கானாடுகாத்தானில் ஒரு நாதஸ்வர வித்வானுக்கு ஏற்பட்ட அவமரியாதையை எடுத்துக் காட்டினார்.
தென்னிந்தியாவுக்கே முதன்மையான நாதஸ்வரர் வித்வான் மதுரை சிவக்கொழுந்து. அன்றைய காலத்திலேயே ஒரு நாளைக்கு ரூபாய் 500 வாங்கும் அளவிற்கு திறமை வாய்ந்த செல்வாக்கு வாய்ந்தவர். அவர் செட்டிநாட்டில் உள்ள கானாடுகாத்தானில் ஒரு செல்வந்தரின் வீட்டு திருமணத்தில் நாதஸ்வரம் வாசிக்க வந்திருந்த போது வியர்வையைத் துடைத்துக் கொள்ள ஒரு சிறிய துணியை தோளில் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார்.
பட்டுக்கோட்டை அழகிரி
அப்போது அவரை பிரபுக்கள், “மேளக்காரன் துண்டை போட்டுக் கொண்டு வாசிக்கலாமா?” என்று கண்டித்து வாசிப்பதை தடுத்து தோளில் இருந்த துண்டை எடுக்கச் சொன்னார்கள். அங்கு சென்றிருந்த சுயமரியாதை இயக்கத்தின் முதன்மை பிரச்சாரகரான .தளபதி பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் வித்வான் சிவக்கொழுந்தை நோக்கி, “நீங்கள் தோளிலிருந்து துண்டை எடுக்கக் கூடாது. அப்படியே வாசியுங்கள் கேட்பவர்கள் கேட்கட்டும் கேட்காதவர்கள் போகட்டும். இல்லையென்றால் நீங்களாவது வாசிக்காமல் போய்விடுங்கள்” என்றார். பார்ப்பனர் அல்லாத வித்வான் துண்டு போடுவதற்கு இருந்த தடை அவர்களின் வைதீகத்தின் கோர முகத்தை காட்டுகிறது அல்லவா? இந்த நிலையில் அவரை அழைத்த செல்வந்தர் தன் வீட்டு திருமணத்தில் நாதஸ்வரம் வாசிப்பவர் பாதியிலேயே சென்றால் அவமானம் ஆகி விடுமே என்று கருதி சமாதானம் செய்து தோளில் துண்டோடு வாசிக்க ஏற்பாடு செய்தார். இது ஒரு ஊரில் நடைபெற்றது அல்ல. நாடு முழுவதும் இதுதான் நிலை. தென்னிந்தியாவிலேயே முதன்மையானவராக இருந்த அவருக்கே அந்த நிலை என்றால் கிராமங்களில் வாசிக்கும் தோழர்களின் நிலையை கேட்க வேண்டுமா?
– ஆதாரம்: புலவர் இமயவரம்பன் எழுதிய ‘தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே’ நூலிலிருந்து…