அவசரகால நிலையில் இந்தியா:
வினேஷ் போகத்
அவசர நிலை காலத்தில் இருந்ததுபோல் தற்போது நமது தேசம் இருப்பதாக வினேஷ் போகத் கவலை தெரிவித்துள்ளார். உயிரை பணையம் வைத்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஒட்டு மொத்த நாடும் துணை நிற்க வேண்டும் எனவும், எப்போதும் பிரதமர் பேசுவதற்கு அப்படியே நேர் எதிராக அவரது செயல்பாடுகள் இருப்பதாகவும் வினேஷ் விமர்சித்துள்ளார். மேலும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளார்.
நாளை பூமியை நெருங்கும்
2 விண்கற்கள்
2 பெரிய விண்கற்கள் நாளை பூமியை நெருங்கி வர உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா தெரிவித்துள்ளது. சிறிய விமானம் போன்ற அளவுடைய 2024 XY5 விண்கல், நாளை அதிகாலை 5.56 மணிக்கும், ஒரு வீட்டைப் போல் அளவுடைய 2024 XB6 விண்கல், நாளை காலை 7.25 மணிக்கும் பூமியை நெருங்கும் என தெரிவித்துள்ளது. இவற்றின் அளவு, வேகம் அச்சுறுத்தலை ஏற்படுத்தினாலும், எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என நாசா கூறியுள்ளது.
ரஷ்யாவிற்கு
விசா இல்லாமல் பயணிக்கலாம்
2025ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா பயணிக்கலாம். முன்னதாக, கடந்த ஜூன் மாதம், ரஷ்யாவும் இந்தியாவும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான இருதரப்பு ஒப்பந்தம் குறித்து ஆலோசித்தது. ரஷ்யாவிற்கு செல்லும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2023இல் 60,000க்கும் மேற்பட்ட இந்திய பயணிகள் ரஷ்யாவிற்கு சென்றுள்ளனர். இது 2022 உடன் ஒப்பிடுகையில் 26% அதிகம்.
530 நீதிபதிகள் உயர் வகுப்பினர்
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 2018ஆம் ஆண்டு முதல் 684 நீதிபதிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் 530 பேர் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 82 பேர், சிறுபான்மையினர் 37 பேர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 21 பேர், பழங்குடியின வகுப்பினர் 14 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.