கேள்வி 1: இரண்டு மாநில அரசுகள் முன்னின்று நடத்திய – “வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்” நூற்றாண்டு நிறைவு விழாவிற்குப் பின்னரும் – சில பார்ப்பன எழுத்தாளர்கள், வைக்கத்திற்கும் – பெரியாருக்கும் சம்பந்தமே இல்லை என்பது போன்று கதை விடுகிறார்களே?
– ம.முருகன், வேலூர்
பதில் 1: மக்கள் அவர்களை பச்சைப் பொய்யர்கள் என்று புரிந்துகொள்ள, இந்த வயிற்றெரிச்சல் வக்கிரர்கள் – இப்படி சந்தர்ப்பங்களை அடிக்கடி தருவது, அவர்கள் முகமூடியை அவர்களே கழற்றிக் காட்டி மக்களுக்கு உதவுகிறார்கள், அதற்கு நன்றி!
– – – – –
கேள்வி 2: கேரள மண்ணில் தமிழ்நாடு முதலமைச்சரால் கருநாடக மாநில எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு “வைக்கம் விருது” வழங்கப்பட்டது குறித்து?
– ச.வேம்புலி, திண்டிவனம்
பதில் 2: உண்மையான மக்கள் ஒருமைப்பாடு – மனிதநேயத்திற்கு அதுவே தக்க சான்று. ‘திராவிட மாடல்’ ஆட்சிச் சாதனைகளுக்கு நல்ல எடுத்துக்காட்டு.
– – – – –
கேள்வி 3: நூறாண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாரை சிறையிலடைத்த மண்ணிலே அவருக்கு விழா எடுத்தது என்பது சமூகநீதிப் போராட்ட வரலாற்றில் முக்கியமான நிகழ்வு அல்லவா?
– த.செங்குட்டுவன், திருத்தணி
பதில் 3: பெரியார் மறையவில்லை; மாநில வேறுபாடு இல்லாமல் மக்கள் நெஞ்சில் நிறைந்துள்ளார் என்பதற்கும் சிறந்த உதாரணம்!
– – – – –
கேள்வி 4: இந்தியாவை ‘ஹிந்துஸ்தான்’ என்பதில் தவறில்லை என்கிறாரே அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ்?
– ம.வள்ளுவன், மதுரை
பதில் 4: அந்த நீதிபதியின் அதீதமான பேச்சு அரசமைப்புச் சட்ட தத்துவத்திற்கு விரோதமானது. நாடாளுமன்றத்தில் ‘இம்பீச்மெண்ட்’ கண்டனம் கொண்டு வர மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் அவர்களே முதல் முன்மொழிதலைச் செய்துள்ளார் என்பது அகிலம் அறிய வேண்டிய செய்தி அல்லவா?
– – – – –
கேள்வி 5: விஸ்வகர்மா திட்டத்தைப் போன்றதே கலைஞர் கைவினைத் திட்டமும் என்று சங்கிகளால் பரப்பப்படும் உண்மைக்கு மாறான தகவல் குறித்து?
– தா.முல்லைவேந்தன், ஓசூர்
பதில் 5: ‘வெண்ணையும், சுண்ணாம்பும்’ ஒன்றாகி விடுமா? அவை இரண்டும் வெள்ளை நிறம் என்றாலும்கூட! ‘நஞ்சும், தேனும்’ ஒன்றாகிவிடுமா?
– – – – –
கேள்வி 6: வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயம் அமைத்தே தீருவோம் என்று சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முழங்கியது குறித்து?
– மா.காளிதாசன், காஞ்சி
பதில் 6: ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தனிச் சிறப்பான கொள்கைப் பிரகடனம் அது! நம் சிந்தையெல்லாம் குளிர்ந்தது!
– – – – –
கேள்வி 7: ஏ.அய். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் காலத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு உத்தரவிடும் நிலை ஏற்பட்டுள்ளதே?
– கல.சங்கத்தமிழன், நுங்கம்பாக்கம்
பதில் 7: கவனஞ்செலுத்த வேண்டிய தலையாய சமூகப் பிரச்சினைகளில் இது முன்னுரிமை கொடுத்து ஒழிக்கப்பட வேண்டியதாகும்.
– – – – –
கேள்வி 8: முத்தமிழறிஞர் கலைஞரின் முயற்சியால் மைசூரில் இருந்து போராடிப் பெற்ற தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் கருநாடகாவிற்கு மாற்றுவதற்குத் தமிழின விரோதிகள் எடுக்கும் முயற்சிகளை ‘திராவிட மாடல்’ அரசு தடுத்து நிறுத்துமா?
– கே.அன்புமொழி, தஞ்சை
பதில் 8: நிச்சயம் அது சாதிக்கும். அதனால்தானே அது ‘திராவிட மாடல்’ அரசு. ஓய்ந்திருக்காது – உறங்காது இது நிச்சயம்!
– – – – –
கேள்வி 9: வைக்கத்தில் போராடி – ஒடுக்கப்பட்ட மக்கள் தெருவில் நடக்க உரிமை வாங்கித் தந்த தந்தை பெரியார் மண்ணில் – இறந்தவர் உடலை அடக்கம் செய்ய தனி இடுகாடு இருப்பது நியாயமா?
– க.சாக்கியமுனி, வியாசர்பாடி
பதில் 9: இதுபற்றி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட தமிழ்நாடு அரசினை வற்புறுத்தி செயல்பட வைப்போம்.
– – – – –
கேள்வி 10: உங்கள் பிறந்த நாள் விழாவில் 92இல் வந்து 29இல் திரும்புகின்றேன் என்ற உங்கள் உற்சாகத்தை வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மேலும் அதிகரித்திருக்கிறதா?
– மா.வெற்றிமணி, திருவள்ளூர்
பதில் 10: ஆம். ஆம்!! நமது முதலமைச்சரிடம் நன்றி தெரிவித்துச் சொன்னோம். கருஞ்சட்டைத் தோழர்களுக்கு மேலும் 10 வயது – வாழ்வில் கூடியது என்று! மகிழ்ந்தார். நமது வாழ்விலோர் திருநாள். பெரும்பேறு பெற்றவர்கள் நாம். இந்த ஆட்சியை கண்ணை இமை காப்பதுபோல காப்போம்! கேடயமாக என்றும் இருப்போம்!!