வைக்கம் வீரர்க்குப் பல திற அணிகளுண்டு. அவற்றுள் ஒன்று, வைராக்கியம்.
மயிலை மந்தைவெளியிலே (8.3.1924) நாயக்கரால் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவிலே இராஜ நிந்தனை இயங்கியதென்று அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. நாயக்கர் இராயப்பேட்டையிலே தங்கினார். ஓர் இரவு குகானந்த நிலையத்திலே, நாயக்கர் ஒரு திண்ணையில் உறங்கினார்; யான் மற்றொரு திண்ணையில் உறங்கினேன். பதினொரு மணிக்கு மழை தொடங்கியது. நண்பரை எழுப்பினேன். அவர் கண் விழிக்கவில்லை. மழை பெருகியது. மீண்டும் நேயரை எழுப்பினேன்.
கண்கள் மூடியபடியே இருந்தன. பெரியாரைப் பலமுறை எழுப்பி எழுப்பிப் பார்த்தேன். பயன் விளையவில்லை. நாலு மணிக்கு மழை நின்றது. ஆறு மணிக்கு வைக்கம் வீரர் எழுந்தார். எனக்குச் சொல்லொண்ணாச் சிரிப்பு. மழை பெய்தது தெரியுமா? என்று நண்பரைக் கேட்டேன். மழையா? என்றார்.
நாயக்கரைத் தீண்டியுள்ள பாம்பு, 124 -ஏ! வழக்கு நடப்புக்காலம்! அந்நிலையில், நண்பருக்குக் கவலையற்ற உறக்கம்! என் எண்ணம், நாயக்கர் மனத்தின் மீது சென்றது. அவர் மனம் பொன்னா? சஞ்சலமுடையதா? என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.
1942-ஆம் ஆண்டு இராமசாமிப் பெரியார் ஜெனரல் ஆஸ்பத்திரியில் படுக்கையில் கிடந்தபோது, அவரைக் காணச் சர்க்கரைச் செட்டியாரும், சண்முகானந்தசாமியும், ஜானகிராம் பிள்ளையும், யானும் சென்றோம். யான் அவர் கட்டிலிலே நெருங்கி அமர்ந்தேன். நாயக்கர் என் கையைப் பற்றிக் கதறினார். என் கைக்குட்டை நனைந்தது.
இருவருங் கருத்து வேற்றுமையுடையவர்; போரிட்டவர். பெரியார் கண்கள் ஏன் முத்துக்களை உகுத்தன? அக்காட்சி கண்டவர், இங்கே பலர் வருகிறார்; போகிறார். எவரைக் கண்டும் பெரியார் அழுதாரில்லை. இவரைக் கண்டதும் அவருக்கு அழுகை ஏன் பெருகியது? என்று ஒருவரோடொருவர் பேசியது என் காதுக்கு எட்டியது. அழுகைக்குக் காரணம் என்ன?
உண்மையும் உள்ள இடத்தில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரல் என்ற பெருங்குணம் அமைந்திருக்கும். கருத்து வேற்றுமைக்கு இடமுள்ள நாடுதான், நாகரிக நாடாக இருக்க முடியும்.
கருத்து வேற்றுமைக்கு இடங்கொடாத ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகத்தான், மிருக ஆட்சியாகத்தான் காட்சியளிக்கும்.
நாங்கள் பல்லாண்டுகளாகக் கருத்து வேறுபாடுடையவராக இருந்தும், சென்னை வந்தால், அவர் இராயப்பேட்டையிலுள்ள என் வீட்டிற்கு வருவார். நானும் அவர் அழைக்கும் போதெல்லாம், ஈரோடு செல்வேன்.
– தமிழ்ப் பெரியார் திரு.வி.க
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்