சென்னை, டிச.16- சிறீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சிறீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது:
திருச்சி சிறீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் ‘Our Temples’ (நம்முடைய கோவில்கள்) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து காட்சிப் பதிவு வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் ‘சிறீரங்கம் பெரிய பெருமாளுக்கு நடந்த அபச்சாரங்கள்’ என்ற தலைப்பில் யூடியூப் சேனலில் கடந்த வாரம் காட்சிப் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், சிறீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இதையடுத்து, தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு தகவல்களை பரப்பிய சிறீரங்கம் ரங்கராஜன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இணைய வழி (ஆன்லைன்) வாயிலாக சிறீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, சிறீரங்கம் ரங்கராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தனிப்படை காவல் துறையினர் சிறீரங்கம் சென்று ரங்கராஜனை அவரது வீட்டில் கைது செய்தனர்.
பின்னர் அவரை சென்னை அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பின்னர் சிறீரங்கம் ரங்கராஜன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.