பேராசிரியரும் மேனாள் பனாரஸ் பல்கலைக் கழக துணை வேந்தருமான ஜி.சி.திரிபாடி தைனிக் ஜாகரன் என்னும் ஹிந்தி இதழில் பேட்டி அளித்திருந்தார். அதில் “நான் அரசியல் நெருக்கடி மற்றும் அழுத்தத்தின் காரணமாக தகுதியற்றவர்களை பேராசியர் பதவிகளுக்கு நியமித்தேன்” என்று கூறினார். இவரது பேட்டி தைனிக் ஜாகரன் ஹிந்தி நாளிதழில் வெளிவந்தது. அதன் தமிழாக்கம்:
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் பதவி விலகும் நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.சி. திரிபாதி கூறும்போது நான் பதவி ஓய்வு பெறுகிறேன். இந்த நேரத்தில் நான் எனது மனதின் பாரத்தை இறக்கி வைப்பதில் நிம்மதி அடைகிறேன், காரணம் காலம் முழுவதும் ஒரு பாரத்தைச் சுமப்பது நல்லதல்ல.
இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எதிகாலத்தில் ஒப்பற்ற இந்தியக்குடிமகனாக வரவேண்டும் அவர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறவேண்டும் என்ற பேராவா எனது மனதில் மட்டுமல்ல இப்பல்கலைக்கழகத்தின் அனைத்து பேராசிரியர்களின் மனதிலும் இருக்கிறது.
ஆனால், அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ, எனது எண்ணம் நிறைவேறுமோ என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது. காரணம், நான் தகுதியற்றவர்களை பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக, இதர கல்வி போதிக்கும் பொறுப்புகளிலும் நியமித்தேன்.
காரணம் அரசியல் நெருக்கடி – எனக்கு ஆட்சியர்களிடமிருந்து ஒரு பட்டியல் வந்துவிடுகிறது. அந்தப் பட்டியலில் இருந்த அனைவருமே தகுதியற்றவர்களாக இருந்தார்கள். எனது மனசாட்சி மிகவும் நெருக்கடிக்கு ஆளானது. ஆனால், என்னிடம் வேறு வழியில்லை. இதை யாரிடம் முறையிட வேண்டுமோ அவர்களிடமிருந்தே பட்டியல் வருகிறது.
நான் அமர்ந்திருக்கும் பதவிக்கான விதிமுறைகளின்படி யாரிடம் சென்று முறையிட வேண்டுமோ அவர்களிடமும் சென்று முறையிட முடியாது.
ஆகையால் வேறு வழியின்றி தகுதியற்றவர்களைத் தேர்ந்தெடுத்தோம். உண்மையில் தொடர்பில்லாதவர்களை நியமித்தோம். எவரை நியமித்தோமோ, அவர்களை தகுதியுடையவர்கள் என்று மனசாட்சிக்கு விரோதமாக சொல்ல வேண்டியிருந்தது. “விதிமுறைகளின்படி, எங்களுக்கு 80 சதவீத இடங்களை நிரப்ப வேண்டும், அரசு தரப்பில் கொடுத்த நெருக்கடியால் 84 சதவீத நியமனங்களை செய்தோம்.
இங்கு மிகவும் தரமான கல்வி கொடுக்கப்படுவதான தன்னிகரற்ற வரலாறு உள்ளது. ஆனால் அந்த வரலாற்றின் மீது அழுத்தத்தின் பேரில் நான் நியமித்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழகம் நேரடியாக ஊதியம் தரும் இதர கல்விப் போதனையாளர்கள் அனைவராலும் கரும்புள்ளி ஏற்பட்டுவிடும். இதை சொல்வதில் நான் தயங்கவில்லை. இங்கிருந்து செல்லும் ஒவ்வொரு மாணவருக்கும் நான் இழைத்தது பெரும் துரோகம் ஆகும்” என்று கூறினார்.