குடந்தை – ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில்
அன்னை மணியம்மையார் கைது! [20.12.1948]
ஹிந்தி எதிர்ப்புப் போரினை 1948இல் தொடங்க வேண்டிய நிலை உருவாயிற்று எனில் விடுதலைக்குப் பின் சென்னை மாநிலத்தில் பதவியேற்ற காங்கிரசு அரசு திராவிடர் கழகத்தின் மீது பல்வேறு அடக்கு முறைகளை ஏவியது. கல்வி அமைச்சராகவிருந்த அவினாசிலிங்கம் அவர்கள் 20.06.1948 இல் சென்னை மாநி லத்தில் மீண்டும் ஹிந்தியைக் கட்டாயப் பாடம் ஆக்கினார். ராஜாஜி அமைச்சரவையினால் திணிக்கப்பெற்ற கட்டாய ஹிந்தி உலகப் பெரும் போரின்போது ஆளுநர் ஆட்சிக் காலத்தில் அகற்றப்பட்டிருந்தது.
எனவே பெரியார் ஹிந்திக்கு எதிராகப் போராட்டம் நடத்திட முடிவெடுத்தார்.
10.08.1948 ஆம் நாள் சென்னை முத்தையாலுப் பேட்டை உயர்நிலைப்பள்ளி முன்பு அண்ணாவின் தலைமையில் ஹிந்தி எதிர்ப்புப்போர் மறியல் நடை பெற்றது. நாள்தோறும் தொண்டர்கள் அணிவகுத்துச் சென்று மறியல் அறப்போரில் பங்கேற்றனர்.
அப்போது தலைமை ஆளுநராயிருந்த இராஜாஜிக்கு ஹிந்தியை எதிர்க்கும் வகையில் 22.08.1948ஆம் நாள் கருப்புக் கொடி காட்ட முடிவு செய்ததை ஒட்டிப் பெரியார் கைது ஆனார். பின்னர் 27.08.1948இல் விடுதலை ஆனார்.
அய்தராபாத் இணைப்பு நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருந்ததாலும், த. பிரகாசம் அவர்களைத் தொடர்ந்து ஓமந்தூர் பெ. ராமசாமி அவர்கள் பதவியேற்ற தாலும், ஓமந்தூரார் பார்ப்பனர் அல்லாதார் என்பதாலும் அமைச்சரவைக்குத் தொல்லை அளிக்கக் கூடாது என்று எண்ணி ஓமந்தூராரின் வேண்டுகோளை ஏற்று ஹிந்தி எதிர்ப்புப் போரைப் பெரியார் நிறுத்தி வைத்தார். பெரியார் பெருந்தன்மையாக நடந்தும் ஓமந்தூரார் அரசு கட்டாய ஹிந்தித் திணிப்பை நீக்க முன்வரவில்லை.
தடை மீறல்!
14.12.1948இல் குடந்தையில் கூடிய திராவிடர் கழகம் மத்திய நிருவாகக்குழுவின் அவசரக் கூட்ட முடிவின்படி 19.12.1948ஆம் நாள் முதல். அரசு விதித்த தடை ஆணையை மீறுவது என முடிவு செய்யப்பெற்றது. அதன்படி தஞ்சை தி.க.வினர் ஒன்பது பேர் கே.கே.நீலமேகத்தின் தலைமையில் தடையை மீறிக் கைதாயினர்.
மணியம்மையார், கே.ஏ.புஷ்பாவதி ஆகிய இருவரும் கும்பகோணத்தில் – தடையை மீறினர். தோழியர் கே.ஏ.மணியம்மையார். புஷ்பாவதி ஆகிய இருவரையும் கைது செய்து கும்பகோணம் நகரக் காவல் நிலையத்தில் “மாலை 7:00 மணி வரை வைத்திருந்தனர். மணியம்மையாரின் முதல் போராட்டக்களம் – கும்பகோணம் முதல் கைது இது. மாலை 7:00 மணிக்குக் காவலர்கள் பாபநாசம் துணைச் சிறைச்சாலைக்குக் கொண்டு சென்று சிறைப்படுத்தினர்.
மணியம்மையாரைத் துணை ஆட்சியாளர் விசாரணை செய்த போது அவருடைய கேள்வியும் அன்னையாரின் பதிலும் அரசியலில் அன்னையார் எவ்வளவு தெளிவானவராக. புடம் போட்டவராக விளங்கினார் என்பதையும். கொள்கைப் பிடிப்பில் திளைத்தார் என்பதனையும் காணத் துணைபுரியும்.
அம்மாவின் தெளிவான பதில்கள்
துணை ஆட்சியாளர்: கும்பகோணத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பது தெரிந்தும் அத்தடையுத்தரவை மீறி ஊர்வலம் நடத்திச் சென்றது சட்டப்படி குற்றம்.
மணியம்மையார் பதில்: எங்கள் மொழி
காக்கும் உரிமைக்கு அமைதியாய்ப் போரிடுவது எனது கடமையாகும். மொழிப்பற்றை மறப்பது நாட்டிற்குத் துரோகம் செய்வதாகும்.
துணை ஆட்சியாளர்: அதற்காகச் சட்டத்தை மீறுவது சரியா?
பதில்: சட்டம் நாட்டின் மொழி வளர்ச்சியைக்கூட ஒழிப்பதாயிருக்கிறது.
துணை ஆட்சியாளர்: உங்கள் மதம் என்ன?
பதில்: எனக்கு எந்த மதமும் கிடையாது.
துணை ஆட்சியாளர்: உங்கள் ஜாதி?
பதில்: திராவிட ஜாதி.
துணை ஆட்சியாளர்: தடையுத்தரவை மீறிச் சட்டத்தை மீறியுள்ள தங்களை ஏன் தண்டிக்கக் கூடாது? சமாதானம் ஏதாவது சொல்கிறீர்களா?.
பதில்: நான் சமாதானம் சொல்வதற்காக இங்கு வரவில்லை. சர்க்கார் சட்டத்தை நிறைவேற்றியிருக்கும் தாங்கள் என்ன தண்டனை விதித்தாலும் ஏற்க சித்தமாயிருக்கிறேன். தாராளமாய் செய்யுங்கள்.
துணை ஆட்சியாளர்: தங்களுக்கு இரண்டு மாத வெறுங்காவல் தண்டனையளிக்கிறேன்.
பதில்: மிக்க மகிழ்ச்சி, வணக்கம்.