1950 அக்டோபரில் வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆங்காங்கே உணவு விடுதிகளில் “பிராமணாள்” பெயர்ப் பலகை அழிப்பும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரயில்வே நிலையங்களில் ஹிந்தி எழுத்துகளும் அழிக்கப்பட்டிருந்தன.
சில இடங்களில் யார் செய்தார்கள் என்ற விவரமே தெரியாமல் நடைபெற்றன. இது தந்தை பெரியார் அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது, 17.10.1950 அன்று ‘விடுதலை’ வாயிலாக அறிக்கை ஒன்றை தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்டார்கள்.
“சில விளம்பரப் பலகைகளில் இன்னார் செய்தார்கள் என்று அறிய முடியாமல் இரகசியமாய் அழிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன இது தவறு, பெருந்தவறு. முதலாவது போர்டுகள் அழிக்கப்படக் கூடாது. அதிலும் கண்டிப்பாய் இரகசியத்தில் அழிக்கப்படக் கூடாது.
இது இழிவும், அவமானமும் கோழைத் தனமானதுமாகும்.
அழிக்கவேண்டிய அவசியம் ஏற்படுமானால், அறிவிப்புக் கொடுத்துவிட்டு வெளிப்படையாகச் செய்யலாம். அதுவும் இப்பொழுது தேவை இல்லை. அழிக்காதவர்கள் கடைமுன் நின்று அவர் கடைகளுக்கு மற்றவர்கள் செல்லாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளலாம்.
அதுவும் நம் கழகத்தின் அனுமதி பெற்றுக் கொண்டுதான் செய்யவேண்டும்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை விடுத்தார்கள்.