திருப்பூர், டிச.19- திருப்பூர் மாநகராட்சியில் வாடகை கட்டணங்களுக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருவதாகவும், ஆண்டுக்கு 6 சதவீத சொத்து வரி உயர்வைக் கண்டித்தும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ஒரு நாள் நடைபெற்ற அடையாள கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து வணிகர் சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் கடைகள் அடைக்கப் பட்டதால், ஏறக்குறைய 100 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
வர்த்தகம் பாதிப்பு
மளிகைக் கடைகள், உணவகங்கள், பேக்கரி கடைகள், துணிக்கடைகள், நகைக் கடைகள், அலைபேசி கடைகள், மின்னணு பொருட்கள் கடைகள், எழுது பொருட்கள் கடைகள் என அனைத்து வகை கடைகளும் அடைக்கப்பட்டன. இந்தியா முழுவதும் பின்னலாடைகளை அனுப்பும் காதர் பேட்டையும் முழுவதுமாக மூடப்பட்டது. இதன் காரணமாக 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான பனியன் ஆடைகள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், 2000க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்திற்கு அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட மக்களை பாதிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. வணிகர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த அமைதி வழி போராட்டத்தை நடத்தினர்.