தஞ்சையில் நடைபெற்ற ஜஸ்டிஸ்கட்சி மகாநாட்டின் நடவடிக்கை களையும் அக்கிராசனம் வகித்த சிறீமான் தணிகாசலம் செட்டியாரின் புலம்பலையும் பத்திரிகைகள் வாயிலாகநேயர்கள் வாசித்திருக்கலாம். இவரது பிரசங்கத்தினின்று ஜஸ்டிஸ்கட்சியின் நிலை எல்லோருக்கும் நன்கு விளங்கிவிட்டது. பிராமணரல்லாதார்களில் அநேகர்இக்கட்சியில் சேராமலிருந்ததற்குக்காரணம் கூலிக்கு ராஜபக்தியும் உத்தியோக வேட்டையும் மிகுந்திருப்பதேயன்றி வேறல்ல. இக்குணங்கள் இக்கட்சியி னின்றும் ஒழிந்து இக்கட்சிக்கு இவ்வரசாங்கத்தினிடம் இருக்கும் கூலி பக்தியும் ஒழியுமானால் பிராமணரல்லாதார் எல்லோரும் இதில் சேருவார்கள். இல்லாவிடின் செட்டியாரைப் போன்ற இக்கட்சியார் எல்லோரும் மந்திரிகளுக்கு உள்பட ஒவ்வொருவராய் ஒப்பாரியிடவேண்டியதாகத்தான் முடியும். சுயராஜ்யக் கட்சியாரும் இவர்கள் போலவே உத்தியோகவேட்டையிலும் பதவி வேட்டையிலும் நுழைந்துள்ளார்கள். இவர்களது ஆர்ப்பாட்டங்களைக் கண்டு தேசமக்கள் முதலில் ஏமாந்துபோனாலும் இவர்களது யோக்கி யதையையும் விரைவில் அறிந்துவிடுவார்கள்.
பாமர ஜனங்களை ஏமாற்றுவதால் எந்தக்கட்சி முன்னுக்கு வருவதா யிருந்தாலும் அது வெகு நாளைக்கு நீடித்திருக்காது, என்பதை ஜஸ்டிஸ் கட்சியாரும். சுயராஜ்யக் கட்சியாரும் அறியவேண்டுமென விரும்புகிறோம்.
– குடிஅரசு – கட்டுரை – 30.8.1925