சென்னை,டிச.19- தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் நிதி உதவியினை தமிழ்நாடு அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை ரூபாய் பத்து இலட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.
அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும். போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000/- (ரூபாய் ஏழு இலட்சத்து அய்ம்பதாயிரம் மட்டும்) என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000/- (ரூபாய் அய்ந்து இலட்சம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து அய்ம்பதாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்ரைன் சிறையில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்கள்
28 பேர் விடுதலை
பக்ரைன், டிச.19- திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை பகுதியைச் சோ்ந்த 28 மீனவா்கள், பஹ்ரைன் கடல்பகுதி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி அவர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தகவல் இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவர்களின் தண்டனையை குறைத்து தாயகம் அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பலனாக மீனவர்களின் தண்டனை 3 மாதமாக குறைக்கப்பட்டு, கடந்த 10ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.
அதனைத் தொடா்ந்து அவா்களை இந்தியாவிற்கு அழைத்து வர வெளியுறவுத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அனைவரும் பஹ்ரைனிலிருந்து நேற்று (18.12.2024) அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் ஒளிப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
மீனவர்கள் விடுதலை
சிறைத் தண்டனை 6 மாதத்திலிருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டு சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட 28 மீனவர்கள் தாயகம் திரும்புகிறார்கள் என்பதை அறிவிப்பதில் தூதரகம் மகிழ்ச்சி அடைகிறது. இந்திய அரசின் இந்திய சமூக நல நிதியின் கீழ் அவர்களுக்கான சட்ட உதவி மற்றும் பயண ஏற்பாடுகளை தூதரகம் வழங்கியது.
இந்திய குடிமக்களின் நலனே எங்கள் முன்னுரிமை. மீனவர்கள் விடயத்தில் விரைவான நடவடிக்கை எடுத்த பஹ்ரைன் அதிகாரிகளுக்கு நன்றி. மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்பி குடும்பத்தினருடன் சேர வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மும்பைக் கடலில் படகுகள் மோதி
13 பேர் உயிரிழப்பு
மும்பை, டிச.19- மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து நேற்று (18.12.2024) மாலையில் எலிபெண்டா தீவுக்கு பயணிகள் படகு சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக சீறிப்பாய்ந்து வந்த கடற்படை படகு, பயணிகள் படகின்மீது பயங்கரமாக மோதியது.
இதில், பயணிகள் படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். கடலோர காவல் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 13 பேர் பலியானதாகவும், 101 பேர் மீட்கப்பட்டதாகவும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை துறைமுகத்தில் கடற்படை படகின் என்ஜினை சோதனை செய்துகொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.