பாக்குளித்த தமிழிருக்கப் பசையற்ற இந்திமொழி
பந்திக்கு வருவதென்ன சரியார் முன்
தீக்குளித்த தமிழர் திசைவணங்கி மீண்டுமொரு
தீமுட்டத் தானிந்தச் சதியா?
நாடெல்லாம் இந்திமொழி நடமாட வேண்டுமெனில்
நமதொருமைப் பாடென்ன கனவா? – தமிழ்
நாடென்ன அடிவருடி நயத்தக்க மொழிபேசி
நஞ்சருந்தி விடுமென்ற நினைவா?
இடைவேளை விட்டுவிட்டு இடையசைத்து வருவதிந்த
இந்திமக ளுக்குஒரு கேடா? – தமிழ்ப்
படையென்றும் இந்திக்குப் பகையென்று தெரியாதா
பாம்புக்குப் புற்றெங்கள் விடா?
‘அஞ்சலிலும் எல்ஜசி ஆகாஷ வாணி’யிலும்
ஆதிக்கம் செய்வதென்ன முறையா? – எமை
வஞ்சிக்கப் பலதிட்டம் வகுத்தாலும் வேலைக்கு
வாய்ப்பென்று சொல்வதொரு கலையா?
‘எழுதுகோல் ஆண்பாலாம் எழுதுமதாள் பெண்பாலாம்’
இதைச்சொல்லும் இந்தியொரு மொழியா? – அதை
வழிமொழிய வேண்டுமென வருகின்ற கட்டளைகள்
வரலாற்றுப் போருக்கு வழியா?
கடவுளுக்கு வடமொழியும் கல்விக்கே ஆங்கிலமும்
அரசியலுக கிநதியுமே கதியா? – வாழும்
தடமெங்கும் நந்தவனம் தான்படைக்கும் தமிழர்க்குத்
தன்மொழியைப் போற்றிடவும் தடையா?
வந்திக்க வேண்டுமென வலைகொண்டு வருமொழியை
வரவேற்று வணங்கி எம் தலையார் – சீ
இந்திக்குப் பரிவட்டம் ஏன்கூட்ட வேண்டுமென
எழுகின்ற குரல்கேட்க விலையார்
தொண்ணூறு வருடங்கள் தொடர்ந்துவரும் சூழ்ச்சிகளில்
தோற்றபின்னும் இந்த நிலையா? – அட…
கண்ணாகத் தமிழ்நாட்டைக் காக்கின்ற தளபதிமுன்
காவிகளும் உதிர்ந்துவிடும் ‘இலையா!’
உயிர்கொண்டு மொழிகாத்த ஓங்குபுகழ் தமிழ்நாட்டில்
ஒட்டுண்ணி மொழிக்கென்ன வேலை? – எங்கள்
உயிருள்ள வரையிங்கே உலவாது வடஇந்தி!
உணரட்டும் வடவர்களின் முளை!
இந்தியா ஒன்றுதான்; எமதினிய நாடுதான்!
‘இந்தி’யா அதைமாற்ற வேண்டும்? – வட
இந்தியா இதைமட்டும் சிந்தியா திருக்குமெனில்
எப்போதும் நினைவூட்ட வேண்டும்!
– கவிஞர் கங்கைமணிமாறன், மயிலாடுதுறை