வைக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி நடத்தப்பட்ட
பெரியார் கண்ட தீண்டாமை ஒழிப்பு வெற்றி விழா!
வரலாற்றில் நிலைபெற்ற அறிவுப்பூர்வமான நினைவுச் சின்னங்கள்!
தமிழ்நாடு அரசும் – கேரள அரசும் நடத்திய வைக்கம் வெற்றி விழாவின் நீட்சியை நாடெங்கும் கொண்டு செல்வோம்!
– தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
தந்தை பெரியார் தலைமையேற்று வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் வெற்றி பெற்றதன் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடெங்கும் 100 கூட்டங்களை ஒத்த கருத்துடையோரையும் இணைத்து நடத்துமாறு கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
வைக்கத்தில் தந்தை பெரியார் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் புரட்சி!
வையகம் காணாத ஒரு மனித உரிமை மீட்புக்கான மகத்தான போராட்டம்தான், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான அரச ராஜ்ஜியத்தில் வைக்கம் என்ற சிறுநகரில் மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ‘கீழ்ஜாதிக்காரர்களான’ ஈழவர், தீயர், புலையர் போன்ற ஜாதியினர் நடக்கவே உரிமையற்றவர்கள் என்பதால், அப்பகுதியில் இருந்த நீதிமன்றத்தில் வாதாட வந்த மாதவன் என்ற ஒரு வழக்குரைஞர் ஈழவர் ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவரைத் தாக்கி, அடித்து நொறுக்கினர் உயர்ஜாதி வெறியர்கள்.
அதிலிருந்துதான் அங்கே காங்கிரஸ் கட்சியை சார்ந்த டி.கே.மாதவன் (இவரும் ஈழவர்) என்ற மற்றொரு முற்போக்குச் சிந்தனையாளரின் முன்னெடுத்த முயற்சியால், உள்ளூரில் ஒரு குழுவினர் அதை எதிர்த்து காந்திய முறையான சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.
அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது அன்றைய திருவிதாங்கூர் மன்னர் அரசு. அதன்மூலம் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடலாம் என்று எண்ணி, இறுமாந்திருந்த நிலையில், சிறையிலிருந்து அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பெரியார் அவர்களுக்குக் கடிதம் எழுதினர்; அந்தக் கடிதத்தில், ‘‘தாங்கள் வந்து வைக்கம் சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று நடத்தவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர் அந்த உள்ளூர் குழுவினர்!
உடனே வைக்கத்திற்கு விரைந்து சென்று களமாடினார் தந்தை பெரியார்.
ஒரு மாதத் தண்டனைக்குப் பிறகு விடுதலை – ஊருக்குத் திரும்பவில்லை தந்தை பெரியார்; மீண்டும் வைக்கத்திற்கே சென்று சத்தியாகிரகத்தினை மேலும் தீவிரமாக்கினார்.
பெரியாரின் துணைவியாரும் – தங்கை கண்ணம்மையாரும் ஆற்றிய பங்களிப்பு!
தந்தை பெரியாருக்கு இரண்டாவது முறை நீதிமன்றம் நான்கு மாத தண்டனை – கடுங்காவலுடன் என்று தீர்ப்பளித்தது. சிறையில் கை, கால்களில் விலங்குகள் மாட்டப்பட்டு அவர் வதிந்த நிலையிலும், போராட்டம் தொய்வடையவில்லை.
ஈரோட்டிலிருந்து அவரது துணைவியார் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையாரும், பெரியாரின் தங்கையான எஸ்.ஆர்.கண்ணம்மாவும் வைக்கம் சென்று, பெரியார் சிறையில் இருந்தபோது, சத்தியாகிரக இயக்கத்தை வலிமையுடன் மகளிரையும் திரட்டி நடத்தினர்.
மேலும் வீறுகொண்டது. ‘சத்ரு சங்கார யாகங்களை’ நடத்தி, பெரியாரையும், சத்தியாகிரகிகளையும் கொல்ல விடுத்த வேண்டுகோள் பலிக்கவில்லை.
மாறாக, இடையில் மன்னர் எதிர்பாராது காலமானார். அவரது ராணி பட்டத்திற்கு வந்தார். பெரியார் விடுதலையாகி, சென்னைக்குத் திரும்பினார். நிலுவையிலிருந்த மற்றொரு பழைய தேசத் துரோக வழக்கினை (இ.பி.கே.120–ஏ) சென்னை ராஜதானியின் அன்றைய பிரிட்டிஷ் அரசு மீண்டும் கையிலெடுத்து அதன்படி, தந்தை பெரியாரை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது.
அன்னை நாகம்மையாரின் அறிக்கை!
இந்நிலையிலும் போராட்டம் நிறுத்தப்படவில்லை, தொடர்ந்தது. அப்போது ஈரோட்டிலிருந்த அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் விடுத்த ஓர் அறிக்கை, நூறாண்டுகளுக்கு முன்பே மகளிர் எப்படி வைர நெஞ்சுரம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதற்கான எடுத்துக்காட்டு.
அன்னை நாகம்மையார் வெளியிட்ட ஓர் அறிக்கையைப் படியுங்கள்!
(ஆதாரம்: ‘நவசக்தி’, 29, செப்டம்பர் 1924).
‘‘என் கணவர் ஈ.வி.இராமசாமி நாயக்கர் இம்மாதம் முதல் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆனார். 1924, செப்டம்பர் 11 ஆம் தேதி, காலை 10 மணிக்கு மறுபடியும் இராஜத் துரோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லி, என்னிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்!
அவர் திரும்பத் திரும்ப தேச ஊழியத்தின் பொருட்டு சிறைக்குப் போகும் பாக்கியம் பெறவேண்டும் என்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளரவேண்டும் என்றும் கடவுளையும், மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கிறேன்.
அவர் பாக்கியில் வைத்துவிட்டுப் போனதாக நினைத்துக் கொண்டு போகிற வைக்கம் சத்தியாகிரக விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து, அதைச் சரிவர அகிம்சா தர்மத்துடன் நடத்தி, அனுகூலமான முடிவிற்குக் கொண்டு வர வேண்டுமாய் என் கணவரிடம் அபிமானமும், அன்பும் உள்ள தலை வர்களையும், தொண்டர்களையும் பக்தி யோடு பிரார்த்தித்துக் கொள்கிறேன்.’’
– இவ்வாறு அன்னை நாகம்மையார் வெளியிட்ட அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த வெற்றி!
இதன் பிறகு அந்தச் சுடர் அணையாது போராட்டம் தொடர்ந்த நிலையில், காந்தியார் – ராணியார் பேச்சுவார்த்தைகளில் ஓர் உடன்பாடு ஏற்பட்டு, பல கட்டங்களாக தெருவில் நடக்கும் உரிமை பெற்றனர் – ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட அந்த மக்கள்.
கடைசிவரை வன்முறை நுழையாமல் களமாடி யவர்களின் தியாகமே வென்று நின்றது.
அதன் வெற்றியின் நூற்றாண்டு விழாவினை ‘திராவிட மாடல்’ அரசும், ‘மார்க்சிஸ்ட் மாடல்’ அரசும் இணைந்து மூன்று நிகழ்வுகளாகக் கொண்டாடி பெருமை சேர்த்தன. வைக்கம் – சென்னை – வைக்கம் (12.12.2024).
ஏற்கெனவே தமிழ்நாடு அரசு (அ.தி.மு.க.) பெரியார் சிலை வைத்தும், நினைவிடம் அமைத்த நிலையில், அது 30 ஆண்டுகளில் சிதிலமடைந்திருந்தது.
அதைச் சீராக்கி, சிறப்புடன் புதிய வடிவத்துடன் – அத்தோடு விரிந்த பரந்த பெரியார் நூலகம், பெரியார் காட்சியகம் – பெரியார் ஆடிட்டோரியம் – திறப்பு விழா – வெற்றித் திருவிழாவினை கடந்த 12.12.2024 அன்று கொண்டாடிய இரண்டு அரசுகளையும், உலகெங்கும் உள்ள பெரியார் தொண்டர்கள் என்றென்றும் நன்றி மறவாது பாராட்டக் கடமைப்பட்டவர்களாவார்கள்!
அவ்விழா போன்ற ஒரு பெருவிழாவான திருவிழா, அதில் இரு முதலமைச்சர்களது அறிவார்ந்த உரைப் பிரகடனம் – விருது வழங்கியமை எல்லாம் வரலாற்றுப் பெருமைக்குரியன!
மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது – நன்றிப் பெருக்கும் அதில் இணைந்தது!
முப்பெரும் புத்தாக்கங்கள்!
இனிவரும் தலைமுறைகளுக்குச் சமூகநீதிக் களங்களில் பெற்ற கொள்கை வெற்றிகளை காலத்தை வென்று காட்டும் கலங்கரை வெளிச்சங்கள் – அந்த முப்பெரும் புத்தாக்கங்கள்!
‘திராவிட மாடல்’ அரசு இதுபோன்ற ஒப்பற்ற சாதனைகளை நாளும் ஒவ்வொரு துறையிலும் செய்து, தமது ஆட்சி மகுடத்தில் நாளும் புதிது புதிதாக முத்துக்கள் பதித்து, வரலாற்றுப் பாடங்களை ஆவணமாக்கி, அடுக்கிக் கொண்டே வருகின்றது!
அதற்கு முழு ஒத்துழைப்பை தருகின்றது பினராயி விஜயன் தலைமையில் உள்ள ‘மார்க்சிஸ்ட் மாடல்’ கேரள அரசு.
‘திராவிட மாடல்’
‘மார்க்சிஸ்ட் மாடல்’
‘காந்திய மாடல் ‘ (சத்தியாகிரக முறை)
வைக்கம் விழாவையொட்டி 100 கூட்டங்கள்!
முந்தைய அரசு, இதற்கு உதவியவர்களுக்குக் குறிப்பாக தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு நன்றி அறிவித்து, வைக்கம் ஜாதி – தீண்டாமை ஒழிப்பு வரலாற்றையும், நூற்றாண்டு கண்ட நாயகர் கலைஞர் அவர்கள், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் நிறுவியதையும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக அரை நூற்றாண்டுக்குமேல் தந்தை பெரியாரின் போராட்ட வெற்றிக்கு – பெரியார் நெஞ்சில் தைத்து முள்ளை அகற்றிவிட்டு, மகளிர் உள்பட கருவறையில் கடமையாற்ற அமைதிப் புரட்சியாக சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் செய்துள்ள நூறாண்டு சமூகநீதி வரலாற்றுப் பாடங்களை மக்களுக்கு விளக்கி,
ஜாதி, தீண்டாமை ஒழிந்த மனித சமத்துவமும், சுயமரியாதையும் பூத்துக்குலுங்கிட வைக்கம் வெற்றி விழா (இந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டில்) ஓர் மகத்தான உந்து சக்தி என்பதைத் தமிழ்நாடு முழுக்க வரும் 24.12.2024 (தந்தை பெரியாரின் நினைவு நாள்) முதல் ஒரு வாரம் 100 நன்றி அறிவிப்புக் கூட்டங்களுக்குமேல் – ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை விளக்கிப் பேசும் கூட்டங்களாக – மக்கள் பெருந்திரள் கூட்டங்களாக நாடு முழுவதும் நடத்திட வேண்டுகிறோம்.
இன்னும் ஜாதி, தீண்டாமை நோய் முற்றாக ஒழியாமல், பற்பல இடங்களில் அதன் கோரப் பற்களைக் காட்டுகிறது!
அறப்போரின் சக்தி, கொள்கை உறுதியின்முன் அடக்குமுறைகள் தோற்றுப் போகும் என்ற படிப்பினைகளை விளக்க இந்தக் கூட்டங்கள் நல்ல விளக்க உரைகளாகி, இளைஞர்களிடம் எழுச்சியை உருவாக்கவேண்டும்.
‘திராவிட மாடல்’ ஆட்சியைப் போற்றிப் பாதுகாப்போம்!
தமிழ்நாட்டின் இன்றைய “திராவிட மாடல் நாயகரான” முதலமைச்சரின் தொடர் சாதனைகளால் ஆரியம் – ஆதிக்கவாதிகள் எரிச்சல் கொண்டுள்ள நிலையில், மக்களின் பேராதரவினைத் திரட்டி, மேலும் பல சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை இவ்வரசு செய்ய பாதையமைக்கும் படையாய் – ஒத்த கொள்கையினரை ஓரணியில் திரட்டி, சாதனைகளைப் பரப்புவது நமது உயிர்க் கடமையல்லவா?
எனவே, இதே டிசம்பர் வைக்கம் உணர்வு (Vaikom Sprit) எங்கெங்கும் பரவிட, நாடே சமத்துவ, சுயமரியாதை புரங்களாக மாறட்டும்; மாற்றிக் காட்டுவோம்!
கேரள முதலமைச்சர் குறிப்பிட்ட மாநில சுயாட்சி!
மாநில சுயாட்சிப்பற்றி கேரள முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள ஒரு நிலையினை, ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அதனை உள்ளபடியே வழிமொழிந்தது காலத்தின் தேவையாகும்!
தயாராவீர்! தயாராவீர்!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
15.12.2024