மேட்டூர்,டிச.18- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,368 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்நிலையில், அணைக்கு 16.12.2024 அன்று விநாடிக்கு 7,148 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று (17.12.2024) 7,368 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 118.53 அடியாகவும், நீர்இருப்பு 91.46 டிஎம்சியாகவும் இருந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 13ஆம் தேதி காலை விநாடிக்கு 7,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 14ஆம் தேதி காலை 8,000 கனஅடியாக அதிகரித்தது. நேற்று வரை அளவில் மாற்றமின்றி 8,000 கனஅடியாகவே நீர்வரத்து தொடர்கிறது.
விரைவில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்
சென்னை, டிச.18- தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கு மீட்டருக்கு பதிலாக பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளதாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், புதிய கட்டண விவரத்தை அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், விரைவில் அதனை அரசு அறிவிக்கும் எனவும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் ஓடும் ஆட்டோக்களுக்கு 2013ஆம் ஆண்டு 1.8 கி.மீ. துாரத்திற்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் தலா ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அது மாற்றியமைக்கப்பட உள்ளது.