலையை ஆரம்பி” என்று மிரட்டியுள்ளார். மேலும் அவர் வீட்டு வேலை செய்ய வருபவர்களைத் தடுத்து அடாவடித்தனம் செய்துள்ளார். அவர் மீது புகார் கொடுக்கப்பட்டதால் அவர் கைது செய்யப் பட்டுள்ளார். ஆனால், இவர்கள் பிணையில் வெளிவந்த பிறகும் இதைவிட மோசமாக நடந்து கொள்கிறார்கள்; ஒன்றியத்தில் பாஜகவின் ஆட்சி உள்ளது. இங்குள்ள பாஜக தலைமை இவர்களின் நடவடிக்கைக்குப் பெரிதும் துணை போகிறது என்றே தெரிகிறது. ஏற்கெனவே கோவையில் தொழிலதிபர் களை சந்தித்து நிதி வசூல் என்ற பெயரில் மிரட்டிப் பணம் பறித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இதுபோன்ற நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்குமானால், தமிழ்நாடு அரசு – காவல்துறை கைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிராது.
அதே நேரத்தில் அங்கொன்றும், இங் கொன்றும் தானே நடக்கிறது என்று அலட்சியமாக இல்லாமல் விஷமம் தொடங்கப்படும் இடங்களில் எல்லாம் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.
குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந் தவர்களை எல்லாம் கட்சியில் சேர்த்து வருகிறது பா.ஜ.க. என்பது நினைவில் இருக்கட்டும்.
சில இடங்களில் அரசு புறம்போக்கு இடங்களை வளைத்துப் போட்டு, கோவில் கட்டி வருவாய்க்கு வழியும் தேடுகிறார்கள்.
இந்து அறநிலையத் துறை இதனைக் கவனித்துக் கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கிறோம். மாண்புமிகு அமைச்சர் பி.கே. சேகர்பாபு இத்தகையவர்களை அடையாளங் கண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவது உண்மை.
அதே நேரத்தில் தாம்பரம் நகராட்சி மூங்கில் நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் இந்து அறநிலையத் துறைக்குக் கட்டுப்பட்டது. ஆனால் தனியார் சிலர் ஆக்கிரமித்து குடமுழுக்கும் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரியது செய்வார்கள் என்று எதிர்ப் பார்க்கிறோம்.