பாணன்
சந்திரயான் (நிலவு ஆய்வுக்கலன்) வெற்றிகரமாக செலுத்தப் பட்டது. அதை அறிவியலாளர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கும் போதே மதவாதக் கூட்டம் ஒன்று அனுமார் சந்திரயான் ராக்கெட்டை தூக்கிக் கொண்டு போகும் படத்தைப் போட்டு இவரால்தான் அது நடந்தது என்று மடமைத்தனமாக கூறிக் கொண்டிருந்தது.
இங்கிலாந்தில் உள்ள ராயல் சொசைடி இன்றைய அறிவியலுக்கு எல்லாம் விதைப் போட்டது. இங்குதான் ஜேம்ஸ்குக் தனது நீராவி என்ஜினின் முழு மாதிரியை விளக்கினார். சமீபத்தில் இறந்த விண்ணியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாப்கின்ஸ் அதிகம் கருத்தரங்கம் நடத்தியது இங்கேதான். இந்த ராயல் சொசைட்டியில் தலைசிறந்த உயிரியல் அறிவியலாளரும், இயற்பியல் பேராசிரியருமான பிரையான் திரீன் கலந்துகொண்ட கருத்தரங்கம் நடந்தது
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து வந்த ஆய்வு மாணவர்கள் கூடி இருந்தனர். பிரையான் கடவுள் பற்றி விளக்கம் தரப் போகிறார் என்று கூட்டத்தின் மூலையில் இருந்த ஒரு மாணவன் கூறவே அரங்கம் முழுவதும் சிரிப்பலை.
இந்தப் பிரபஞ்சம் தோன்றியது ‘பிக் பேங்’ எனப்படும் பெருவெடிப்பு மூலம்தான். ஆனால் அந்தப் பெருவெடிப்பு வெடித்த நொடி தாண்டி நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் அறிவியல் தெளிவாக வரையறுத்து இருக்கிறது. ஆனால் அது துவங்கிய அந்த மணித்துளியில் என்ன நடந்தது, அல்லது துவங்குவதற்கு முந்தைய கணங்களில் என்ன நடந்தது; அந்தப் பெரு வெடிப்பை எது துவக்கியது என்பது குறித்து இன்று வரை நமக்குப் புரிதல் இல்லை. அதாவது அறிவியலுக்கு இல்லை. அதற்கான தேடலில் அறிவியலாளர்கள் இன்று வரை முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர்.
அப்படியானால் அதைக் கடவுள்தான் துவக்கினார் என்று நம்பிக் கொள்வதில் என்ன பிரச்சினை என்று அந்த மாணவர் கேள்வி கேட்டார்.
அதற்கு பிரையான் கிரீன் கூறிய பதில் அழகானது. மதிப்பிற்குரிய மாணவரே, நீங்கள் சொல்வது ‘சரி, அப்படியே சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி சொல்வது பெருவெடிப்பு குறித்த நமது புரிதலை எந்த வகையில் மேம்படுத்தும்?’ என்று கேட்கிறார். இரண்டு பதில்களை சொல்லிப் பாருங்கள்:
‘பெருவெடிப்பு எப்படித் துவங்கியது என்று நமக்குத் தெரியாது.’
‘அதைத் துவக்கியது கடவுள்தான்.’
முதல் வாக்கியத்தை விட இரண்டாவது வாக்கியம் எந்த அளவிலும் நமது புரிதலை ஆழப்படுத்தவில்லையே? முதல் பதில் போலவே இரண்டாவது பதிலும் அர்த்தமற்ற வாக்கியம்தான். சரி,
கடவுள் துவக்கினார் என்றால் எந்தக் கடவுள்? விஷ்ணுவா, ஜெகோவேவா, இயேசுவா, அல்லாவா? அல்லது வழக்கொழிந்து போன கிரேக்க, மாயன் கடவுளர் எவராவதா? அந்தக் கடவுளும் கூட எதற்காக இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கினார்? எப்படி உருவாக்கினார்? பிக் பேங்குக்கு முன் பெரிதாக ஒன்றுமே இருக்கவில்லை எனில் ஒன்றுமே இல்லாததில் இருந்து எப்படி எதையோ உருவாக்கினார்? இந்த எந்தக் கேள்விகளுக்கும் அந்த இரண்டாவது பதில் விளக்கம் கொடுக்கப் போவதில்லை. முதல் பதிலிடமும் விளக்கம் இல்லை. அதாவது முதல் பதிலுக்கும் இரண்டாவது பதிலுக்கும் பொருளில் எந்த வித்தியாசமும் இல்லை.
இதற்கெல்லாம் ஒவ்வொருவரும் தத்தமது மதங்கள் முன்வைத்த கற்பனைகள் சார்ந்து சில பதில்களை கொடுக்கக் கூடும். ஆனால் அவை எல்லாமே எந்த ஆதாரமும் அற்ற கற்பனைகள்தான். மகாவிஷ்ணுதான் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஒரு ஹிந்து சொல்வார். அல்லாதான் படைத்தார் என்று ஒரு முஸ்லிம் சொல்வார்.
எத்தியோப்பியாவில் மிகவும் பழைமையான வேதம் என்ற நூலில் ‘14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பெருவெளியை கடவுள் படைத்தார்,’ என்று துவங்குகிறது.
அதை எழுதியது மனிதர்கள் தான் எதை அடிப்படையாக வைத்து 14 பில்லியன் ஆண்டுகள் என்று எழுதினார்கள் என்பதற்கு பதில் இல்லை.
. இவர்கள் எழுதிய மத நூல்கள் எதுவுமே பிரபஞ்சம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்பதை சொல்லவில்லை. பூமி 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று எந்த இறைத் தூதரும் சொல்லவில்லை. ஒரே ஒரு இயற்பியல் விதியைக் கூட ஒரு புனித நூலும் சுட்டிக் காட்டவில்லை. அவ்வளவு கூட வேண்டாம்: பூமியில் மொத்தம் ஏழு கண்டங்கள் உள்ளன என்ற எளிய தகவலைக் கூட ஒரு புனித நூலும் தெரிவிக்கவில்லை. காரணம் அந்த நூல்களை எழுதியவர்களுக்கு தாம் பிறந்து வளர்ந்த பழங்குடி கலாச்சாரங்கள் தாண்டி வேறு எதைப் பற்றியும் எந்த அறிவும் இல்லை. அந்தப் பழங்குடி கலாச்சார அறிவுகள் மட்டுமே அவரவர் புனித நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
அதாவது, அறிவியல் முன்னேற்றத்துக்கு என எள்முனை அளவுக்குக் கூட உலகில் எந்த மதமும் பங்களிக்கவில்லை. சொல்லப் போனால், அறிவியல் முன்னேற்றத்தை பல மதங்கள் கோபமுடன் தடுத்தே கூட இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் நவீன உலகில் ஏதாவது அறிவியல் முன்னேற்றம் நிகழ்ந்தால் அதைத் தனதாக சொந்தம் கொண்டாடுவதற்கு மட்டும் மதங்கள் தயங்குவதில்லை. பெரு வெடிப்பில் பிரபஞ்சம் துவங்கியதா? ஓகே, அதைத் துவக்கியதே எங்கள் கடவுள்தான். பரிணாம வளர்ச்சியில்தான் உயிர்கள் தோன்றிப் பல்கிப் பெருகினவா? அடடா, அதற்கு வித்திட்டதே எங்கள் இறைவன்தான்.
என்றெல்லாம் தொடர்ந்து பேசுவார்கள், இந்தியாவில் ராயல் சொசைட்டிகள் இடத்தை சத்சங் சாமியார்கள் பிடித்துக்கொண்டனர். சத்சங் கேட்க வருபவர்களில் கூட ‘சூவா அசூத்’ (தொட்டால் தீட்டு)பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் போபாலில் போகேஸ்வர் பாபா என்ற சாமியாரின் சத்சங்க் நடைபெற்றது, அதில் ஒரு பெண்ணை குப்பையைப் போல் அரங்கிலிருந்து தூக்கி வீசினார்கள். காரணம் அந்தப் பெண் மாற்று ஜாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டவராம். ஆகவே சத்சங் அரங்கம் தீட்டு ஆகிவிட்டதாம். பிறகு எப்படி இங்கே அறிவியல் வளரும்.
இங்கே நீதிபதிகள் மயில் உடலுறவு கொள்ளாது, அது கண்ணீர் விடும். அந்த கண்ணீரை பெண் மயில் குடிக்கும் அதனால் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்கிறார்கள். மற்றொரு நீதிபதியோ பசு மூத்திரம் தங்கம் தரும் என்கிறார், இன்னுமொருவர் “பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு கிரகம் சரியில்லை. ஆகவே, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஜோதிடப் பிரிவு பேராசிரியர் குழு அந்தப் பெண்ணின் ஜாதகத்தை ஆய்வு செய்யுங்கள் – உண்மையில் அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? அந்த தோஷத்தால்தான் அவள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாளா” என்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார்கள்.
சரி, இது வடக்கே என்றால் கேரளத்தில் ஒரு ஜாதிச் சங்க மாநாட்டில் நாய்களில் பலவகைகள் உள்ளன. தெருநாய் வேறு மாதிரி உள்ளது, வீட்டில் வளர்க்கும் அல்சேசன் வேறு மாதிரி உள்ளது. ஆனால் இரண்டுக்கும் குணம் வேறு வேறாக இருந்தாலும் இரண்டுமே நாய் தான், அதுபோல் தான் மனிதர்களும் என்று ஒரு பல்கலைக்கழக வேந்தர் பேசுகிறார். மேடையில் தலைமை நீதிபதிகள் அமர்ந்திருக்கின்றனர். நிகழ்ச்சி துவங்கும் போது வேதம் ஓதப்படுகிறது, அந்த வேதம் பிரம்மன் உலகைப் படைத்தான். அவன் மகனாக மனு பிறந்து உலக விதிகளை படைத்தான். அதுவே நிரந்தரம் என்கிறது.
ஆக இந்தியாவில் – மெத்தப் படித்தவர்கள் என்று சொல்பவர்களும் மூடத்தனத்தைத்தான் நம்புகிறார்கள். பரப்பவும் செய்கிறார்கள். சந்திரயான் மாதிரியை தூக்கிக்கொண்டு கோவில் கோவிலாக சுற்றுகிறார்கள். சந்திரயான் பறந்த பிறகு ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களும் பாஜக பிரமுகர்களும் கூட ஒரு படத்தை சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். அதில், “சந்திரயானை பத்திரமாக கொண்டு சென்றது ஹனுமான்தான்” என்று கூறப்பட்டுள்ளது.