புதுடில்லி, டிச.13 தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாடு மக்களை வஞ்சித்து வருவதாக மக்களவையில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார்.
பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024இன் மீது நாடாளுமன்றத் தில் நேற்று (12.12.2024) நடைபெற்ற விவாதத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நிதி வழங்க மறுப்பு
காலநிலை மாற்றத்தால் கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு முறையான நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டி வருகிறது. குறிப்பாக, மிக்ஜாம். பெஞ்சல் புயல் பாதிப்புகளுக்காக இதுவரையில் ஒன்றிய அரசு சார்பில் எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை.
மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக வழங்கப்பட்ட தொகையைத் தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் துயர் தீர்க்கும் வகையில் செயல்படாமல் வஞ்சித்து வரும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு கோரியுள்ள புயல் பாதிப்புகளுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தொடர்ந்து எல்லா விதங்களிலும் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டு இருக்கக்கூடிய காரணத்தினால், மக்களைப் பற்றிக் கவலைப்படக்கூடிய, தொடர்ந்து நல்லாட்சி செய்து கொண்டு இருக்கின்ற காரணத்தினாலேயே, நாங்கள் மிகப் பெரிய அளவில் தொடர்ந்து பாதிக்கப் பட்டுக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல் வஞ்சிக்கப்படுகிறோம். நிதி தர மறுக்கும் ஒன்றிய அரசுக்கு தக்க பாடம் கற்பிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாடு அருகில் உள்ள கேரள மாநிலத்திலும் இதே பிரச்சனை தான் என குறிப்பிட்டார்.
துரை வைகோ
மக்களவை உறுப்பினர் துரை வைகோ பேசுகையில், ‘‘பேரிடர் நிவாரண நிதியை வழங்குவதில் ஒன்றிய அரசு குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களைப் புறக்கணிப்பதும் மற்றும் பாகுபாடு காட்டும் மோசமான நடைமுறையை பின்பற்றி வருகிறது. பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதாவின் உள்ளடக்கத்தை பார்க்கும் போது, மாநிலங்களுக்கு பேரிடர் காலத்தில் நிதி உதவியை நிர்ணயிக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய உயர் மட்டக் குழுவில் மாநிலங்களின் முதலமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் என பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இல்லை. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு அவசரமாக ரூ.6675 கோடி நிதியுதவி தேவைப்படுகிறது. அதை ஒன்றிய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்’’ என்றார்.