பெரியாரைக் காண ஈரோடு சென்றேன். என்னை அன்பாக வரவேற்று தமது மனைவியாருக்கு அறிமுகம் செய்தார்.
எனது திடீர் வருகை அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. சேலம் வந்தேன்; உங்களையும் காண விரும்பினேன் என்றேன்.
சிறிது நேரம் உரையாடினோம். குளியல் அறையைக் காட்டினார். பயண அலுப்புத் தீரக் குளித்தேன். குற்றால அருவிபோல் ஜலம் கொட்டியது.
பெரியார் என்னை அறிந்தவர். என்னுடைய ஆஸ்திகக் கொள்கைகள் அவருக்குப் பிடிக்காதவை. ஆயினும், அவர் இதற்காக வேற்றுமை காட்டாமல் வீட்டிற்கு வந்த அதிதியை எப்படி வரவேற்று உபசரிக்க வேண்டுமோ அப்படி வரவேற்று உபசரித்தது எனக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.
அவருடைய துணைவியார் கூடத்தில் மெழுகிக் கோலமிட்ட இடத்தில், பூசை செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.
அனுஷ்டானங்கள் முடித்து சூரிய நமஸ்காரம் செய்து, பூசை அறைக்குத் திரும்பினேன். வெள்ளித் தாம்பாளத்தில், பூசைக்குரிய புஷ்பங்கள், பிற பொருள்கள் கொண்டுவந்து வைத்தார் பெரியாரின் துணைவியார்.
வேத மந்திரங்கள் ஜபித்து, தீபம் காட்டி முறைப்படி பூசை முடித்தேன். இதையெல்லாம் அவர் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
தம் வீட்டில் மாறுபட்ட கொள்கையுடன் ஒருவர் பூசை செய்கிறாரே என்று அவர் கோபமோ, ஆட்சேபணையோ கொள்ளாமல் பொறுமையாக இருந்தது அவருடைய பெருந்தன்மையை நன்கு எடுத்துக்காட்டியது.
பூசை முடிந்தபின், மீரு போஞ்சேயண்டி நீங்கள் சாப்பிடுங்கள் என்று அன்புடன் சொல்லி விருந்துண்ணச் செய்தார்.
விருந்தோம்பலின் இலக்கணமாகப் பெரியார் திகழ்ந்தார். மாலையில் ஒற்றை மாட்டு வண்டியில் என்னை வழியனுப்ப பெரியார் வந்தார் ஸ்டேஷனுக்கு.
நாயக்கரே, தங்களுடைய மனம் – தங்க மனம் என்று நன்றி தெரிவித்தேன். அவர் சால சந்தோஷமண்டி என்று கரங்கூப்பி விடையளித்ததை என்னால் மறக்கவே முடியவில்லை. இவர் பெரியார் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை!
கவியோகி சுத்தானந்த பாரதி எழுதிய
”சாதனையும், சோதனையும்” நூலில்.