கொக்கரக்கோ
உங்களுக்குக் கூவுதற்கு –
என்றும் கொக்கரக்கோ
உங்களுக்குக்
கூவுதற்கு – எங்கள்
திக்கு மேற்கில் சூரியனை
அனுப்பி வைப்போம்!
இன்று
கொக்கரக்கோ
அழைத்தது
கூவி என்னை!
கவி தந்திடத்தான்
எம் கிழக்கைப்
பாட வந்தோம்!
கிழக்கென்று சொன்னதும்
காலையின் நினைப்பு!
கிழவனின் தனயனே!
உனைப் பாடத் துடிப்பு!
அதிகாலை வேளையிலும்
வேகமுடன் நடப்பாய்!
அதிவேகப் பயணத்திலும்
கருத்தெழுதிக் குவிப்பாய்!
துறைதோறும் புதுநூல்கள்
தேடி நிதம் படிப்பாய்!
தொண்ணூறைக் கடந்துவிட்டாய்
என்றுசொன்னால்
வெடிப்பாய்!
வயதைக் கணக்கெடுக்கா
வாலிபச் சிந்தை!
இளமை முறுக்கோடு
எட்டி உதைக்கிறார்
எதிரிகளிடும் பந்தை!
புகழுக்கும் மயங்காத
பொன்னிதயம் தன்னை
என்ன செய்யக்கூடும்
சழக்கர்களின் நிந்தை!
காணாத சூழ்ச்சியில்லை!
எனினும் உன்
குணத்தினிலே தாழ்ச்சியில்லை!
சகியாத தொல்லையில்லை!
கடந்து வந்த
துணிவுக்கு எல்லையில்லை!
கேளாத வசையுமில்லை!
எண்பது ஆண்டுகளாய்
எதற்கும் நீ இசையவில்லை!
புயல் வெள்ளம் மழை எல்லாம்
பொருட்படுத்தாப் பயணம் நீ!
முயலெய்த அம்பல்ல;
பகைச் சேனை பல சாய்த்த
குறியம்பின் கவனம் நீ!
தட்பவெட்பம் அறியாது
தமிழ் மண்ணில்
கால்பாவ நினைக்கின்ற
காவிகளைக் காலமெல்லாம்
கலங்க வைக்கும்
சலனம் நீ!
வெற்றுத் துணிச்சலில்
வினையாற்ற விழைகின்ற
வீணர்தம் முயற்சிகளை
வேரோடு களைந்தெறிய
வீறு கொண்டெழுந்து
வீசுகின்ற பவனம் நீ!
தடையில்லாப் பயணம் நீ!
குறியம்பின் கவனம் நீ!
எதிரிகளின் சலனம் நீ!
சுழன்றடிக்கும் பவனம் நீ!
இமைப்பொழுதும் சோராமல்
இனப்பகையைச் சாராமல்
பாதையிலே மாறாமல்
பகலவனாம் பெரியாரைச்
சுற்றிவரும் புவனம் நீ!
காரணங்கள் சரியென்றால்
களம் ஏகும் உன் கால்கள்!
காரியங்கள் ஆற்றுதற்குக்
கருவிகளாய் உன் கைகள்!
தோரணங்கள் தூடணங்கள்
தொடர்வதில்லை உன் மூளை!
ஆரியத்தின் ஆரணங்கள்
அழித்தொழித்தல் உன் வேலை!
ஒன்றல்ல இரண்டல்ல
பல் துறையில் வல்லான் நீ!
ஒருவரியும் மறுக்கவொண்ணா
சால்புமிகு சொல்லான் நீ!
கூர்மை மிகு கருத்துகளால்
வீழ்த்துகின்ற வில்லான் நீ!
ஊர் உலகம் வாழவைக்க
உனைக் கொடுக்கும் நல்லான் நீ!
உனக்குப்
பெரியார்தான் அளவுகோல்!
ஓர் இம்மி குறைந்தாலும்
உனக்கு அது ஆகாது!
ஓர் இம்மி மிகுந்தாலும்
உன் கால்கள் நீளாது!
உனக்குப்
பெரியார்தான் துலாக்கோல்!
எடைபோட்டு எவர் திறமும்
குறைத்திடாது உன் நீதி!
எவர் பண்பும் அறியாமல்
போனதில்லை கைமீறி!
உனக்குப்
பெரியார் தான் நாள்காட்டி!
ஏழிருபத்தி நாலும்
உனக்கு நல்ல நேரம்!
பெரியாரை நினையாத
ஒரு நொடியும் பாரம்!
உனக்குப்
பெரியார் தான் திசைகாட்டி!
அய்யிரண்டு திசைமுகத்தும்
அவர் புகழை வைப்பாய்!
வையமெல்லாம் மனிதமெனும்
இழைகொண்டு தைப்பாய்!
தலைவா!
எட்டும் ஆண்டுகளில்
நூற்றாண்டு! – இன்னும்
எட்டு ஆண்டுகளில் நூற்றாண்டு!
எமக்கது போதாத இலக்கு! – இன்னொரு
நூற்றாண்டை அங்கிருந்து துவக்கு!