ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் வெளிநாட்டு கூட்டுறவுடன் காலணி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்

viduthalai
2 Min Read

சென்னை,டிச.17- ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தைவானை சேர்ந்த ஹாங் ஃபு குழுமம் சார்பில் ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளன. 2025 டிசம்பருக்குள் பணிகளை முடித்து, உற்பத்தி தொடங்க உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேரடியாக 25 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே 2ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டை, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த முதலமைச்சர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதை அடைய பல்வேறு முன்னெடுப்பு களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

காலணி தொழிற்சாலை

அந்த வகையில், தைவானை சேர்ந்த ஹாங் ஃபு குழுமம் சார்பில் ரூ.1,500 கோடி முதலீட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் காலணி தொழிற்சாலைக்கு தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 200 ஏக்கர் பரப்பில் இது அமைய உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2024) தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலியில் இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

தைவான் நாட்டை சேர்ந்த ஹாங்ஃபு இண்டஸ்ட்ரியல் குழுமம் 20-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை கொண்ட பன்னாட்டு குழுமம் ஆகும்.

இது விளையாட்டு காலணிகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி, விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதன் மூலம் உலக அளவில் காலணி உற்பத்தியில் 2ஆவது பெரிய குழுமமாக திகழ்கிறது.

நைக், கன்வர்ஸ், வேன்ஸ், பூமா, யுஜிஜி, அண்டர் ஆர்மர் போன்ற பன்னாட்டு அளவில் வணிகமுத்திரை கொண்ட நிறுவனங்களுக்கு காலணிகள் மேம்பாடு, வடிவமைப்பு, உற்பத்தி சேவைகளையும் இக்குழுமம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், காலணி தொழிற் சாலை குறித்து பங்குதாரர் மற்றும் இயக்குநர் அகீல் பனாருனா பேசும்போது, ‘‘கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி ரூ.1,000 கோடி, கடந்த ஜனவரியில் ரூ.500 கோடி என ரூ.1,500 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

கட்டுமானப் பணிகளை வரும் ஜனவரியில் தொடங்க உள்ளோம். டிசம்பருக்குள் பணிகளை முடித்து, உற்பத்தி தொடங்கப்படும். இந்த தொழிற்சாலையில் நேரடியாக 25 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கப்படும். இதில் 85 சதவீதம் பெண்கள், குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கப்படும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில் துறை செயலர் வி.அருண்ராய், தோல் ஏற்றுமதி கவுன்சில் செயல் இயக்குநர் ஆர்.செல்வம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, சிப்காட் மேலாண் இயக்குநர் கே.செந்தில்ராஜ், ஹாங் ஃபு நிறுவன தலைவர் டி.ஒய்.சாங், இயக்குநர் ஜாக்கி சாங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *