கொள்ளையிடும் ஓவியம்போல் அழகு! – சின்னக்
குழந்தையுடன் ஆசிரியர் பொலிவு! – பார்க்கும்
உள்ளமெலாம் பூத்திருக்கும்
ஒளிபொழிந்து காத்திருக்கும்
துள்ளலுடன் இன்பமெனும் நிலவு! – நெஞ்சில்
தூளிகட்டி ஆடிடுதே மகிழ்வு!
கள்ளமில்லா நெஞ்சக்கண் காட்சி! – காணும்
கண்விரித்துக் களிபுரியும் ஆட்சி! நெஞ்சின்
உள்ளிறங்கி ஊற்றுடைத்தே
உவகைவெள்ளம் பாயவைத்தே
நல்விருந்து நல்குநகை மாட்சி! – பகை
வெல்லுநகை வீரியத்தின் சாட்சி!
மின்சிரிப்பை இதழிடையில் பூட்டி – இசை
மீட்டுகின்றார் அதிர்வலைகள் கூட்டி! – ஒளிர்
வெண்முத்துப் பரல்கோத்த
வெள்ளியிழைத் தோரணம்போல்
கண்பறிக்க ஒளிச்சிதறல் கூட்டி – மயக்கி
வென்றிடுவார் யாரெனவோர் போட்டி!
இளமமையுடன் தொடங்கிடுவார் நாளை! – விரைந்(து)
எட்டுவைத்து நடைபயில்வார் காலை! – அருங்
கழகமெனுங் கோட்டையினைக்
காத்தருளும் வீரனைப்போல்
சுழற்றிடுவார் கொள்கையெனும் வாளை! – பகை
கலக்கமுற்றே ஒடுக்கிவைக்கும் வாலை!
ஆசிரியர் பிறந்தநாள் இன்று! -அய்யா
அன்னைபின்னே தொண்டுசெயுங் கன்று! – பொய்யா
மாசில்லாத் தொண்டறத்தை
வாழ்நெறியாய் வலிந்தேற்று
வீசுகிறார் தென்றெலெனச் சென்று! – மெய்யர்
வீரமணி வாழ்கநீடு நன்று!
பல்லாண்டு ஆசிரியர் வாழ்க! – இயக்கப்
பணியாற்றி தொண்டாற்றி வாழ்க! – பயக்கும்
நல்லறிவை எமக்களித்து
நாளுமெமை வழிநடத்தி
முன்னேராய் முறைப்படுத்தி வாழ்க! – எங்கள்
தன்னேரில் தலைவர்நீடு வாழ்க!
– செல்வ மீனாட்சி சுந்தரம்