வேன் கவிழ்ந்து ஆறு அய்யப்ப பக்தர்கள் காயம்
மயிலம். டிச. 20- மயிலம் அருகே பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
சென்னை முகலிவாக்கம் குருசாமி நகர் பகுதி சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் சென்றனர்.
தரிசனம் முடிந்து, நேற்று (19.12.2024) அதிகாலை 5:30 மணி அளவில் மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த காரின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.
இதனால் வேன், கார் மீது மோதாமல் இருப்பதற்காக வலது புறமாக திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை மத்தியிலிருந்து தடுப்பு சுவர் மீது (சென்ட்ரல் மீடியனில்) மோதி, தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் முகலிவாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் மகன் கோகுல்ராஜ், (20) என்பவர் சற்று பலத்த காயமடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேனில் பயணம் செய்த பக்தர்கள் 13 பேர் மற்றும் ஓட்டுநர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
விபத்து குறித்து மயிலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.