மகா பெரியவா என்கிற பெரிய சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரல் என்ற தொடரை பிள்ளையாரின் பெருமைகளைச் சொல்லித்தான் தொடங்குகிறார். பிள்ளையார் ஓம் என்கிற பிரணவ மந்திரத்தின் வடிவமாகவே இருக்கிறார் என்கிறார் சங்கராச்சாரி.
ஓம் என்பதே பிரணவ மந்திரம், அதில் இல்லாத அர்த்தங்களே இல்லை. அதை உச்சரிப்பதால் ஏராளமான நன்மைகள் கிட்டும் என்று ஒரு புரூடா கதையை விடுகிறது பார்ப்பனக் கூட்டம். ஆனால் ஓம் என்பதன் மூலத்தைப் பார்த்தால் அது ‘சோம்’ என்கிற ஆப்கனிய வார்த்தையிலிருந்து வருகிறது. ஆப்கானிய மொழியில் சோம் என்றால் கஞ்சாவைக் குறிக்கிறது. சோம பானம் என்று வேதங்களில் குறிப்பிடப்படுவது கஞ்சாச் செடிகளை பிழிந்து தயாரிக்கப்படுகிற போதை பானத்தையே என்கின்றனர் ஆய்வாளர்கள். வேதகால ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைந்த போது ஆரம்பத்தில் தங்கியிருந்தது சிந்து மற்றும் அதை ஒட்டிய ஆப்கனியப் பகுதிகள்தான். அதனால்தான் இன்றும் அங்கு கஞ்சாவை ‘சோம்’ என்று அழைப்பது தொடர்கிறது. இன்றும் உலக அளவில் கஞ்சா அதிகம் விளையும் பகுதியாக அதுவே உள்ளது.
கஞ்சாவிற்கும் ஓம் என்கிற சொல்லுக்கும் உள்ள உறவைக் குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார் பேராசிரியர் கருணானந்தன் அவர்கள். இந்த சோம மயக்கத்தை மத நடவடிக்கையாக மாற்றி விட்டனர் ஆரியர்கள். சோம பானத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும், அதனை எவ்வாறு சோமனாகிய கடவுளுக்கு படைக்க வேண்டும் என்பதைப்பற்றியெல்லாம் தங்களது வேத நூல்களுள் ஒன்றான சாமவேதத்தில் சொல்லி வைத்துள்ளனர்.
இந்த கஞ்சா பாரம்பரியத்தின் தொடர்ச்சிதான், சிவன் கஞ்சா புகைப்பவராக இருப்பதும், கஞ்சாவை சிவபாணம் என்று அழைக்கிற வழக்கமும். காசியிலுள்ள கஞ்சா குடிக்கும் சாமியார்களுக்கு மாபெரும் அங்கீகாரத்தை வழங்குகிறது இவர்களின் வைதீக மதம்.
இதன் அடையாளமாகத்தான் ஓம் என்கிற சொல்லையும் பயன் படுத்துகின்றனர். கஞ்சா புகைப்பவர்கள் இந்த ஓம் என்னும் சொல்லை முனகிக்கொண்டு இருப்பதையும் நம்மால் காணமுடிகிறது. ஓம் என்னும் எழுத்து பிள்ளையாரின் முகத்தில், அதாவது யானையின் முக வடிவத்தில் இருப்பதால் பிள்ளையாரே இந்த பிரணவ மந்திரத்தின் வடிவானவர் என்கிறார் பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரர்.
‘ஓ’ என்கிற எழுத்தை வேண்டுமானால் யானையின் முகத்தோடு ஒப்பிடலாம். ‘ம்’அய் எங்கே கொண்டுபோய் ஒட்டுவது? தமிழிலாவது ஓ கொஞ்சம் ஒத்துப்போகிறது இந்தியா முழுவதும் இந்த கணபதி வழிபாடு பல்வேறு இடங்களில் இருக்கத்தானே செய்கிறது. அந்த வட்டார மொழிகளில் உள்ள ஓம் என்ற எழுத்துக்கள் எல்லாம் யானையின் முகத்தோடு பொருந்திப்போகுமா..? இதையெல்லாம் நாம் கேட்கக் கூடாது.
ஓம் என்ற எழுத்தோடு யானையைப் பொருத்த வேண்டு மென்று நினைத்தோம் அதனால் பிரணவத்தின் வடிவமே யானை, அதாவது பிள்ளையார் என்று உருட்டிவிட்டோம். தத்துவம் சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது..! என்றுதான் நம் வாயை மூடும் பார்ப்பனக் கூட்டம்.
தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பிள்ளையார் கோவில்கள் உள்ளதாகவும், கூரை கூட இல்லாமல் ஆலமரத்து அடியில் கூட பிள்ளையார் இருப்பதாகவும் புளகாங்கிதம் அடைகிறார் சங்கராச்சாரி. உண்மையில் பிள்ளையார் என்கிற யானை வழிபாடு ஸநாதனவாதிகளுக்குச் சொந்தமானதல்ல. அது ஒரு பவுத்த மரபு. யானையை புனித விலங்காகப் போற்றுவது பவுத்தப் பின்னணி கொண்டது.
புத்தரின் தாயாகிய மாயா தேவி அவரை கருவுற்றிருந்த காலத்தில் வெள்ளை யானையை கனவில் கண்டாராம். அதனால் யானை புத்தரின் வடிவமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் பவுத்தத்தில், யானை புத்தரின் ஞானத்தையும், தர்மத்தைப் பரப்புவதற்கான பலத்தையும் குறிக்கிறது. தென் ஆசியாவில் உள்ள பல பவுத்த கோவில்களில் யானையின் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை புத்தரின் வாழ்க்கை சம்பவங்களை அல்லது பவுத்தக் கதைகளை சித்தரிக்கின்றன.
இந்தியாவில் பவுத்தம் அழித்தொழிக்கப்பட்ட பின்னரும் கூட மக்களிடம் இந்த யானை வழிபாடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதை மாற்ற முடியாத பார்ப்பனக் கூட்டம் யானையை பிள்ளையாராக்கி அதற்கு ஒரு புராணக் கதையைச் சொல்லி சிவனின் குடும்பத்திற்குள் இணைத்து விட்டனர்.
உண்மையில் தமிழ் மரபில் சங்க இலக்கியங்களில் இந்த யானை வழிபாட்டை நம்மால் காணமுடிவதில்லை. கிபி 642இல் வாதாபி போரில் பல்லவர்கள் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிக்கேசியை வென்றனர். அப்போது அங்கிருந்து எடுத்துவரப்பட்டது தான் முதல் வினாயகர் சிலை. இச் சிலையை நரசிம்ம பல்லவனின் படைத் தளபதியான பரஞ்சோதி (சிறுதொண்ட நாயனார் என பின்னர் அழைக்கப்பட்டவர்) என்பவர் எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதனால்தான் வாதாபி கணபதி என்கிற தோத்திரப்பாடலை இப்போதும் நம்மால் கேட்க முடிகிறது.
தோராயமாக 1400 ஆண்டுகள் முன்னர் தமிழர்களுக்கு அறிமுகமான இந்த கணபதி வழிபாட்டை, அதற்கும் தொன்மையான முருகனோடு முடிச்சிப் போட்டு முருகனை இளையவர் என்றும், கணபதியை அண்ணன் என்றும் கதை கட்டிவிட்டனர் பார்ப்பனர்கள். இந்த உறவு முறை எல்லாம் தமிழ்நாட்டோடு மட்டும்தான். தமிழ்நாட்டைத் தாண்டினால் சிவன் குடும்பத்தில் முருகனுக்கு இடமில்லை. திருவிளையாடற் புராணத்தில் கணபதியால் ஏமாந்தது முருகன் மட்டுமல்ல, தமிழர்களும்தான்.