வந்தாளைய்யா வந்தாளைய்யா
வஞ்சிக் குறமகள் இங்கு வந்தாளைய்யா
வந்தாளைய்யா வந்தாளைய்யா
தமிழ்க் குறமகள் இங்கு வந்தாளைய்யா
வித்தாரம் பேசிக் கையை
வீசிக் குதித்தாட்டமாடி
தித்தோம் திமித்தகிட
திமிதிமிதிமி என
(வந்தாளைய்யா வஞ்சி வந்தாளைய்யா)
ஒய்யாரக் கொண்டை போட்டு
சங்கத்தமிழ் பூவைச் சூட்டி
வக்கணைகள் பேசிக் கொண்டு
தென்பொதிகை மலைக்காரி
(வந்தாளைய்யா வஞ்சி வந்தாளைய்யா)
வீட்டுக்குள்ளே முடங்காமல்
விட்டுவிடுதலையாகி
வெற்றி பெற்ற பெண் இனைத்தை
வாழ்த்தி நல்ல குறி சொல்ல
(வந்தாளைய்யா வஞ்சி வந்தாளைய்யா)
சொல்லி வைத்த கட்டுக்கதை
ஏற்பதில் உயர்வில்லை
பகுத்து அறிந்து கொண்டு
புரிந்து நடக்கச் சொல்லி
(வந்தாளைய்யா வஞ்சி வந்தாளைய்யா)
முற்றும் பயனில்லாமல்
முடங்கிக் கிடக்க வைக்கும்
மூடத்தனப் புரட்டினை
புட்டுப்புட்டு வைக்க இங்கு
(வந்தாளைய்யா வஞ்சி வந்தாளைய்யா)
எக்காளம் கொக்கரிக்கும்
எகத்தாளக் கூட்டம்தனை
ஈரோட்டுத் தடி கொண்டு
ஓட ஒட விரட்டவே
(வந்தாளைய்யா வஞ்சி வந்தாளைய்யா)
ஜாதி மதச் சண்டை மூட்டி
ஜம்பம் பேசும் வம்பர்களை
சமத்துவ நீதி எனும்
சாட்டை கொண்டு வீசித்தள்ள
(வந்தாளைய்யா வஞ்சி வந்தாளைய்யா)
நாளுக்கொரு வேசம் கட்டி
நாடுதனைக் கூறுபோடும்
நயவஞ்ச குள்ளர்தனை
நாடறியச் செய்யவென்று
(வந்தாளைய்யா வஞ்சி வந்தாளைய்யா)
– நர்த்தகி நடராஜ்