மனித இயல்பை மிஞ்சியவர் – டாக்டர் ஏ.சி.ஜான்சன்

viduthalai
3 Min Read

நான் அரசியலில் என்றுமே அக்கறை இல்லாதவன். எனினும் அவரது மனோவசியப் பேச்சினால் கவரப்பட்டேன். கூட்டத்தினரைச் சுற்றிலும் தமது ‘மாயவலை’ எனும் பேச்சினை இந்தக் கைதேர்ந்த நெசவாளி நெய்தபோது அதனைக் கேட்டு எனது உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தன; அப்பேச்சு என்னை அப்படியே வாரிக் கொண்டு போயிற்று. பலமுறை, கூட்டம் தொடங்குவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்பாக, அவர் சொல்லொணாத உடல் வேதனையினால் கஷ்டப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.

இந்த வேதனையே அவரது மனத்தின் கவனத்தை அலைக்கழித்துவிடும் என்று நான் அஞ்சியிருக்கிறேன். எனினும், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அவர் ஒரு தடவை கூட இடர்ப்பாடு அடைந்ததை நான் கண்டதில்லை. இது ஒன்றே பெரிய சாதனையாகும் – மனித இயல்பினை மீறிய அதிமனித சாதனையாகும்.

அவர் ஆணையிட்டிருந்தால் மருத்துவத் தொழிலையே துறந்திருப்பேன் அவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு – அவரது பொதுக் கூட்ட உரைகள் சிலவற்றை நான் கேட்ட பிறகு – அவர் என்னைப் பார்த்து, உன் மருத்துவத் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டுத் தமது பணியில் நாட்டை மேம்படுத்தும் அவர்தம் பணியில் சேர்ந்துவிடும்படி கேட்டிருப்பாரேயானால், நான் அவ்வாறே செய்திருப்பேன்; அது எனக்குப் பெரிய கவுரவம் என்றும் கருதியிருப்பேன், நான் அந்த அளவுக்குப் பக்குவப்பட்டு விட்டேன்.

அறிவியல் அடிப்படையிலான நிகழ்ச்சி ஒன்றினை நான் எவ்வாறு ஆராய்ந்திருப்பேனோ அதே போலப் பெரியாரையும் நான் ஆராய்ந்திருக்கிறேன். நான் எனது இந்த ஆய்வில் மிகவும் ஜாக்கிரதையாக, இருந்தேன்; மிகுந்த கவனத்துடன் நான் படுத்து ஆராய்ந்தேன், என் அறிவில் பட்டது இது தான் – பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் மாமனிதர்களுள் ஒருவரே பெரியார்.

சிலருக்கு அறிவாற்றல் மிகுந்திருக்கும்; ஆனால் அதற்கு இணையான உடல் வலிமை இருக்காது. இவை இரண்டும் பெற்றிருந்தால், முரண்பாடுகளைச் சந்திக்கும் துணிச்சலும் பெரியார் பாதிக்கப்பட்டிருந்த அளவு உடல் நிலையில் இடர்ப்பாடுகள் நிறைந்து 90 வயதிலும் கூட கடுமையாக உழைக்கும் தெம்பும் பெற்றவர்கள் வரலாற்றில் யாருமே இருந்ததில்லை.

சீர்திருத்த சக்கரத்தை இயக்கிவிட்டார்

மூடநம்பிக்கை, பேராசை, சுயநலம், அச்சம், துணிவின்மை போன்ற பலப்பல சக்திகள் பெரியாரின் இலட்சியங்களுக்கு எதிராக இன்னமும் கூட செயற்படுகின்றன. எனினும் பெரியார் சீர்திருத்தச் சகடத்தின் சக்கரங்களை இயக்கி வைத்து விட்டார். பெரியார் நட்டு வளர்த்துள்ள மரம் ஒரு நாள் கனி தரும் என்பதை நாம் நம்பலாம்.

பெரியார், சாதாரணமான மனிதன் ஒருவனைப் போலத் தமது வாழ்வின் சுவைகளை என்றுமே அனுபவிக்கவில்லை. அவரது வாழ்க்கை முழுவதுமே தியாகமயமானது. பணங்காசில் அவர் மிகவும் காரியக்காரராக இருந்தார் என்று பலர் பலபடப் பேசுகிறார்கள். பணம் தான் பெரியாருக்கு வைட்டமின் சத்து என்று கூட நகைச்சுவையாகக் கூறப்பட்டது. இது உண்மையே! என்றாலும் அவர் இந்த வைட்டமின் சத்தினைத் தமக்காக என்றுமே சாப்பிட்டதில்லை. நாட்டுக்கே அந்தச் சத்தினை வழங்கினார். நாட்டுக்குத் தானே அந்தச் சத்துப்பொருள் மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டது. தன்னிடமிருந்த சத்துப் பொருளை (பணத்தை) அவர் மருத்துவமனைகள், பள்ளிகள், அனாதை இல்லங்கள், பிற நிறுவனங்கள் போன்றவற்றை நடத்தும் அறக்கட்டளைகள் என்ற வடிவில் வாரி வழங்கிவிட்டார்.

படுத்துறங்குவதற்கு வசதியான படுக்கை அவருக்கு இருந்ததில்லை. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப மனிதன் தனக்குத் தேவையென்று விரும்பக் கூடிய வசதிகளைக் கூட அவர் அனுபவிக்கவில்லை.

அவர் குரல் ஓயாது

இந்தத் தலைவரின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது இடிக் குரலில் பெரியார் முழங்கும் பேருரைகளை இனி ஒலிப்பதிவு நாடாக்களிலன்றிக் கேட்க இயலாது. கருணை பொங்கித் ததும்பும் அவரது திருமுகத்தையும் அவரது அபாரத் துணிச்சலையும் இனி நமது இதயத்தின் நினைவலைகளிலும் புகைப்பட உருவங்களிலும் தான் காணமுடியும். என்றாலும் அவர் இயக்கிவைத்த சிந்தனையின் அதிர்வு அலைகள் ஓய்ந்துவிடவில்லை. அவற்றை ஒழிந்துவிடுவது என்பதும் யராலும் எப்போதும் இயலாது!

தந்தை பெரியார் 96ஆம் ஆண்டு
பிறந்தநாள் ‘விடுதலை’ மலர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *