தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனே அகற்ற வேண்டும்
சென்னை, டிச.14- தமிழ்நாட்டில் 49 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனே அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அடைமழை
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னர் வளைகுடாவில் நிலவுவதால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இதுதொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், தலைமைச் செயலர் கடந்த 10ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பல அறிவுரைகளை வழங்கினார்.
கனமழை, மிக கனமழை பெற வாய்ப்பு உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண் காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கடந்த 12ஆம் தேதி இரவு மாநில அவசர கால செயல்பாட்டு மய்யத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி, நிலைமையை கேட்டறிந்தார். மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, அரியலூர், கடலூர், தென்காசி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவாரூர், செங்கல்பட்டு, பெரம்பலூர் மாவட்டங்களில் 49 இடங்களில் 20 செ.மீ. முதல் 50 செ.மீ. வரை அதிகனமழை பெய்துள்ளது. பூண்டி, பிச்சாட்டூர், சாத்தனூர் நீர்த்தேக்கங்களில் இருந்து கடந்த 12ஆம் தேதி முதல் தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளுடன் உபரி நீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம், புழல், சேத்தியாதோப்பு ஏரிகளில் இருந்து 13ஆம் தேதி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் வெள்ள அபாயம் குறித்து 11.75 லட்சம் பேரின் கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
அரியலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்து 2 பேரும், சிவகங்கை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஆய்வு
இந்த நிலையில், சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (13.12.2024) காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பாதிப்புகள், நிவாரண பணிகள் குறித்து ஆட்சியர்கள், கண்காணிப்பு அலுவலர்களிடம் காணொலி வாயிலாக கேட்டறிந்தார்.
‘‘மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனே அகற்ற வேண்டும். மக்கள் தங்குவதற்கு முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். அங்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று அவர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் துறை செயலர் அமுதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.