மகாத்மா காந்தி கிராமப்புற வேலைத் திட்டத்தினை முடக்கி, ஊதியத்தினைக் குறைத்ததுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் ‘‘வளர்ச்சிக் குரலா?’’

Viduthalai
4 Min Read

‘‘உயர்ஜாதி ஏழை’’ என்றால் நாள் ஒன்றுக்கு வருவாய் ரூ.2 ஆயிரம்; கிராமப்புற ஏழை என்றால் நாளொன்றுக்கு ரூ.234 தானா?
பொருளாதாரத்தில் கூடவருணாசிரமப் பார்வையா?
என்று தீரும் – மாறும் இந்த மக்கள் விரோதக் கொடுமை?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்று வளர்ச்சித் திட்டம்பற்றி வாய்க்கிழிய சத்தம் போடும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு, காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கிராமப்புற ஏழை மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட அன்றாட வேலைத் திட்டத்தை முடக்கி, நாள் ஊதியத்தையும் குறைத்ததைத் தவிர, சாதித்தது என்ன? ஓட்டுப் போட மட்டும் ஏழை விவசாயிகள்; சுரண்டிக் கொழுக்கக் கார்ப்பரேட் முதலாளிகளும், முதல் போடாத உயர்ஜாதியினருமா? என்று தீரும் – மாறும் இந்தக் கொடுமை என்ற உரிமை உணர்வைத் தூண்டும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:
நம் நாட்டில் மக்களை அவதிப்பட வைப்பவை முக்கியமாக, வேலை கிட்டாத தன்மையும், விலைவாசி ஏற்றமும் – வளர்ச்சி என்ற பெயரால் ஏற்படும் மாற்றத்தின் பலன் ஒரு சதவிகிதமே உள்ள பெரும் பெரும் முதலா ளித்துவ கார்ப்பரேட் திமிங்கலங்களின் சொத்து மதிப்பு – பெருக்கமாகவுமே உள்ளதும் காரணங்களாக இருக்கின்றன.

இதைவிட வெட்கப்படத்தக்க, உரிய தீர்வு காணாத கொடுமை வேறு கிடையவே கிடையாது! ஏழை, எளிய மக்கள் அதிலும் குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரம்தான் மிகப்பெரும் அவலமாக உள்ளது!
அதனை ஓரளவு தீர்க்கவே, ‘‘மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம்’’ என்பதை முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமல்படுத்திய (காங்கிரஸ், தி.மு.க. போன்ற பல கட்சிகளின் கூட்டணி அரசு) ‘MGNREGA’ – ஊதியம் வழங்கும் திட்டம் கிராமப்புற விவசாயிகள், வேலை கிட்டாதோருக்கு அரை வயிற்றுக் கஞ்சிக்காவது வழிவகை செய்தது!

10 ஆண்டுகளில் நடைபெற்ற வளர்ச்சி என்ன?
2014 முதல், ‘‘வளர்ச்சி, வளர்ச்சி‘‘ என்று ‘சப்கா சாத், சப்கா விகாஸ்‘ என்று ஓங்கி முழக்கமிட்டு, கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் தொடர்ந்த நிலையிலும், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ஆண்டுக்கு ஆண்டு குறைத்துக்கொண்டே சென்ற நிலையே ஏற்பட்டது.
இதுபற்றி நாடாளுமன்றத்திற்குள்ளேயும், வெளி யேயும் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்ததின் விளைவாக, நாடாளுமன்றத்தில், கிராமப்புற மக்கள் பெற்றுவரும் மிகக் குறைந்த ஊதியம் – அன்றாட ஊதியம்பற்றி ஆய்வு செய்து அறிக்கை தர ஒரு தனிக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு.

மகாத்மா காந்தி கிராம வேலைக்கு நாள்தோறும் தரும் ஊதியத்தின் பரிதாபம்!
ஆய்வு செய்த இக்குழு, தனது ஆய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் நேற்று (17.12.2024) தாக்கல் செய்துள்ளது.
‘‘கிராமப்புற ஏழை மக்களின் அன்றாட வேலைக்கு – இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஊதியம் பெறும் எண்ணிக்கை அளவு மிகக் குறைவான அளவே உள்ளது (Nominal Nature).
அவர்களுக்குப் போதுமான அன்றாட ஊதியம் கிடைக்குமாறு செய்தல் அவசியம்’’ என்று பரிந்து ரைத்துள்ளது; 2024–2025 நிதியாண்டில், இந்த ஊதியம் – பல கோரிக்கைகளுக்குப் பின் உயர்த்தப்பட்டது; ஒரு நாளைக்கு 28 ரூபாய் மட்டுமே!
அதிகபட்சம் அரியானாவில் 374 ரூபாய்
குறைந்தபட்ச ஊதியம் அருணாசலப் பிரதேசத்தில் 234 ரூபாய்.

பொருளாதாரத்தில் கூட வருணாசிரமப் பார்வையா?
Consumer Price Index என்ற பொருளாதார குறி யீடு விவசாயத் தொழிலாளர்களுக்கானது என்ற குறியீட்டின்படி 1.1.2019 இல் ரூபாய் 100 என்பதை அடிப்படை ஊதியமாகக் கணக்கிடப்பட்டது! இதுபற்றி பலமான குரல் எழுப்பப்பட்டாலும், அந்த மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழேதான் இன்னும் வாழும் கொடுமை நீடிக்கவே செய்கிறது!
வறுமைக்கோட்டிற்கான குறியீட்டுக்குச் சமமாகக்கூட ஊதியம் இல்லையே!
வறுமைக்கோட்டிற்கான BPL (Below the Poverty Line) குறியீட்டுச் சமமாகக் கூட அவர்களின் சராசரி ஊதியம் கிராமப்புற ஏழை, எளிய விவசாயத் தொழி லாளர்களுக்குக் கிட்டும் நிலை இல்லை.
கரோனா கொடுமை நம் மக்களை வாட்டிய காலத்தில் வீழ்ந்த சிறு குறு தொழிற்சாலை நடத்தியோர், வேலையில்லாமல் தள்ளப்பட்டவர்கள், மூடு விழாக்களால் முடக்கப்பட்ட வாழ்க்கையினர் – விளிம்பு நிலையில், சமூக, பொருளாதார சிக்கலில் மாட்டி, இன்னமும் மீள முடியாமல் தவிக்கும் பரிதாபம் தொடர் கதையாகவே உள்ளது! அதற்கு ஸநாதனம் கண்டறிந்த மயக்க மருந்துதான் ‘‘தலைவிதி!’’

கரோனா காலத்தில் கொள்ளை லாபம் சம்பாதித்த முதலாளிகள்
அந்த கரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்கூட, நாளொன்றுக்கு 1000 கோடி ரூபாய் வருமானத்தினைப் பெற்றவர்கள் கார்ப்பரேட் நிறுவன பெருமுதலாளிகள் அதானி, அம்பானி, டாட்டா, பிர்லா போன்றவர்களே என்பது – எப்படிப்பட்ட பேத வாழ்வு நம் நாட்டில் என்பதைத் துல்லியமாகக் காட்டவில்லையா?
கிராமப்புற, ஏழை, எளிய மக்களின் தினக்கூலி– அதுவும் 365 நாளும் கிடையாது; அதில் மூன்றில் ஒரு பகுதி அல்லது அதிகபட்சம் பாதி ஆண்டு என்ற நிலைதானே!
உயர்ஜாதி ஏழைகளின் ஊதியம்
நாள் ஒன்றுக்கு ரூ.2000
இந்நிலையில், EWS என்ற ‘உயர்ஜாதி ஏழைகள் என்ற ஒரு சமூக அநீதித் திட்டத்தில்‘ ‘‘உயர்ஜாதி ஏழைகள்’’ என்போர் ஆண்டுக்கு 8 லட்சம் – நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய்க்குமேல் வருமானம் பெறுபவர்கள்.
என்னே விசித்திர இரட்டை அளவுகோல் என்ற இந்த அக்கிரம அநீதி.
இந்நிலை கிராமப்புற ஏழை, எளிய விவசாய மக்களின் அன்றாட வருமானத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், எந்தப் புள்ளி விவரமும் இன்றி, கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப்போல, தெளிவாக விளங்குகிறது அல்லவா!
ஓட்டுப்போட ஏழை விவசாயிகள் –
கொள்ளையடிக்க கார்ப்பரேட்டுகளா?
இது நீடிக்கலாமா?
ஓட்டுப் போட ஏழை விவசாயிகள்!
சுரண்டி வாழ்பவர்களோ பெரும் பெரும் திமிங்கலங்கள் முதலாளிகள் – அவற்றை சமப்படுத்த மறுப்பது நியாயமா?
முதல் போடா மற்றும் உயர்ஜாதி ஏழைகளா?
ஏழைகளில்கூட ஜாதிதான் அளவுகோலா?
என்று தீரும் – மாறும் இந்தக் கொடுமை?

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
18.12.2024 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *