14 ஆவது ஜாதி மறுப்புத் திருமணம் – 18 ஆவது சுயமரியாதைத் திருமணம் இது!
என்னுடைய பிறந்த நாள் பரிசு என்னவென்றால், பிரின்சு அவர்களுடைய திருமண அறிவிப்புதான்!
சென்னை, டிச.14 சம்பிரதாயத்தை உடைத்த குடும்பம் அய்யா என்.ஆர்.சாமி குடும்பம்! பிரின்சு என்னாரெசு பெரியார் குடும்பத்தில், இது 14 ஆவது ஜாதி மறுப்புத் திருமணமாகும் – 18 ஆவது சுயமரியாதைத் திருமணம் இது! ‘‘என்னுடைய பிறந்த நாள் பரிசு என்னவென்றால், பிரின்சு அவர்களுடைய திருமண அறிவிப்புதான்” என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள்: பிரின்சு என்னாரெசு பெரியார் – ச.தீபிகா
கடந்த 10.12.2024 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் – ச.தீபிகா ஆகியோரின் மணவிழாவினை நடத்தி வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி
மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நம்முடைய குடும்பத்தில் நடக்கக்கூடிய ஓர் அருமையான வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சி இது.
நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இவ்வளவு விரைவில், திடீரென்று முடிவடைந்துவிட்டது என்பதையும் நம்ப முடியாத ஒரு நிகழ்ச்சியாகும்.
அறிவிப்புகள் எல்லாம் திடீர் திடீரென்று, ‘‘செவன், செவன், செவன்” போன்று அறிவிப்பு வந்தது.
ஆகவே, அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சி, குறிப்பி டத்தகுந்த அளவு எண்ணிக்கையில், மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் வந்திருக்கக்கூடிய – ஓர் எடுத்துக்காட்டான நிகழ்வாக அமைந்திருக்கிறது.
நான் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்!
அருமைச் செல்வர்கள் தீபிகா – பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமை தாங்கி நடத்தி வைப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியை நான், உங்களைப் போலவே அடைகிறேன்.
நாங்கள் எல்லோருமே எதிர்பார்த்த ஒன்று. நல்ல வகையில், சிறப்பான வாழ்விணையர் அமைந்திருப்பது எல்லா வகையிலும் சிறப்பானதாகும்.
மணமகளின் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்!
குறிப்பாக, வாழ்விணையராக பிரின்சு அவர்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய தீபிகா அவர்கள், தனித்தன்மை பெற்றவர். படிப்புத் துறையானாலும், ஆய்வுத் துறையானாலும் அதில் மிகச் சிறப்பாக இருக்கக் கூடியவர்.
அவரை முற்போக்குக் கருத்தோடு வளர்த்து ஆளாக்கிய அவருடைய பெற்றோர் திருவாளர்கள் நா.சங்கரலிங்கம் – ஜா.மதனராணி ஆகியோர் வெகுவாகப் பாராட்டத்தகுந்தவர்கள்.
நம்முடைய அய்யா என்.ஆர்.சாமி – பேராண்டாள் இல்லத்தில், இந்தத் தலைமுறை, நான்காவது, அய்ந்தாவது தலைமுறையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்ற ஒரு தலைமுறையாகும்.
சம்பிரதாயத்தை உடைத்த குடும்பம் அய்யா என்.ஆர்.சாமி குடும்பம்!
ஆகவே, அந்தக் குடும்பத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடைபெறுவது என்பதை ஒரு புரட்சி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு கட்டை உடைத்திருக்கின்றார்கள். நீண்ட காலமாக இருந்த கட்டை உடைத்தவர்கள் அவருடைய செல்வர்கள்.
எல்லா வகையிலும் இந்த இயக்கத்திற்குப் பயன்படக் கூடியவர்கள்; பயன்பட்டு வரக்கூடியவர்கள். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிலை.
இந்த மணவிழாவினை நடத்துவது என்பது, நம்முடைய குடும்பத்திற்குள்ளே நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சியாகும். அந்த உரிமையோடும், சிறப்போடும், மகிழ்வோடும் இம்மணவிழாவினை நடத்திக் கொண்டி ருக்கின்றோம்.
யாருக்கும் பிடி கொடுக்காமல் இருந்தார்
மணமக்கள் இரண்டு பேருமே, மிகவும் சிறப்புக்குரியவர்கள். இதில் ஒரு பெரிய கவலைக்குரியது என்னவென்றால், இங்கே வந்திருப்பவர்களில், பெரும்பாலோர், பிரின்சுக்கு நெருக்கமான ஓர் உறவு உள்ளவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லோரையும் இணைத்துப் பார்க்கும்போதும், திருமணத்திற்கு ஒப்புதல் தருவதில் பிரின்சு அவர்கள், யாருக்கும் பிடி கொடுக்காமல் இருந்தார்.
என்னுடைய துணைவியார்கூட, அவரிடம் ‘‘எப்பொழுது திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்?” என்று கேட்டவாறு இருப்பார்கள். இதே கேள்வியை என்னுடைய பிள்ளைகளும், அவரிடம் கேட்பார்கள். அதேபோல, மற்ற நண்பர்களும் கேட்பார்கள்.
சரி, அவருடைய முடிவிற்கே விட்டுவிடலாம் என்று நினைத்தோம்.
பிரின்சு அவர்களுடைய அப்பா சாமி.சமதர்மம் அவர்கள், எனக்கு செயலாளராக இருந்தவர் நிறைய ஆண்டுகளாக. எல்லா வகையிலுமே அந்தக் குடும்பம் எடுத்துக்காட்டான குடும்பமாகும்.
கொள்கைப் பல்கலைக் கழகம்!
‘‘நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்” என்றார் புரட்சிக்கவிஞர் அவர்கள். இது ஒரு நல்ல குடும்பம், பல்கலைக் கழகம் மட்டுமல்ல – ஒரு கொள்கைப் பல்கலைக் கழகமாகும்.
அப்படிப்பட்ட இந்தக் குடும்பத்தில், நம்முடைய தீபிகா அவர்கள், புதிய வரவாக இணைகிறார்கள்.
ஒருவருக்கொருவர் நன்றாகப் புரிந்து, தேர்ந் தெடுத்துக் கொண்டவர்கள்.
14 ஆவது ஜாதி மறுப்புத் திருமணம் – 18 ஆவது சுயமரியாதைத் திருமணம்!
பிரின்சு என்னாரெசு பெரியார் குடும்பத்தில், இது 14 ஆவது ஜாதி மறுப்புத் திருமணமாகும். 18 ஆவது சுயமரியாதைத் திருமணம் இது.
எதைக் கொள்கையாகப் பேசுகின்றோமே, அதைச் செய்கிறோம். எதைச் செய்யவேண்டுமோ, அதை மட்டும்தான் செய்கிறோம்.
இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற அருமைத் தோழர்களே! மிகச் சுருக்கமாகவும், மிகவும் நெருக்கமாகவும் இருக்கக்கூடிய நண்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். சுருக்கமான ஒரு நிகழ்வாக இருக்கின்ற காரணத்தினால், பெரிய பாராட்டு, சிறப்பு என்பதெல்லாம் இல்லை.
மணமக்கள் இன்னும் நமக்குப் பயன்படவேண்டும். இந்தக் குடும்பத்துப் பிள்ளைகளையெல்லாம் நம்மு டைய இயக்கத்திற்குக் கொடுத்தவர்கள் அவர்களுடைய பெற்றோர் ஆவர்.
அன்றைக்குப் பிஞ்சுகளாக இருந்தவர்கள்; எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், நான் பார்த்து, சிறிய குழந்தைகளாக இருந்தவர்கள் அவர்கள். இப்பொழுது, அவர்களுடைய ஆலோசனையைக் கேட்டு, அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதன்படி நடக்கக்கூடிய அளவிற்கு, நல்ல வழிகாட்டுகிறார்கள்.
நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டுகிறோம் என்பதை விட, அவர்கள் எங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். ஏனென்றால், இந்தத் தலைமுறை அப்படிப்பட்ட தலைமுறையாகும்.
வயதை வெல்லக்கூடிய உணர்வு வரும்!
தந்தை பெரியார் அவர்கள் சொல்வார், ‘‘நான் எப்பொழுதும் வயதானவர்களிடம் பழகுவதில்லை; இளைஞர்களிடம் மட்டும்தான் பழகுவேன்; அப்பொ ழுதுதான் எனக்கு இளைஞனாக இருக்கக்கூடிய உணர்வு வரும். வயதை வெல்லக்கூடிய உணர்வு வரும்” என்பார்.
அண்ணாவிற்கும், அய்யாவிற்கும் உள்ள வயது வேறுபாடு 30 வயதாகும். கலைஞருக்கும், அய்யாவிற்கும் வேறுபாடு 50 வயதாகும்.
அதேபோன்று, எனக்கும், அய்யாவிற்கும் வேறுபாடு 50 ஆண்டுகளுக்கும் மேலாகும்.
அதேபோன்று நாங்களும் கடைப்பிடிக்கின்றோம். பிரின்சு போன்று இருக்கக்கூடிய இளைஞர்களோடு இருப்பதினால், எப்பொழுதும் அந்த இளமை உணர்ச்சி நமக்கு இருக்கிறது.
வயதை வெல்வதற்கு என்ன வழி என்றால், இதுபோன்ற பிள்ளைகளோடு பழகினால்தான், அவர்களுடைய மனநிலை என்னவென்று தெரியும்.
நம்முடைய மனநிலைக்கு வரவேண்டும் என்று நினைப்பதைவிட, அவர்களுடைய மனநிலைக்கு நாம் செல்ல வேண்டும்.
இரண்டு நாள்களுக்கு முன்பு என்னிடம் இந்த மணவிழாவினைப்பற்றி சொன்னார். நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள் மணமக்களுக்கு.
புத்திசாலித்தமான ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் மணமக்கள். அது எல்லோரும் பின்பற்றவேண்டிய ஒன்றாகும்.
மணவிழாவிற்காக அழைப்பிதழ் கொடுக்கவேண்டும்; அதுவும் நேரிலே சென்று கொடுக்கவேண்டும். சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்கிற சம்பிரதாயத்தையெல்லாம்கூட உடைத்துவிட்டார்கள் இவர்கள்.
மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்களை மட்டும் மணவிழாவிற்கு அழைத்திருக்கின்றோம் என்று சொன்னார்கள்.
பிரின்சு திருமண அறிவிப்பு – என்னுடைய பிறந்த நாள் பரிசு!
என்னுடைய பிறந்த நாளன்று, நம்முடைய முதல மைச்சர் அவர்கள், நேரில் வந்து வாழ்த்து சொன்னார். அவர்கள் வாழ்த்து சொல்வதெல்லாம் அன்புப் பரிசு.
ஆனால், என்னுடைய பிறந்த நாள் பரிசு என்ன வென்றால், பிரின்சு அவர்களுடைய திருமண அறி விப்புதான்.
என்னுடைய பிறந்த நாள் விழா முடிந்து, என்னுடைய அறையில் நான் இருந்தபொழுது, இவர்கள் அங்கே வந்து, என்னைப் பார்த்துக் கும்பிட்டனர். நானும், எல்லோருக்கும் கும்பிடு போடுவதுபோன்று, அவர்களைப் பார்த்துக் கும்பிடு போட்டேன்.
பிறகுதான் பிரின்சு அவர்கள், ‘‘இவரைத்தான் நான் வாழ்க்கை இணையாக ஏற்க உள்ளேன்” என்றார்.
மகிழ்ச்சி வந்தது – கவலை தீர்ந்தது!
அதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரின்சுக்கு இன்னும் மணமாகவில்லையே என்று சமதர்மம் மிகவும் கவலையோடு இருந்தார், அவருடைய கவலையும் தீர்ந்தது.
உங்களையெல்லாம் அன்போடு நான் வரவேற்கி றேன்.
இவர்களுக்கு அறிவுரையோ, வேறு உரையோ தேவையில்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான். அதுகூட வேண்டுகோள் அல்ல – நினைவூட்டல்தான்.
எனக்குத் திருமணம் ஆவதற்கு முன்பு, என்னிடம் அய்யா அவர்கள், திருமணத்தைப்பற்றி சொன்னார்.
நான் அய்யாவிடம், ‘‘இப்பொழுது எனக்குத் திருமணம் தேவையா?” என்று கேட்டேன்.
‘‘இயக்கத்திற்குப் பயன்படும் என்று நினைக்கிறேன்” என்று அய்யா அவர்கள் சொன்னவுடன், அதற்குப் பிறகு நான் எதுவும் சொல்லவில்லை.
இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய வரவுகள்!
அதுபோன்று, இவர்கள் திருமணம் செய்து கொண்டாலும், இதற்கு முன் ஒருவர் பயன்பட்டார் இயக்கத்திற்கு. இப்பொழுது இரண்டு பேரும் பயன்படுவார்கள் என்கிற அளவிற்கு, இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய வரவுகளாக இன்றைக்கு நான் அவர்களைப் பார்க்கிறேன்.
ஏனென்றால், என்றைக்குமே அவர்களை செலவு களாகப் பார்க்கவில்லை. திருமணம் செய்துகொண்டால், அவர்கள் தனி வாழ்க்கைக்குப் போய்விடுவார்கள் என்பது செலவு. ஆனால், இது நிரந்தர வரவு என்று சொல்லக்கூடியதுதான், பிரின்சிடம் இருக்கக்கூடிய தனித்தன்மை. இந்தக் குடும்பத்தினுடைய ஆற்றல் – இந்தக் குடும்பத்தினுடைய தொண்டறம் – அதனுடைய கொள்கை வாழ்வு தனித்துவம் மிக்க நிலையானதாகும்.
இம்மணவிழா எளிமையாக நடக்கிறது; திடீரென்று நடக்கிறது என்பதையெல்லாம் தாண்டி, மிகவும் முக்கியமானது என்னவென்றால், இவர்களுடைய உறவுக்காரர்கள் பல பகுதிகளில், பல ஊர்களில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் தகவல் கொடுத்து, அவர்கள் எல்லாம் இங்கே வருவதை மாற்றியிருக்கிறார் மணமக னான பிரின்சு அவர்கள். எப்படியென்றால், நீங்கள் யாரும் இங்கே வரவேண்டாம்; அதற்குப் பதில் நாங்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டார்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!
ஒரு கல்லில் இரண்டு மாங்காய். மணமக்களுடைய தேனிலவும் அதில் முடிந்துவிடும்; வரவுக்கு வரவு. ஒரே செலவில் எல்லாம் முடிந்துவிடும்.
‘‘கம்புக்குக் களை பிடுங்கினாற் போலவும், தம்பிக்குப் பெண் பார்த்தாற் போலவும்” என்று சொல்லக்கூடிய வாய்ப்புகள்.
இம்மணவிழாவை நடத்தி வைக்கும்பொழுது, இரண்டு பேரை நாம் எப்பொழுதும் மறப்பதில்லை. இம்மணமுறையை உருவாக்கிய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார்; இம்மணமுறைக்கு சட்ட வடிவம் கொடுத்து, நமக்கெல்லாம் ஒரு மான வாழ்வை தந்த அறிஞர் அண்ணா அவர்கள்.
சமூகமும் ஏற்றுக்கொண்டது – சட்டமும் ஏற்றுக்கொண்டது என்று சொல்லக்கூடிய அள வில், அவர்கள் இரண்டு பேரை நினைவில் வைத்துக்கொண்டு, மணவிழா உறுதிமொழி கூறி, மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
இக்குடும்பத்தில் நான் நடத்தி வைக்கின்ற 10 ஆவது மணவிழா
இக்குடும்பத்தில், நான் நடத்தி வைக்கின்ற 10 ஆவது மணவிழாவாகும் இது. மூன்று தலைமுறைக்கு நான் திருமணம் செய்து வைத்திருக்கிறேன்.
இக்குடும்பத்தில், சின்ன சின்ன குழந்தையாக நான் பார்த்தவர்களுக்கெல்லாம், திருமணம் செய்து வைக்கிறேன். இன்னும் நிறைய பேருக்குத் திருமணம் செய்து வைப்பேன்.
இது எதைக் காட்டுகிறது என்றால், முதல் தலைமுறை, இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறைக்கும் நான் திருமணம் செய்து வைத்திருக்கிறேன். சில குடும்பங்களில், நான்காவது தலைமுறையினருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறேன்.
அடுத்த தலைமுறைக்கும் நான் திருமணம் செய்து வைப்பேன் என்று சொல்கிறேன் என்றால், நீங்கள் எல்லாம் நினைக்கலாம், ‘‘இவ்வளவு பேராசை பிடித்தவராக இருக்கிறாரே, இவ்வளவு வயதான பிறகும், இன்னும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாரே?” என்று.
கொள்கையில் இருந்து மாறாமல், வாழையடி வாழையாக…
ஆனால், அது பேராசையல்ல. அதனுடைய தத்துவம் என்னவென்றால், அந்தக் கொள்கையில் இருந்து மாறாமல், வாழையடி வாழையாக வந்ததொரு கூட்டம் என்று ஒரு பாட்டு உண்டு. அதன்படி அந்தக் கொள்கை வழியாக வருகிறார்களே என்பதுதான் அதனுடைய தத்துவமாகும்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.