வைக்கத்தில் கடந்த 12ஆம் தேதி – வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, கேரள மாநிலத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம், நூலகம் திறப்பு விழா – வரலாற்றில் என்றென்றும் நிலைத்து ஜொலிக்கும் வைர மகுடமாகும்.
1975 – வைக்கம் பொன் விழா தொடங்கி, நேற்று முதல் நாள் (12.12.2024) வரை வைக்கத்தில் நடைபெற்ற நான்கு நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு உரையாற்றியவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்!
கடந்த 12ஆம் தேதி கேரள மாநில முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் தலைமையில், தந்தை பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு
மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு
கி. வீரமணி அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினார். காட்சி யகத்தை அவரையே திறக்க வைத்தார் நமது முதலமைச்சர்.
விழா சிறப்புகள் குறித்தும், தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் தந்தை பெரியார் நடத்திய அறப்போர் குறித்தும் குறிப்பிட்ட தலைவர் ஆசிரியர் அவர்கள், தமது உரையை முடிப்பதற்குமுன் முன்வைத்த கருத்தும், வேண்டுகோளும் மிக மிக முக்கியமானதாகும்.
கண்களைப் பறித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் நிகழ்வுகள், ஏற்பாடுகள் மிகச் சிறப்பானவை என்பதில் அய்யமில்லை.
அதைவிட அதி முக்கியமானது எந்த வெற்றிக்காக – நோக்கத்துக்காக வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதோ – அதன் நீட்சியாக நாம் மேற்கொள்ள வேண்டிய வெற்றி பெற வேண்டிய முக்கிய அம்சம் – மய்யப் புள்ளிதான் மிக மிக முக்கியமானதும் அவசியமானதுமாகும்.
அந்த முக்கியமான கடமையைத்தான் திராவிடர் கழகத் தலைவர் முத்தாய்ப்பாக செய்தார்.
வைக்கத்தில் தலைக்கொழுத்து ஆணவ ஆட்டம் போட்ட – மனிதத் தன்மைக்கும், உரிமைக்கும் எதிரான தீண்டாமையை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் வைக்கத்தில் நடத்தப்பட்ட போராட்டம் என்பது வரலாற்றில் ஒரு திருப்பம் வாய்ந்த வைர மைல் கல் என்பது அடித்து வைக்கப்பட்ட கல்வெட்டாகும். அதே நேரத்தில் தீண்டாமை என்பது தனித்துவமான ஒரு நோயா என்றால், இல்லை என்பது தான் சரியான விடையாகும்.
ஆம், தீண்டாமை என்பது ஜாதியின் விளைவாகும். ஜாதியின் ஆணி வேரும் மூல ஊற்றுமாகும்.
மூலக் கருவை அழிக்காமல், அதன் விளைவுகளோடு சண்டை போட்டு, கிளைகளையும், இலைகளையும் கழிப்பது – தற்காலிக வெற்றியே!
இதனைத்தான் வைக்கம் நூற்றாண்டு விழாவில் முன்னிலை வகித்து உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மய்யப்படுத்தினார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பகுதியில் வெறும் தீண்டாமை (UNTOUCHABILITY) ஒழிக்கப்படுகிறது என்று மட்டுமே இருக்கிறது. அது போதுமானதல்ல; அந்தத் தீண்டாமைக்குக் காரணமான ஜாதி (Caste) ஒழிக்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்; அதற்கு சமூகநீதியில் ஆர்வமும், உண்மையான பற்றும், மதிப்பும் கொண்ட அனைத்துத் தரப்பினரும், கட்சியினரும், முன் வர வேண்டும் என்பதுதான் வைக்கம் நூற்றாண்டு விழாவின் செய்தி (Message) என்று சொல்லும் அளவுக்குத் தன் உரையில் முத்திரையடியாகப் பிரகடனப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர்.
மக்கள் வெள்ளத்தின் பலத்த கரஒலி, ஆசிரியர் அவர்களின் கருத்தை வழிமொழிவதாய் அமைந்திருந்தது.
1973 டிசம்பர் 8,9 நாள்களில் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் தன் வாழ்நாளில் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் என்ற முறையில் தீர்மானங்களை முன்மொழிந்தவர் – அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி ஆவார்கள்.
நிறைவேற்றப்பட்ட ஆறு தீர்மானங்களுமே ஜாதி ஒழிப்பை மய்யம் புள்ளியாகக் கொண்டவைகளே!
தீர்மானம்: ‘‘ஜாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்பட வேண்டும்; நடப்பிலும் இல்லாது பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்; ஜாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்யப்பட வேண்டும். இதனை வெறும் மனமாற்றத்தால் மட்டுமே செய்ய முடியுமென்று தத்துவார்த்தும் பேசி காலங்கடத்தாமல், ‘‘தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் அது சட்ட விரோதம்’’ என்று அரசியல் சட்டத்தின் 17ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள ‘தீண்டாமை’ (“Untouchability”) என்பதற்குப் பதிலாக ‘ஜாதி’ (“Caste”) என்ற சொல்லை மாற்றி ஜாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்துவதாக அமைய வேண்டும்.
சமுதாய இழிவினை மாற்றுகின்ற இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் டில்லி அரசாங்கம் மறுக்குமானால், எங்களைச் ‘‘சூத்திரர்களாக’’, இழிபிறவிகளாக ஆக்கும் இப்படிப்பட்ட ஆட்சியின்கீழ் நாங்கள் குடிமக்களாக இருக்க சம்மதம் இல்லை என்பதை அறிவிப்ப தோடு, அதற்கான கிளர்ச்சிகள் நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது.
தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இது குறித்து மத்திய அரசுக்கு ஒரு ‘காலக்கெடு’ கொடுப்பதுடன், அக்காலக் கெடுவுக்குள் நமக்கு சரியான சமாதானம் தந்து உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கத் தவறுமேயானால்,
மாபெரும் கிளர்ச்சித் திட்டங்களைக் கீழ்க்காணும் வகையில் சாந்தமும் சமாதானமும் ஆன வழிமுறைகளில் எவ்வித பலாத்காரமான செய்கைகளுக்கும் இடம் இல்லாமல் இதற்கு முன்னால் உள்ள ஆட்சியில் நாம் செய்தது போலவே மேற்கொள்வது என முடிவெடுக்கப்படுகிறது.
1. அரசியல் சட்ட எரிப்பு,
2. பகிஷ்காரங்கள்,
3. தடை வேலைகள் (தடுப்புப் பணிகள்)
முதலிய காரியங்கள் மூலம் கிளர்ச்சிகள் செய்யப்படும்.
இதற்கான கிளர்ச்சித் தேதி குறிப்பிடுவதையும், மேற்கொண்டு காரியங்கள் செய்வதையும் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு இம்மாநாடு பொறுப்பு அளிக்கிறது.’’
மேலும் ஒரு தீர்மானம்: ‘‘தமிழர்களை நாலாஞ் ஜாதியாக்குகிற கடவுள்களையும்; அதனை உறுதிப்படுத்தும் மதத்தினையும்: பிரசாரம் செய்கின்ற பத்திரிகைகளையும் தமிழ்ப் பெருமக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.’’
முக்கியமாக அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது தீர்மானம் குறிப்பிடத்தக்கதாகும். தந்தை பெரியாரின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் அதே தீர்மானத்தை நினைவூட்டும் வகையிலும், வலியுறுத்தும் தன்மையிலும் அதே தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிகப் பொருத்தமாக, சொல்ல வேண்டிய இடத்தில், வலியுறுத்த வேண்டிய இடத்தில், மாநாட்டுச் செய்தி போல அறிவித்தது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.
மாநாட்டின் சிறப்புகளையும், வண்ணங்களையும் அசைப் போட்டுத் திரும்பிய, விழாவை நேரில் கண்டு ரசித்த – சுவாசித்த மக்கள் மனித உரிமையையும், சமத்துவத்தையும் பேணும் அத்தனைக் கோடி மக்களும் உள் வாங்கி அதனை நிறைவேற்றிக் கொடுக்கத் தோள்களை உயர்த்த வேண்டியவர்களே ஆவார்கள். அதற்காக எந்த விலையையும் கொடுக்க சித்தமாக வேண்டியவர்களே!
மாநாட்டின் முழு வெற்றியின் உயிர் அதில் தான் கர்ப்பம் கொண்டிருக்கிறது!
ஒழியட்டும் ஜாதி!
வெல்லட்டும் தந்தை ெபரியாரது கருப்பொருள்.