சென்னை, டிச.15 தமிழ்நாடு முழுவதும் நேற்று (14.12.2024) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 82 ஆயிரத்து 257 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 576.32 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதன் முறையாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிறப்பு பார்வையாளர்களாக மாவட்டங்களுக்கு சென்று மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இந்தாண்டுக்கான கடைசி தேசிய மக்கள் நீதிமன்றம் தமிழ்நாடு முழுவதும் நேற்று (14.12.2024) நடைபெற்றது. மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான கே.ஆர் ஸசிறீராம் அறிவுறுத்தலின்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும் நீதிபதியுமான எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் உயர் நீதிமன்ற சட்டப்பணி கள் ஆணைக்குழு தலைவரான நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் ஆகியோரது மேற்பார்வையில் நடத்தப்பட்ட இந்த நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 4 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன
அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மோகன், பி.பி.பாலாஜி. ஜி.அருள் முருகன், எம்.ஜோதிராமன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ். கே.கிருஷ்ணன், ஜி.சொக்கலிங்கம், எம்.ஜெயபால், பி.கோகுல் தாஸ் ஆகியோரது தலைமையிலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.கலைமதி, பி.வடமலை, என்.செந்தில்குமார், ஆர்.பூர்ணிமா ஆகியோரது தலைமையிலும் அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதேபோல மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களிலும் 429 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இந்த முறை முதன்முறையாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாவட்ட அளவில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்று, அதை தொடங்கி வைத்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அதன்படி மூத்த நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கடலூர் மாவட்டத்துக்கும், நீதிபதி எம்.தண்டபாணி கள்ளக்குறிச்சி மாவட்டத் துக்கும், நீதிபதி கே.ராஜசேகர் விழுப்புரம் மாவட் டத்துக்கும் சிறப்பு பார்வையாளர்களாக சென்று மக்கள் நீதிம்னறத்தில் மூலம் தீர்வு காணப்பட்ட வழக் குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினர்.
ரூ.1.34 கோடி
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு நீதிபதி டி.லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,355 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, ரூ.54.46 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிம்னறத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி விபத்தில் இறந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ. 1.34 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.