சென்னை, டிச.15– சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் திறன் பயிற்சி மய்யம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செவித்திறன் குறைந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சி அளிப்பதற்காக சென்னை தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மய்யம் அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திறன் பயிற்சி மய்யத்தில் வயர்மேன் கன்ட்ரோல் பேனல் எலெக்ட்ரானிக்ஸ், வயரிங் ஹார்னெஸ் அசெம்ப்ளி ஆபரேட்டர் ஆகிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும்.
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு கால தேசிய தரச் சான்றிதழ் பெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள் இப்பாடப் பிரிவுகளில் சேரலாம். ஒவ்வொரு பாடப் பிரிவிலும் தலா 30 பேர் சேர்க்கப்படுவர். படிப்பு காலம் 6 மாதங்கள். மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.