1947ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் 27 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. இப்போது அவற்றின் எண்ணிக்கை 700 ஆக பெருகியுள்ளது
இத்தனை ஆண்டுகளில் இந்திய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், துணைவேந்தர்களின் நியமனம் என்பது குறைந்துகொண்டே வருகிறது.
அசுதோஷ் முகர்ஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சி.ஆர்.ரெட்டி, லட்சுமணசுவாமி, கே.ஆர்.நாராயணன் போன்ற நேர்மையும் கண்ணியமும் மிக்க தகுதியான, நேர்மையானவர்களை தற்போதைய ஒன்றிய அரசு விரும்புவதில்லை.
துணைவேந்தர்களுக்கான தேர்வுக் குழுவில், வலதுசாரி அமைப்பினருக்கு ஆதரவானவர்களும் ஹிந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களுமே நிரம்பி உள்ளதால் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் போதே அவர்களின் திறமையைக் கவனத்தில் எடுக்காமல் அவர்களது அரசியல் நிலைப்பாடு என்ன என்று பார்த்து பார்ப்பனரா என்பதை முதல் தகுதியாக்கி அடுத்து அவர் எந்த இயக்கத்திற்காக தனது செயல்பாடுகளை நிலை நிறுத்துகிறார் என்பதும் இங்கு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
துணை வேந்தர்களின் நியமனம் ஹிந்துத்துவ ஆதரவு அரசியல் நலன்களை நிறைவேற்றவே செய்யப்படுகிறது என்று கூறினால் தவறாகாது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தனக்கு மிகவும் வேண்டப்பட்ட அல்லது நெருக்கமான ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் தனக்கு விசுவாசமாக இருந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கும் பதவிகளைக் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய பல்கலைக்கழகங்களில். இது சமீபத்தில் தொடர் கதையாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு லெப்டினென்ட் ஜெனரல் ஜமீருத்தீன் ஷா அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் செய்ததுதான் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. அப்பல்கலைக்கழகத்தையே ராணுவ முகாம் போல் மாற்றிவிட்டார். அவருக்கு அடுத்த இடத்தில் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஒருவரை நியமித்தார். பதிவாளரை நிர்வாக பதவிக்கு மாற்றிவிட்டு ராணுவத்தில் கேப்டனாக இருந்தவரை பதிவாளராக நியமித்தார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தொடக்க ஆண்டுகளில் இரண்டு தூதரக அதிகாரிகளான ஜி.பார்த்தசாரதி மற்றும் கே.ஆர்.நாராயணனைத் தவிர, இதுவரை கல்வியாளர்களே துணை வேந்தர்கள் பதவிகளை வகித்து வந்தனர். துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் ஆணையம் மற்றும் யஷ்பால் ஆணையம் இரண்டின் பரிந்துரை இல்லாமல் துணைவேந்தர் பதவிக்கு எந்த ஒரு பல்கலைக்கழகமும் தன்னிச்சையாக தங்களின் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாது.
இந்த இரண்டு ஆணையங்களின் ஆலோசனையின் பேரில் தேசிய உயர் கல்வி ஆணையம் (என்சிஏசிஇஆர்) தங்களின் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் காலிப் பட்டியலை வெளியிடும். அதில் மேலே குறிப்பிட்ட ஆணையம் 5 நபர்களின் பெயர்களை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்பும். அந்த அய்ந்து பெயர்களில் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்கும் கடுமையான நிர்ப்பந்தமும் சுதந்திரமற்ற சூழலும் ஒன்றிய அரசு வந்த பிறகு அமைந்துவிட்டது.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பிரதீப் நாராயணன் கோஷ் இந்த நடைமுறைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். “நாட்டில் உயர்கல்விக்காக சுமார் 700 நிறுவனங்கள் உள்ளன. இதற்காக துணைவேந்தர் பதவிக்கு பல தகுதியான நபர்கள் இருந்தும் அவர்களால் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பிக்கும் முன்னரே அவர்கள் தடுக்கப்படுகின்றனர். அப்படியே விண்ணப்பித்தாலும் அந்த விண்ணப்பங்கள் குப்பையில் சென்று சேரும்.
சுயாட்சி பற்றிய கேள்வி
ஒன்றிய அரசு மாநில அரசுகளின் சுதந்திரத்திலும் தலையீடு செய்கிறது. குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வேந்தர்களாக உள்ள ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளின் துணைவேந்தர் விண்ணப்பங்களில் தலையீடு செய்கிறது.
மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இதற்காக தனித் தேர்வு நடைபெறுகிறது. அங்கு அரசு எக்காரணத்திலும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் தலையிட முடியது அந்த அளவிற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளன.
ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் கூட, துணை வேந்தர்களை பல்கலைக்கழக கவுன்சில் தேர்ந்தெடுக்கின்றது. அரசு பிரதிநிதிகளின் தலையீடு அங்கு இருக்காது.
ஆக்ஸ்போர்டில், துணைவேந்தர்கள் பல்கலைக் கழகத்தின் உள்ளேயிருந்து தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு பாரம்பரியமாக இருந்தது. 2004ஆம் ஆண்டில், ஜான் வுட் ஆக்ஸ்போர்டிற்கு வெளியேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வேந்தர் ஆனார்.
டில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மேனாள் தலைவர் எஸ்.எஸ்.ராதி கூறுகையில், “துணைவேந்தர் பதவியில் அரசியலோடு மத அமைப்புகளின் செயல் பாடுகளைக் முதன்மையாக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே தகுதியானதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கே வராமல் பெயரை மட்டுமே அனுப்பி அவர்களது பெயர்களைப் பதிவேட்டில் சேர்த்து அவர்களுக்கு பட்டங்கள் வழங்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது.
பொறியியல் தொடர்பாக துணைவேந்தர் அலுவலகம் மற்றும் பதிவாளர் அலுவலகம் இணைந்து போலிப் பட்டங்களை வழங்குகின்றனர். குறிப்பாக பல்கலைக்கழகத்தின் நிதி முறைகேடுகளை பெரும்பாலான துணைவேந்தர்கள் கண்டுகொள்வதே இல்லை. அதனை விசாரிக்கவே அஞ்சுகிறார்கள்.
நியமனங்கள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் மோசடி:
கல்லூரிகளில் நியமனம் போன்றவை துணை வேந்தர்களின் அலுவலகத்தில் இருந்தே தொடங்குகிறது. தாரளமாக கிளைகளைத் துவங்க துணைவேந்தர்கள் தயங்குவதில்லை. இதன் மூலம் பெரும் நிதிமுறைகேடுகள் நடந்துவருகிறது. இது தொடர்பாக தமிழ்நாட்டின் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளார் மீது பல்வேறு நிதிமுறைகேடு புகார்களை அந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்களே கொடுத்துள்ளனர். ஆனால், அவர் மீது குற்றச்சாட்டின் நிழல்கூட படாமல் அவரை வழியனுப்பினார்.
குற்றமிழைத்தவர்கள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மாஜி பதிவாளர் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி அளித்து அனைவரையும் குற்றமிழைத்தவர்கள் என அரசாணை 10.08.2024 அன்று வெளியானது. 29.05.2023 அன்று ஹிந்துஸ்தான் ஹிந்தி நாளேட்டில் வந்த ஒரு செய்தி அரியானா மத்தியப் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு துணைவேந்தர் பேராசிரியர்களுக்கு பதவி வழங்கியதாக செய்தி வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகம் தொடர்பான பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் சான்றிதழ்களைக் கூடவா சரிபார்க்காமல் பதவியில் நியமிப்பார்களா?
அதே பல்கலைக்கழகத்தில் 20.04.2023 அன்று நிதி நிலைக்குழு தலைவர் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அதாவது அனைத்து துறைகளிலும் பதவி உயர்விற்கும் புதிய பேராசிரியர் பணிநியமணங்களுக்கும் பெருமளவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு நியமனங்கள் தாராளமாக நடக்கிறது. இவ்வாறு பெறப்பட்ட பணத்தில் அரசியல் வாதிகளுக்கும் பங்கு போகிறது. இது தொடர்பாக சிபிஅய் விசாரணை செய்யவேண்டும் என்று புகார் தெரிவித்தார். பஞ்சாப் கேசரி நாளேடும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், நடந்தது எனவென்றால் புகார் கூறிய பல்கலைக்கழக நிதி நிலைக்குழு தலைவர் மோனிகா மாலிக் மீது மோசடி குற்றச்சாட்டு கூறி அவரை மிரட்டி வைத்துவிட்டனர்.
ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமர்வதற்கு முன்பு பல்கலைக்கழகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக கான்பூர் சந்திரசேகர் ஆஜாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நியமனங்களில் மோசடி செய்ததாகக் கூறி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
லூதியானாவின் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பல்கலைக்கழத்திற்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு போலிப்பத்திரம் மூலம் மாற்றிய தாக குற்றச்சாட்டு எழுந்த உடனேயே அவரது பதவி பறிபோனது.
அதேபோல, கொட்டாயத்தின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் ஒரு மேனாள் துணைவேந்தர் தனது வருமானத்திற்கும் அதிகமான சொத்து சேர்த்ததற்காக அவரது அனைத்து பணப்பலன்களும் நிறுத்தப்பட்டது. மேலும், இழப்பீடாக அவரது ஓய்வூதியத்தில் இருந்து ஈடு செய்ய மாநில ஆளுநரால் உத்தரவிடப்பட்டார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் கூறுகையில், இந்தியாவின் 171 அரசு பல்கலைக்கழகங்களில் மூன்றில் ஒரு பங்கு துணை வேந்தர்களுக்கு முனைவர் பட்டம் இல்லை. மற்றும் பல துணைவேந்தர்களுக்கு தகுதியான கல்வி தகுதி இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்கள் குறிப்பாக ஒன்றிய அரசின் கீழ் வரும் நிறுவனங்களின் நிலை மிகவும் அபாயகரமானதாக உள்ளது. இதிலிருந்து கல்வி கற்று வெளிவரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை. தற்போது பல்கலைக்கழக் உயர்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் பலரையும் நியமிக்கும் அதிகாரம் “கல்வி மாபியா” என்ற கார்ப்பரேட் களின் கைகளில் உள்ளது.