குன்னூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்..!
குன்னூர், டிச. 13- 8.12.2024 அன்று குன்னூரில் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் முனைவர் திருநாவுக்கரசு அவர்கள் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ஜீவா வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வாசு திராவிடர் கழக மருத்துவ அணி அமைப்பாளர் கவுதமன், மாநில அமைப்பாளர்கள் தரும.வீரமணி, குப்புசாமி, மாவட்ட செயலாளர் நாகேந்திரன், பொதுக்குழு உறுப்பி னர் கருணாகரன், ராவணன், முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடமை
நிகழ்வின் தொடக்கமாக பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் முனைவர்.திருநாவுக்கரசு பேசுகையில் தான் எவ்வாறு திராவிட இயக்கத்திற்கு வந்தேன் என்றும் அரசு வேலைக்கு நேர்முகத் தேர்விற்கு கலந்து கொள்ளும் பொழுது கூட கடவுள் மீது நம்பிக்கையோ வழிபாடோ இல்லாமல் சென்று வெற்றி பெற்று தற்பொழுது அரசு ஊழியராக உள்ளேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொண்டார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ஜீவா பேசுகையில் பெரியாரின் கொள்கைகள் தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதை நன்கு உணர முடிகிறது என்றும் அவர்களை பகுத்தறிவாளர் கழகம் பக்கம் கொண்டு வந்து சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று கூறினார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வாசு பேசுகையில் குன்னூர் பகுதிகளில் பகுத்தறிவாளர் கழகத்தை கட்டமைக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்பதையும் பல்வேறு தோழர்கள் பகுத்தறிவு சிந்தனையுடன் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் அவர்களை பகுத்தறிவாளர் கழகத்தில் இணைக்கும் பணியை இனி வரும் காலங்களில் மேற்கொள்வதாகக் கூறினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தரும.வீரமணி பேசு கையில் பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினர்களை சேர்த்தல், பகுத்தறிவு கருத்துக்கள், இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு மாநாட்டிற்கான தகவல்களை இணைய வசதி மூலம் நண்பர்களுக்கு எவ்வாறு பரப்புதல், பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டுதல், அன்றாடம் தோழர்களை சந்தித்து பகுத்தறிவாளர்கள் கழகத்தில் இணைத்தல் போன்ற பணிகளை தான் எவ்வாறு மேற்கொள்கிறேன் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்.
நன்கொடை
திராவிடர் கழக மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் கவுதமன் பேசுகையில் தனது தந்தை காலம் தொட்டே திராவிட இயக்க சிந்தனைகளில் தொடர்ந்து பயணித்து வருவதாகவும், குன்னூர் பகுதிகளில் இருந்த பெரியார் உணர்வாளர்கள் பற்றியும் பகுத்தறிவு கொள்கைகளை பின்பற்றுவதால் வாழ்வில் எவ்வாறு முன்னேறலாம் என்றும் சிறப்பாக கூறினார். குற்றாலத்தில் தொடர்ந்து நடை பெறும் பெரியாரியல் பயிற்சி வகுப்பு அதற்கான தொடக்க செயல்பாடுகளை தான் எவ்வாறு மேற்கொண்டேன் என்பதையும் அதனைத் தொடர்ந்து இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதையும் எடுத்துக் கூறினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள் பேசுகையில் திருச்சியில் டிசம்பர் 28,29 இரண்டு நாட்கள் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு மாநாடு தற்பொழுது தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கான நோக்கத்தையும் அந்த மாநாட்டு செயல்பாடுகள் எவ்வாறு பகுத்தறிவாளக் கழகத்தின் சார்பில் செய்து வருகின்றனர் என்பதையும், தற்போது இந்த மாநாட்டில் நாம் அனைவரும் கலந்து கொள்வது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் விரிவாக எடுத்துக் கூறினார். இரு நாள் மாநாடுகளில் நடைபெறும் கருத்தரங்குகள், அறிவியல் சிந்தனைகள் சார்ந்த பதாகைகள், திராவிட இயக்க நூற்றாண்டின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி இடம் பெறுதல், போன்ற பல்வேறு செயல்பாடுகளை எடுத்துக் கூறினார். அதற்குப் பின் பேசிய தோழர்கள் குன்னூர் சார்பில் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் பெருமளவில் கலந்து கொண்டு பெருமை சேர்ப்போம் என்று உறுதி அளித்தனர்.
இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வாசு நன்றியுரை ஆற்றினார்.