சென்னை, டிச.14- ஒன்றிய அரசு ஏற்கெனவே வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆய்வு
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்துக்கு நேற்று (13.12.2024) வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலியில் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. ஏற்கெனவே 2 நாட்களாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மூத்த அய்ஏஎஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மிகப் பெரிய அளவுக்கு பாதிப்புகள் இல்லை. அதுபோல வந்தாலும், சமாளித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.
நீர்த்தேக்கம், ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதற்கு முன்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தென்காசி பகுதிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்றுள்ளார். திருநெல்வேலிக்கு சென்றிருந்த அமைச்சர் நேரு, திருச்சி மாவட்டத்தில் மழை பெய்துள்ளதால் அங்கு வந்தார். திருநெல்வேலியில் மழை பெய்துள்ளதால் அவரை மீண்டும் அங்கு அனுப்பி உள்ளோம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் முடிந்து, நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட வழங்கி முடிந்துவிட்டது. ஒன்றிய அரசிடம் பேரிடர் நிதியை தொடர்ந்து கேட்கிறோம்.
நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் பேசியுள்ளனர். ஆனாலும், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு குறைவாகவே தருகின்றனர். ஒன்றிய அரசு ஏற்கெனவே வழங்கியுள்ள நிதி எப்படி போதும். அது போதுமானதாக இல்லை. ஊடகத்தினர் இதுபற்றி தொடர்ந்து எழுதினால், அதுவே பெரிய அழுத்தமாக இருக்கும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எங்களால் முடிந்தவரை ஒன்றுசேர்ந்து இதை கடுமையாக எதிர்ப்போம். கூட்டணிக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து போராட்டம் நடத்துவது குறித்து யோசனை செய்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
இசைக்கலைஞர் டாக்டர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு
எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில்
பண முடிப்பு வழங்க தடை இல்லை
தனி நீதிபதி ஆணை ரத்து
இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
சென்னை, டிச.14- ‘இந்து’ குழுமம் சார்பில் கருநாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் ரூ. 1 லட்சத்துக்கான பணமுடிப்பை வழங்க தடையில்லை எனக் கூறியுள்ள இரு நீதிபதிகள் அமர்வு, இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
கருநாடக இசையில் சிறந்து விளங்கும் இசைக் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி சார்பில் ஆண்டு தோறும் ஒரு கலைஞர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய ‘சங்கீத கலாநிதி’ விருதும், பாராட்டுப் பத்திரமும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.’மியூசிக் அகாடமி’ சார்பில் வழங்கப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வு செய்யப்படும் அதே இசைக் கலைஞருக்கு,‘இந்து’குழுமம் சார்பிலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் ரூ. 1 லட்சத்துக்கான பண முடிப்பு கடந்த 2005ஆம் ஆண்டு முதல் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான (2024) ‘சங்கீத கலாநிதி விருது மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பண முடிப்புக்கு பிரபல கருநாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டி.எம். கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பணமுடிப்பு வழங்கக்கூடாது என தடைகோரி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சிறீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தனி நீதிபதி உத்தரவு: அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதியான ஜி.ஜெயச்சந்திரன், ‘‘கருநாடக இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘மியூசிக் அகாடமி’ சார்பில் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்குவதற்கோ அல்லது ‘இந்து குழுமம்’ சார்பில் ரூ.1 லட்சம் பண முடிப்பு வழங்குவதற்கோ எந்த தடையும் இல்லை. ஆனால் இந்து குழுமம் சார்பில் வழங்கப்படும் ரூ.1 லட்சம் பண முடிப்பை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் வழங்கக்கூடாது, என கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மியூசிக் அகாடமி மற்றும் ‘இந்து’ குழுமம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
பணமுடிப்பு வழங்க தடையில்லை: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்து’ குழுமம் சார்பில் கருநாடக இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் ரூ. 1 லட்சத்துக்கான பணமுடிப்பை வழங்க தடையில்லை எனக்கூறி, இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.