கோவில் சொத்தை செல்வாக்கான தனி நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும், டிவிஎஸ், தினமலர், சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாவடுதுறை ஆதீனம் போன்றவர்கள் இரண்டு லட்சம் ஏக்கரை எப்படி ஆட்டையை போட்டனர்?
அந்தக் காலத்தில் தர்ம சிந்தனையுள்ள நல்லோர்கள் தங்கள் சொத்தின் ஒரு பகுதியை கோவிலுக்குத் தருவது ஒரு வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டது. அந்த வகையில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தமிழ் நாட்டில் கோவில்களுக்கு கொடையாக தரப்பட்டுள்ளது. அவற்றை அந்தக் கோவிலில் உள்ள அர்ச்சகர்களும், உள்ளூர் முக்கியஸ்தர்களும் அபகரித்து வந்தனர் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்ததையடுத்து இந்து அறநிலையத் துறை உருவானது.
அப்படி உருவான இந்து அறநிலையத்துறை ஓரளவு நில அபகரிப்பை கட்டுப்படுத்தினாலும், பெரும் செல்வாக்குமிக்க சில செல்வாக்கான நபர்கள் கோவில் சொத்துக்களை அபகரித்ததை அரசால் மீட்கவே முடியவில்லை என்பது தான் வருத்தமான உண்மையாகும்.
இந்த உண்மைகள் வெளியே தெரியக் கூடாது என்பதால் தான் ”சிஏஜி, டிபிசி சட்டத்தின் கீழ் அறநிலையத் துறை வராது” என்கிறதா எனத் தெரியவில்லை. முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை 2) கோ.ப.ஆனந்த் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தினார். அது என்னவென்றால், ”நாங்கள் இந்து சமய அற நிலையத் துறையின் சொத்துக்களின் மேலாண்மை என்ற தலைப்பில் தணிக்கை மேற்கொள்ள முயன்றோம். இது குறித்து நாங்கள் இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகளிடம் ஆவணங்கள் கோரிய போது, சிஏஜி தணிக்கை செய்ய அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. எந்த ஆவணங்களையும் வெளிப்படுத்த தயாரில்லாதவர்களாக இருந்தனர். இது குறித்து நாங்கள் தலைமை செயலாளரிடம் முறையிட்ட போது அவர், ”இந்து அற நிலையத் துறை கோவில்கள், சமய நிறுவனங்கள் சிஏஜி மற்றும் டிபிசி சட்டத்தின் கீழ் வராது. ஆகவே, நாங்கள் உடன்படமாட்டோம் என தமிழ்நாடு அரசு மறுக்கிறது” எனக் கூறியுள்ளார்.
இது குறித்து திருமலைக் கொழுந்துபுரம் பிராமண மஹாஜனத்தின்(Kadayanallur Braamana Mahaajnam Manippa Kattalai) டிரஸ்டியும், ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான எஸ்.அரிகரனிடம் (75) பேசிய போது, “கோவில் சொத்துக்களை மீட்கக் கோரி பல ஆண்டுகளாக நான் நீதிமன்றப்படிகளில் ஏறி, இறங்கி வருகிறேன். காவல்துறையில் பல முறை புகார் மனுக்களை ஆதாரத்துடன் அளித்துள்ளேன். அந்த வகையில் அன்றைய காவல்துறை தலைமை இயக்குநர் லத்திகாசரண், கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் உமா மகேஷ்வரி ஆகியோர் நான் தந்த ஆவணங்கள்படி தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்து அரசாங்கத்திடம் அளித்துள்ளனர்.
அதன் சாராம்சம் என்னவென்றால், திருநெல்வேக்லி மாவட்டத்தில் மட்டுமே சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை இந்து சமய அற நிலையத் துறையிடம் இருந்து செல்வாக்கான 5 பேர் அபகரித்து முகவர்களை வைத்து போலி பட்டா, சிட்டாக்களை உருவாக்கி, அந்த போலி ஆவணங்கள் மூலமாக கணிசமான நிலங்களை விற்று விட்டனர். இந்த வகையில் எங்கள் திருமலைகொழுந்துபுரம் பிராமண மகாஜன அறக்கட்டளைக்கு அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தால் வழங்கட்ட கோவில் சொத்துக்கள் பலவற்றை எங்கள் நெருங்கிய உறவினர்களான தினமலர் குழுமத்தாரே அபகரித்துள்ளது தான் என்னை அடங்கமாட்டா ஆற்றாமையில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தினமலர் குழுமத்துடன் பாரம்பரிய தொழில் நிறுவனமான டிவிஎஸ், சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாவடுதுறை ஆதினம் ஆகியவை தான் இந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் கோவில் நிலங்களை அபகரித்தவர்கள்.
இது எப்படி நிகழ்ந்தென்றால், திருநெல்வேலியில் வைகை சுப்பிரமணிய தம்பிரான் அவர்கள் கண்காணிப்பில் இருந்த ஆலய சொத்துக்களை எங்கள் திருமலைக் கொழுந்து மகாஜன அறக்கட்டளைக்குரிய இடங்களையும் நாங்கள் பராமரிக்கிறோம் என கேட்டு வாங்கி, தினமலர் ராமசுப்பையரும், ஏ.சிவசைலமும், ராம்கோ ராமசாமி ராஜாவும், டிவிஎஸ் அய்யங்காரும், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகளும் அபகரித்துள்ளனர். இதை நான் நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக தெரிவித்துள்ளேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஏறாத நீதிமன்றம் இல்லை. காவல் துறையிலும், அற நிலையத் துறையிலும் பேசாத அதிகாரி இல்லை.
இதில் என் நெருங்கிய உறவினர்களான தினமலர் குழுமம் மட்டுமே 70,000 ஏக்கர் நிலங்களை அபகரித்து முகவர்களை வைத்து விற்றுள்ளனர். தற்போது அவர்கள் வசம் சுமார் 200 ஏக்கர் நிலங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விற்றுவிட்டது தினமலர் குழுமம். இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை எல்லாம் போட்டு விசாரணைகள் நடந்து நீதிமன்றமே ஆணையிட்டும் கூட எந்த ஆட்சியாளர்களும் தினமலர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. காரகுறிச்சியில் தினமலர் குடும்பத்தினர் வைத்திருக்கும் சொகுசு பண்ணை 140 ஏக்கர் நிலம் என்பது மூன்று கோவில்களுக்கு பாத்தியப்பட்டதாகும்.
அம்பா சமுத்திரத்தில் சிவசைலம் வசம் உள்ள ஜவுளி மில் என்பது கோவில் சொத்து தான். இந்த சிவ சைலத்திடம் வேலைக்கு சேர்ந்து அவரிடம் ஆட்டையை போட்டு நிலத்தை அபகரித்துக் கொண்டவர் இந்தியா சிமெண்ட் சீனிவாசனின் அப்பா நாராயணசாமியாகும். மதுரை ரயில்வே ஸ்டேசன் எதிரில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட மங்கம்மா சத்திரத்தை டிவிஎஸ் குழுமம் ஆட்டையை போட்டதை இன்று வரை யாராலும் மீட்க முடியவில்லை. அற நிலையத் துறை ஆணையராக முரளிதரன் இருந்த போது அவர் நேர்மையாக சில நடவடிக்கை எடுத்ததும், அவரை தூக்கிவிட்டு குமரகுருபனை போட்டு கண்ட்ரோலர் ஆப் அத்தாரிட்டி ஆக்கினார்கள். அவருக்கு ரூ.250 கோடிகளைத் தந்து பெரும்புள்ளிகள் சமாளித்து விட்டனர். இதை நான் பலமுறை எழுதியும், பேசியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அறநிலையத் துறை கட்டடங்கள் மற்றும் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் பெரிய மனிதர்களிடம் இவர்களால் வாடகை கூட வசூலிக்க முடிவதில்லை. அப்புறம் எதற்கு அரசாங்கம், அதிகாரிகள்? அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம்? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, இந்த பெரும் புள்ளிகளை நெருங்கவே முடியாத நிலையே தொடர்கிறது. என்னைப் போன்ற சாமானியனால் புகார்கள் மட்டுமே தர முடியும் என்றார், 75 வயது பெரியவர் எஸ்.அரிகரன்.