சென்னை, டிச.16- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உடல் நேற்று (15.12.2024) துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச.இளங் கோவன் நேற்று முன்தினம் (14.12.2024) காலமானார்.
அவரது உடல் சென்னை கிண்டியை அடுத்துள்ள மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று (15.12.2024) மீண்டும் மாலை வைத்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே இளங்கோவனின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் அஜய்குமார், அமைச்சர்கள் க.பொன்முடி, சு.முத்துசாமி, ஆர்.காந்தி, மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் நேற்று
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாலை 4.30 மணியளவில் மணப்பாக்கத்தில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. முகலிவாக்கம் மின் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. அரசு மரியாதையுடன் உடல் எரியூட்டல் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அவரது மறைவையொட்டி அகில இந்திய காங்கிரஸ் மேனாள் தமிழ்நாடு பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ்நாட்டிற்கும் மிகப் பெரிய இழப்பாகும். இக்கட்டான காலங்களில், கட்சி குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டபோது, இளங்கோவன் தனது அசாதாரண தலைமைத்துவத்துடன் கட்சியை வலிமையுடனும் உறுதியுடனும் வழிநடத்தினார். அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதுடன் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.