பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
வல்லம், டிச. 14- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 11.12.2024 அன்று பன்னாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (அய்சிஏஓ) 80ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா நடைபெற்றது. 7.12.2024 அன்று சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற துவக்க விழா கொண்டாடத்தைத் தொடர்ந்து இவ்விழா இங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இந்திய விமான நிலைய ஆணையம், ஏரோநாட்டிக்ஸ், அஸ்ட்ரோனாட்டிக்ஸ் மற்றும் ஏவியேஷன் நிறுவனம், இந்து தமிழ் திசை, ஸ்டார்ட்அப் டிஎன் மற்றும் தஞ்சாவூர் புல்லினம் ஏரோஸ்பேஸ் டெக்னலஜிஸ் ஆகிய வற்றுடன் இணைந்து பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூரைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் டாக்டர் என்.டி.பாலசுந்தரம், தொழில் வர்த்தக சங்க மேனாள் தலைவர், வேளாண் வணிக துணை இயக்குநர் செல்வி ஆர்.சாருமதி, டெல்டா மாவட்டங்களின் ஸ்டார்ட்அப் திட்டத் தலைவர் டாக்டர் பி.கருப் பணன், மற்றும் அய்ஏஏஏ கவுரவச் செயலர் பேராசிரியர் சி.எஸ்.கருணாகரன், அய்ஏஏஏ டெல்டா மாவட்டங்களின் தலைவர் முத்துராமன் மற்றும் பெரியார் மணியம்மையின் விண்வெளி துறையின் தலைவர் கார்த்திக் சுப்பிரமணியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விண்வெளித் துறை
டாக்டர் கருப்பணன் தனது உரையில், விண்வெளித் துறைக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து ஒரு செழிப்பான தொழில் முனைவோருக்கான சுற்றுச்சூழலை வளர்ப்பதற்கான தமிழ்நாடு அரசின் பங்களிப்பு மற்றும் செயல் திட்டங்கள் பற்றி பேசினார். புல்லினம் ஏரோஸ்பேஸ், யாழி ஏரோஸ்பேஸ் மற்றும் விமனா லேப்ஸ் இந்தியா உள்ளிட்ட தஞ்சாவூரில் இருந்து வெளிவரும் நம்பிக்கைக்குரிய விண்வெளி ஸ்டார்ட்அப்கள் குறித்து அவர் பெருமிதம் தெரிவித்தார். இளம் பிராந்தியத்தை புதுமை மற்றும் விண்வெளித் தொடக்கங்களுக்கான முன்னணி மய்யமாக நிலை நிறுத்துவதற்கும் ஏராளமான வாய்ப்புகளை அவர் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வின் போது விண்வெளித் துறையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில் பல விருதுகள் வழங்கப்பட்டன. பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்திற்கு சிறந்த ஸ்டார்ட்அப் இன்குபேட்டர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வின்போது சென்னை சத்தியபாமா நிகர் நிலைப்பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வணிகக் காப்பகத் திற்கும், யாழி ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கும் வான்வெளித் துறையில் சிறந்த பங்களிப்பிற்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து டெல்டா ஹப் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 நம்பிக்கைக்குரிய தொழில் முனை வோருக்கு ஸ்டார்ட்அப் டிஎன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தஞ்சாவூரைச் சார்ந்த பல தொழில்முனைவோரும் மற்றும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் விண்வெளி பொறியியற் துறை யைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.